சித்திரை சிறப்பு | அன்று சித்திரையில் ஒருநாள்...

சித்திரை சிறப்பு | அன்று சித்திரையில் ஒருநாள்...
Updated on
2 min read

சித்திரையில் விடுமுறை, உறவினர்களின் வருகை, திருவிழா என்று வீடு எப்போதும் கலகலத்துக்கொண்டிருக்கும். ஒரு மின்விசிறியின் கீழ் ஒன்பது பேர் தூங்கும்போது, வியர்வையின் கசகசப்பில் விடுமுறையிலும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவோம்.

பால் வருவதற்கு நேரம் ஆகும் என்பதால் பெரியவர்கள் நீராகாரம் குடிப்பார்கள். பக்கத்து வீட்டுப் பாட்டி பருத்திப்பால் தயார் என்று குரல் கொடுப்பார். உடனே யாராவது சென்று ஒரு தூக்கு நிறைய பருத்திப்பால் வாங்கி வருவோம். சுக்கும் வெல்லமும் சேர்த்த சூடான பருத்திப்பால் அட்டகாசமாக இருக்கும்.

அதற்குள் சுடச்சுட வடகம் மாவு தயாராக இருக்கும். ஆளுக்கு ஒரு கிண்ணத்தில் மாவை ஊற்றி ஸ்பூன் போட்டுக் கொடுத்துத் துணியில் சின்ன சின்ன வட்டங்களாக ஊற்றச் சொல்வார்கள். வேலை செய்த களைப்பில் இருக்கும்போது, பனை ஓலையைத் தொப்பென்று கீழே போட்டுவிட்டு, பெரிய மண்பானையை இறக்கிவைப்பார் வீரய்யன் தாத்தா. பனை ஓலையை மடக்கிக் கட்டி, வரிசையாக ஒவ்வொருவருக்கும் பதநீரை ஊற்ற... மட்டையில் குடிக்கும் பதநீர் கூடுதல் சுவையுடன் இருக்கும்!

சித்திரை வெயிலுக்கு ஏற்ற மாதிரி வெந்தயக்களி, உளுந்தங்களி, வெந்தயக் கஞ்சி, பாசிப்பயறு கஞ்சி, பதநீர்ப் பொங்கல் என்று ஏதாவது ஒன்று எளிய காலை உணவாக இருக்கும். ஏற்கெனவே வயிறு நிறைந்திருப்பதால், உணவு அவ்வளவாக இறங்காது.

பதினோரு மணிக்குத் நீர்ச் சத்து நிறைந்த பிஞ்சு வெள்ளரிக்காய்களைக் கொண்டு வருவார்கள். சில நேரம் வெள்ளரிப் பழமும் வரும். அரளி மஞ்சள் வண்ண வெள்ளரிப்பழம் வெடித்து, பளீரென்ற வெண்மை கண்களைக் கூசச் செய்யும். தோல்சீவி, துண்டுகளாக்கிக் கொடுப்பார்கள். சிறியவர்கள் சர்க்கரையைத் தொட்டுச் சாப்பிடுவார்கள்.

உச்சி வெயில் நேரத்தில் வண்டியில் நுங்கு வரும். 2, 3, 4 கண்களுடைய நுங்கைச் சீவிக் கொடுப்பார்கள். மட்டையுடன் இருக்கும் நுங்கு சாப்பிடச் சவாலாக இருந்தாலும் சுவாரசியமாக இருக்கும். காலியான நுங்கின் நடுவே குச்சியைச் சொருகி, வண்டி ஓட்டி சிறுவர்கள் விளையாடுவார்கள். நுங்கு வராத நாள் எலுமிச்சை நன்னாரி சர்பத், சப்ஜா விதைகளுடன் தாகம் தீர்க்கும்.

மாம்பழ சீசன் என்பதால் மதியச் சாப்பாட்டில் மாம்பழத் துண்டுகள் இடம்பெறும். மாலை 4 மணிக்கு, ‘கம்பெனி கொய்யா’ என்று தெருவில் சத்தம் கேட்டால் எல்லாரும் வாசலுக்கு ஓடிவருவார்கள். அந்தக் கொய்யாவின் சுவை அப்படி! சில நாள் சிறு ஈச்சம்பழத்தை வாங்கிக் கொடுப்பார்கள். கரிய ஊதா நிறத்தில் கோதுமை அளவில் இருக்கும் ஈச்சம்பழம் இனித்தாலும், சதைப்பகுதி குறைவாகவே இருக்கும் என்பதால் பலருக்குப் பிடிக்காது.

சத்துமாவுக் கஞ்சியோ காபியோ குடித்துவிட்டு இருள் எட்டிப் பார்க்கும் நேரம் வேர்க்கடலை, பட்டாணி, உப்புக்கடலை போன்ற எண்ணெயில் வறுக்காத தானியங் களைக் கொண்டுவருவார் வாணி அக்கா. கதை பேசிக்கொண்டோ பாட்டுக்குப் பாட்டு பாடிக்கொண்டோ அதைச் சாப்பிட்டு முடிப்போம்.

நாள் முழுவதும் சாப்பிட்டு, விளையாடி, அரட்டையடித்த களைப்பில் எட்டு மணிக்கே தூங்கச் சொல்லி கண்கள் கெஞ்சும். இருந்த இடத்திலேயே ஒவ்வொருவராகத் தூங்க ஆரம்பித்துவிடுவோம். நல்ல தூக்கத்தில் தட்டி எழுப்புவார்கள். அலறியடித்துக்கொண்டு எழுந்தால், ‘வளரும் குழந்தைகள் ‘வெறும்’ வயிற்றோடு படுக்கக் கூடாது’ என்பார்கள்! மதியம் பொங்கிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோற்றைப் போட்டு மாம்பழம், வடகம், வற்றலை வைத்துச் சாப்பிடச் சொல்லிக் கெஞ்சுவார்கள். முடியாது என்றால், ‘உருட்டிக் கொடுக்கிறேன்’ என்கிற அஸ்திரத்தை எய்து, எல்லாரையும் வழிக்குக் கொண்டுவந்துவிடுவார்கள்!

இப்படி நாள் முழுவதும் தின்றே கழித்தாலும் உடலுக்குக் கேடு விளைவிக்காத, ஆரோக்கியமான, வெயிலுக்கு ஏற்ற உணவோடு அன்றைய சித்திரை இருந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in