சித்திரை சிறப்பு | சித்திரைத் தேரும் தேரடி வீதிகளும்

சித்திரை சிறப்பு | சித்திரைத் தேரும் தேரடி வீதிகளும்
Updated on
2 min read

தமிழ்நாட்டில் பல திருக்கோயில்களில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதில், முத்தாய்ப்பாக நடைபெறும் தேர்த் திருவிழாக்கள் பரவசத்தையும் கொண்டாட்டத்தையும் ஒருசேரக் கொடுக்கக்கூடியவை.

தமிழ்நாட்டில் மாசி, பங்குனியிலும் பல திருக்கோயில்களில் தேரோட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், வருடப் பிறப்பு மாதமாகக் கொண்டாடப்படும் சித்திரையில்தான் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோயில்கள் தேர்த் திருவிழாக்களைக் காண்கின்றன. அது மட்டுமல்ல, சித்திரை மாதத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும். இந்தக் காலகட்டம் மாரியம்மனுக்கு உகந்ததாகக் கருதப்படுவதால், மாரியம்மன் கோயில்கள் அனைத்தும் விழாக் கோலம் காண்கின்றன.

நாட்டுப்புறத் தெய்வங்கள், சிறுதெய்வ வழிபாடுகளும் இந்த மாதத்தில்தான் அதிகமாக நடைபெறுகின்றன. அதனால்தான் சித்திரை மாதம் தொடங்கிவிட்டாலே சிறிய கோயில்கள், பெரிய கோயில்கள் என்று பேதமில்லாமல் தேர்த் திருவிழாக்களும் கரக உற்சவ விழாக்களும் அமர்க்களமாகத் தொடங்கிவிடுகின்றன.

தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தில் ஏராளமான கோயில்களில் தேர்த் திருவிழாக்கள் நடைபெற்றாலும், மதுரை சித்திரைத் திருவிழா முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தேர்த் திருவிழாவுக்குத் தனி இடமுண்டு. இதேபோல தஞ்சாவூர் பெரிய கோயில், ரங்கம் அரங்கநாதர் கோயில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில், திருத்தணி சுப்ரமணியர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் தேர்த் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன.

பொதுவாக கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில்தான் தேரோட்டங்கள் நடைபெறும். இந்தத் தெருக்கள் மாட வீதிகள், ரத வீதிகள், சித்திரை வீதிகள், தேரடி வீதிகள் போன்ற பெயர்களிலேயே அழைக்கப்படுகின்றன. தேரோட்டம் நடைபெறும் நாளன்று இந்த வீதிகளில் உற்சாகம் கொப்பளிக்க பொதுமக்கள் கூடுகிறார்கள். எங்கு பார்த்தாலும் அன்னதானம். திரும்பும் இடமெல்லாம் நீர்மோர், பானகம், குளிர்பானங்கள் விநியோகம். ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அன்னதானத்தில் பங்கேற்பு எனச் சமதர்ம விழாவாகவே சித்திரைத் தேரோட்டங்கள் மாறிவிடுகின்றன.

ஒரு பக்கம் பக்திப் பரவசத்தோடு தேர்த் திருவிழாக்கள் நடைபெற்றாலும், அதையொட்டி அமைக்கப்படும் கடை வீதிகள்தான் சித்திரைத் தேரோட்டத்தை இன்னும் கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்துச் செல்கின்றன. தேரோட்டம் நடைபெறும் இடத்திலும், அந்த ஊரிலும் பொதுவான இடத்தில் வரிசையாகக் கடைகள், வாங்கி மகிழ விதவிதமான பொருள்கள், குழந்தைகளைக் குதூகலப்படுத்த விளையாட்டுப் பொருள்கள், விளையாடி மகிழ ராட்டினங்கள், காணக் கிடைக்காத பொருள்களின் விற்பனை என ஊரே அமர்க்களப்படும்.

தேரோட்டங்கள் என்றால் இனிப்புக் கடைகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஓரிடத்திலேயே பல ஊர் பலகாரங்கள் விற்பனையாவதைத் தேரோட்டத்தில் காணலாம். அதுவும் பாரம்பரியப் பலகாரங்களையும், பால்ய வயதில் ருசி பார்த்த மிட்டாய்களையும் இதுபோன்ற தேரோட்டக் காலத்தில்தான் பார்க்கவும் முடியும்; வாங்கி ருசிக்கவும் முடியும். இப்படிக் கோயிலை மையப்படுத்தித் நடைபெற்றாலும், அதை ஓர் ஊர்த் திருவிழாவாக மன நிறைவு கொள்ள வைக்கின்றன தேரோட்டங்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in