சித்திரை சிறப்பு | பதினெட்டாம் நாள் போருக்குக் காத்திருக்கும் திரௌபதி

சித்திரை சிறப்பு | பதினெட்டாம் நாள் போருக்குக் காத்திருக்கும் திரௌபதி
Updated on
3 min read

சித்திரை தொடங்கிவிட்டாலே வட தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் திரௌபதி அம்மன் திருவிழாவுக்கு நாள் குறித்துவிடுவார்கள். இந்த விழாவின் சிறப்பே மதிய வேளையில் கோயில் மண்டபத்தில் படிக்கப்படும் பாரதமும் அதைத் தொடர்ந்து ஊர்ப் பொதுவெளியில் இரவில் நடத்தப்படும் கட்டைக் கட்டிக்கூத்தும்தான். தொலைக்காட்சித் தொடர்களும் செல்போன் குறுங்காணொளிகளும் மக்களை ஆக்கிரமித்திருந்தாலும் விடிய விடிய நடைபெறும் கட்டைக்கூத்தைப் பார்க்கக் கணிசமானோர் திரண்டுவிடுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தை அடுத்த சிறுவஞ்சிபட்டு கிராமத்தைச் சேர்ந்த கூத்துக் கலைஞர் லோகநாதன். 40 ஆண்டுகளாகக் கட்டைக்கூத்து ஆடிவரும் இவருக்கு 55 வயது. பாரதக்கூத்து தவிர இரண்ய வதம், மயில் ராவணன், சுந்தர காண்டம், தக்கயாக புராணம், ரேணுகாதேவி சரித்திரம் போன்றவற்றையும் இவர்கள் ஆடிவருகிறார்கள். முந்தைய தலைமுறை வாத்தியார்கள் எழுதிவைத்ததைக் கற்றுக்கொண்டு வழிவழியாகப் பாடுகிறார்கள். “கூத்தாடி பார்த்தாடின்னுவாங்க. வாத்தியார் சொல்லித் தர்றதோடு அவங்கவங்க திறமையைச் சேர்த்து ஆட வேண்டியதுதான்” எனச் சிரிக்கிறார் லோகநாதன். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் கவி, விருத்தம், பாடல், வசனம் என ஏராளம் உண்டு. ஒரு கவி பாடுங்களேன் என்றால் சட்டென உச்சஸ்தாயியில் தொடங்குகிறார்.

அதிபல வீராதி வீரா

அமர்செய்ய வேண்டாம் இப்ப

எரியுதே எந்தன் தேகம்

தர்க்கத்தில் இதற்கென்ன செய்வேன் அய்யோ

சதிசெய்து என்னை நீங்கள்

சமர் புரிந்திடவே வேண்டாம்

அதிபரே உந்தன் ஊரும் பேரும்

அறிந்திட உரை செய்வீரே

என வில்வளைப்பில் சித்ராந்தகன் அர்ஜுனனிடம் பேசுவதைப் பாடினார் லோகநாதன்.

மூன்று இசைக் கலைஞர்கள் (பெட்டி, ஆர்மோனியம், முகவீணை), இரண்டு தாளக்காரர்கள் இவர்களோடு கூத்துக் கலைஞர்கள் பத்துப் பேர் என ஒரு நாள் கூத்துக்குக் குறைந்தது 15 பேர் தேவை. 18 நாள்கள் பாரதப் போரை மையமாக வைத்து நடத்தப்படும் பாரதக் கூத்தும் 18 நாள்கள் நடைபெறும். பதினெட்டாம் நாள் போர் முடிவில் துரியோதனன் படுகளத்துடன் கூத்து நிறைவுபெறும். தன் சபதம் நிறைவேறிய மகிழ்ச்சியில் கூந்தலை முடிவார் திரௌபதி. நான்கரை சுருதியில் பாட வேண்டும், இரவு முழுவதும் அடவு கட்டி ஆட வேண்டும் என்பதால், பெண்கள் இந்தக் கலையில் குறைவு. ஆண்களே ஸ்த்ரீபார்ட் வேடங்களில் நடிப்பார்கள்.

ஆந்திரத்தில் தமிழ் பாரதம்

கூத்து வாத்தியார் கைலாசம், ‘பெருங்கட்டூர் பொன்னுசாமி வாத்தியார் கட்டைக்கூத்து’ நாடகக் குழுவைச் சேர்ந்தவர். 67 வயதாகும் இவர் 50 வருடக் கூத்து அனுபவம் மிக்கவர். புரட்டாசி தொடங்கி தை மாதம் வரைக்கும் திருவிழா பெரிய அளவில் இருக்காது என்பதால், அந்த மாதங்களில் இவர்களுக்கு கூத்துகட்ட வாய்ப்புக் கிடைக்காது. காளி, துரியோதனன் போன்ற கோபமான முகங்களுக்கு அடர் சிவப்பு, கிருஷ்ணருக்கு நீலம், சாந்தமான முகங்களுக்கு இளஞ்சிவப்பு, தீய சக்திகளுக்குக் கறுப்பு எனக் கதாபாத்திரத்துக்கு ஏற்ப முகங்களுக்கு வண்ணம் பூசப்படுகிறது. கைலாசத்தைப் போன்ற அனுபவசாலிகள் 15 நிமிடங்களுக்குள் மேக் அப் போட்டு முடித்துவிடுகிறார்கள். புதியவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகும்!

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திரத்தில் வசித்த கைலாசம் அங்கிருக்கும் மக்களுக்குத் தமிழ்ப் பாடல்களைத் தெலுங்கில் எழுதி பாரதக் கூத்தைக் கற்றுத்தந்திருக்கிறார். “காலைல தெலுங்கில் பாரதம் படிப்பாங்க. ராவுல தெலுங்கு ஆளுங்க தமிழ்ல பாடி கூத்து கட்டுவாங்க” என்கிறார் கைலாசம்.

ஆடை, ஆபரணங்களை உடல் முழுவதும் கட்டிக்கொண்டு ஆடுவதாலேயே இது கட்டைக்கட்டிக் கூத்து என்கிறார்கள். முன்பு உடலில் 32 கட்டுகள் இருக்குமாம். இப்போது 20 சொச்சம் கட்டுகள் வரை இருப்பதாக கைலாசம் சொல்கிறார். இவருடைய தாத்தாவும் பெரியப்பாவும் கூத்து வாத்தியார்கள். இவர் 60 கூத்துக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார்.

கலைஞர்களுக்கு நன்றி செலுத்துவோம்

காஞ்சிபுரத்தை அடுத்த மேல்பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த ராமர், கூத்துக் கலையில் 35 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். தற்போது சிறுவஞ்சிபட்டு ‘ஞானமுருகன் தெருக்கூத்து’ குழுவுடன் இணைந்து செயல்பட்டுவருகிறார். இவருடைய தம்பி காமராஜ் மிருதங்கக் கலைஞர். பாரதக் கூத்தைப் பொறுத்தவரை நாடகக் கலைஞர்கள் அனைவரும் அனைத்து கதாபாத்திரங்களையும் அவர்களது வசனங்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாகவே மாறிவிடும் ராமர், தற்போது தருமர், கிருஷ்ணன், சகுனி போன்ற கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். ஸ்த்ரீபார்ட் வேடங்களில் நடிப்பதில்லை.

நெடுங்குடி கெடுக்க வல்லோன்

பலவித சூதும் வாதும்

பஞ்சமா பாதகங்கள் செய்யும்

பலபல பேரும் புகழும் பெற்ற

சகுனி வருகின்றேன்

என உக்கிரமான குரலில் தன்னை அறிமுகம் செய்துகொள்கையில் நம் கண்ணில் சட்டென ஓர் அச்சம் பரவுவது ராமரது நடிப்பின் வெற்றி. விவசாய நிலமும் வேறு வேலையும் இல்லாததால் கட்டைக்கூத்தின் மூலம் வரும் வருமானத்தை மட்டுமே இவர் நம்பியிருக்கிறார். “வருசத்துக்கு 150 நாள் ஆடக் கிடைச்சாலே ஒஸ்தி” என வெள்ளந்தியாகச் சிரிக்கிறார்.

கட்டைக்கூத்து கலைஞர்களுக்காக அரசு பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாலும் அனைவரும் எளிதில் பெறும் வகையில் அவை இருப்பதில்லை. கட்டைக்கூத்துக் கலைஞர்கள் அனைவரும் எளிய பின்னணி கொண்ட கிராமத்தினர். பலரும் மேல்நிலைக் கல்விகூட முடிக்காதவர்கள். இவர்கள் மத்தியில் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கி அனைவரும் நலத்திட்டங்களைப் பெறும்படிச் செய்வதுதான் அந்த வித்தகர்களுக்கு அரசு செலுத்தும் நன்றி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in