­சித்திரை சிறப்பு | காய்ச்சாலும் காய்ச்சது வுட்டாலும் வுட்டது

­சித்திரை சிறப்பு | காய்ச்சாலும் காய்ச்சது வுட்டாலும் வுட்டது
Updated on
3 min read

சித்திரை என்றாலே கொளுத்தும் வெயில்தான். சும்மா நாளையில் முந்திரிக்காட்டுப் பக்கம் போனாலே ஒரே வேச்சாரலா இருக்கும். நா வறட்டும். சித்திரை வைகாசியில் சொல்லவே தேவையில்லை. குடும்புக்குடும்பாகக் காய்த்திருக்கிற ஆவலில் உக்கிர வெயிலைப் பொருட்படுத்தாமல் கொட்டை பொறுக்கினாலும் குடிமுந்திரி நிழலில் கொட்டி பழம், காரக்காய்களைத் திறுவுகையில் உடம்பு சூடு பிடித்துக்கொள்ளும்.

சொம்பு சொம்பாகத் தண்ணீரை நெட்டினாலும் சொட்டுச் சொட்டாக ‘ஒண்ணுக்கு’ உயிரை எடுக்கும். கட்டை விரலுக்கு வைக்கோலை நனைத்துச் சுற்ற வேண்டியதுதான். உத்திமாக் குளத்திலோ, அய்யனார்கோயில் ஏரியிலோ உதிரப் பொட்டையாய்க் கிடக்கும் தண்ணீரில் ஓடி விழ வேண்டியதுதான். செமட்டைத் தண்ணீரில் ஆவாரந் தழையை ஒடித்துப் போட்டுத் தெளிய வைத்துக் குடிப்பதும் உண்டு. உடம்புச் சூட்டுக்கு நல்லது என பன்றி பிடித்துவந்து புள்ளையார்கோயில் பின்புறம் வெட்டிக் கூறு போடுவார்கள். சுண்டிய பழைய பன்னிக்கறிக் குழம்பில் சோற்றைப்போட்டுக் கிளறி ரா அடுப்பில் போட்டு வைத்த ‘தீச சோறு’ தின்பதற்கு அமிர்தமாக இருக்கும்.

தெற்குவெளி முழுவதும் மா, பலாதான். எந்த மரத்தில் பார்த்தாலும் அணில் கடித்த மாங்காய்கள் தென்படும். தேற முற்றிய பலாக்காய்கள் வெடித்திருக்கும். காயாகவே வெட்டி சுளை பறித்து ‘காய் சுளை’ ஆக்குவார்கள். வெயிலில் அலைந்ததிற்குக் காரம்சாரமாய்ப் ‘பிரட்டல் சுளை’களைத் தின்றுவிட்டுத் தண்ணீர் குடித்தால் வயிறு திம்மென்றிருக்கும்.

சித்திரைப் போர்

முந்திரிக்கொட்டைக் காசும் ஒரு காரணம்தான். ஊருக்கு ஊர் ‘வேண்டுதல் கூத்து’, ஏலம் எடுத்த முந்திரிக்காடு லாபத்தை எட்டியதற்கான ‘காட்டுக் கூத்து’ என சித்திரை மாதத்தில் ‘கட்டைக்கட்டிக் கூத்து’ எனும் தெருக்கூத்தின் குதூகலம் கூடுதலாக இருக்கும். திரௌபதை அம்மன் இருக்கிற ஊர்களில் ‘அக்கினி ’ மிதிப்பார்கள். சித்திரை மாதத் தெற்குவெளிப் புழுதியில் பொடி அள்ள அள்ள துள்ளத் துடிக்க ஓடி வருவதே எங்களுக்கு தீ மிதிப்புதான்.

‘சித்திரையில் மழைபெய்தால் கார்த்திகையில் பொடி சுடும்’ என்கிற பழமொழியுண்டு. கடும் கோடையான சித்திரையில் மழை பொழிவே இருக்காது. மீறி ஆலங்காய், அரசங்காய் விழுகிற மாதிரி கோடை மழையாகப் பெய்தாலும் காங்கையைக் கிளப்பிவிட்டு உடன் நின்றுவிடுவதுதான் இயல்பு. ஆனால், இயல்பிற்கு மாறாய் தொடர்ந்து அடியாதண்டமாக அடித்து ஏரி, குளம் ரொம்புகிற மாதிரி வெள்ளக்காடாகப் பெருமழை பெய்தால், அந்த வருடத்திய கார்த்திகை மாதத்தில் மழைக்குப் பதில் கடுமையான வெயிலடித்துக் கோடையைப் போன்று பொடி சுடும் என்பார்கள்.

‘எத்தரைப் போர் ஆனாலும் ஆகலாம் சித்திரைப் போர் ஆகாது’ என்பது நடுநாட்டுப் பழமொழிகளில் முக்கியமான ஒன்று. மெய்தான். இந்த மாதத்தில் குடும்பத்திலோ பக்கத்து வீட்டாரோடோ சண்டை என்றால் எளிதில் ஓயாது. மாறாக கோர்ட்டு, கேசு என்றுகூடப் போகும். அதாவது, மற்ற மாதங்களில் எல்லாம் களைவெட்டு, அறுப்பு, அடிப்பு என வேலைகள் ஓய்வு ஒழிசலில்லாமல் தொடர்ந்தபடியே இருக்கும். அசந்து ஒரு நிமிடம்கூடக் குந்த முடியாது. இந்த மாதிரி வேலை அரிபிரியாக இருக்கிற பொழுதுகளில், மாதங்களில் அண்டை வீட்டாருடன் சண்டை என்றால், அது அன்றைய நேரத்தோடு முடிந்துவிடும். குறிப்பாக ராத்திரியில் சண்டை என்றால் ‘பொழுது விடியிட்டும். ஒன்ன என்னா பண்றன்னு பாத்துக்க…’ என கருவம்கட்டி சவால் விடுபவர்கள்கூடத் தலைக்கோழி கூவியதும் கூவாததுமாக “கழுவாலடி ஈரம் காஞ்சிடும். நா மின்ன போயி களைய கொத்தறன். நீ கஞ்சித் தண்ணிய காய்ச்சி எடுத்துக்கிட்டு வா…” என்று ராத்திரி நடந்த வாக்குத்தத்தங்களை மறந்துவிட்டுக் கொல்லைப் பக்கம் ஓடுவார்கள். மனதில் கிடக்கிற சண்டை முகாந்திரமும் வேலை அலுப்பில் இறுக்கம் தளர்ந்து ‘பேசனவன் பெரிய மனுசானா இருந்தாப் போறான் போ…’ மாறிவிடும். பிறகு வாரம் பத்து நாள் இடைவெளியில் ‘எதுவாயில மாடு மேயிது. போயி ஓட்டுங்க…’ சத்தாசாடையாய்ப் பேச ஆரம்பித்து இயல்பிற்கு வந்துவிடுவார்கள்.

ஆனால், அறுவடை முடிந்து விவசாய வேலைகள் எதுவுமற்றிருக்கிற சித்திரை மாதத்தில் சண்டை என்றால் ஓயாது. ராத்திரி நடந்தது ஒரு பங்கு என்றால் விடிந்து வேலைவெட்டி எதுவுமில்லாம் வெறுமனே குந்திக் கிடக்கிறபோது ‘கோழி அங்க போச்சி ஆட்டுக்குட்டி இங்க வந்தது’ என்று சண்டை மறுகூர் பாய்ந்து முன்னிலும் மோசமாகி போலீசு, கேசு என்று போகும். இதனால்தான் ‘எத்தரைப் போர் ஆனாலும் ஆகலாம் சித்திரைப் போர் ஆகாது’ என்பது.

<strong>கண்மணி குணசேகரன்</strong>
கண்மணி குணசேகரன்

சித்திரைக் காலாவதி

இப்படி மகசூல் இல்லாமல் நிலங்கள் வெறுமனே கிடக்கிற இந்தச் சித்திரை மாதத் தைத்தான் நிலத்தை வைத்து போக்கியம், குத்தகை, வாரம், கடன் போன்றவற்றைத் தொடங்க, முடிக்கத் தேர்ந்தெடுப்பார்கள். இதை ‘சித்திரைக் காலாவதி’ என்பார்கள். அடுத்த மகசூல் வைக்க நெடுநாள் இருக்கும் பட்சத்தில் கணக்கு வழக்கு பார்க்க, தகுதியான பிறருக்கு விட என இந்தச் சித்திரைக் காலாவதி தோதாக இருக்கும். ‘எதிர்வரும் சித்திரை காலாவதியில் பணத்தைச் செலுத்தி நிலத்தை மீட்டுக்கொள்ள வேண்டியது.’- கடன் பத்திரத்தில் எழுதக்கூடிய வாசகம்.

‘சித்ரா பருவம்’ என்றொரு பேச்சாடலும் இருக்கிறது. முந்திரியில் பாரம்பரியமான நாட்டு மரங்கள் தற்போதைய ஒட்டு ரகக் கன்றுகளைப் போல ‘காய்ச்சாலும் காய்ச்சது... வுட்டாலும் வுட்டது’ என்கிற மாதிரி ஒரேயொரு தடவையாக அல்லாமல் முறையான மூன்று இடைவெளிகளில் பிஞ்சு பிடிக்கக்கூடியது. குறிப்பாகச் சித்திரை பௌர்ணமிப் பொழுதில் வைக்கும் பெருமளவிலான பிஞ்சுகள் நன்கு கொத்துக்கொத்தாகக் காய்ப்புப் பிடிக்கும். இப்படியான இந்தச் சித்திரை பௌர்ணமி பருவம்தான் ‘சித்ரா பருவம்’ ஆகியிருக்கிறது.

சித்திரை மாதம் வருகிற மாதிரி ஒரு விடுகதைப் பாடலும் உண்டு.

‘சித்திரை மாசத்திலே

கத்திரிக் கோடையிலே

நட்டது இளங்கரும்பு.

கரும்பு கரும்பிருக்க

இளங்கரும்பை மாடு மேய

வம்போடு வம்பு பேச

அன்பு வந்து நேர்கையிலே

வந்துதித்த என் மகனே...

அருமையுள்ள மருமகனே...

ஆராரோ… ஆரிரரோ…’

சமூகத்தில் எங்கோ அரிதினும் அரிதாய் நிகழ்கிற முரண் உறவுகளைப் பற்றி விடுகதைப் பாடலை இப்படிப் பொதுவெளியில் பகிரலாமா எனக் கேட்பது புரிகிறது. இப்படியும் நடுநாட்டுப் பகுதி மக்களிடையே பாடல் இருக்கிறதென ஆவணப்படுத்தவே இப்பாடல் எடுத்தாளப்படுகிறது.

- கண்மணி குணசேகரன்,
கட்டுரையாளர், எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in