உத்வேகம் பெறும் மகளிர் சுற்றுலா

உத்வேகம் பெறும் மகளிர் சுற்றுலா
Updated on
2 min read

இன்று பெண்களுக்கு என்று தனியாகச் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பெண்கள் சுற்றுலா செல்லும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன என்றெல்லாம் பத்திரிகைகள் கட்டுரைகளை வெளியிடும் அளவுக்கு நாளுக்கு நாள் பெண்கள் மட்டும் செல்லும் சுற்றுலாக்கள் பிரபலமாகி வருகின்றன.

கடமைகளைத் தூக்கிச் செல்லாமல், தனக்கே தனக்காகச் சில நாள்களைச் செலவழிப்பதுதான் இந்தச் சுற்றுலாவின் சிறப்பு. எந்த முடிவையும் பெண்களே எடுக்கலாம். விருப்பமானவற்றைச் செய்யலாம். மகள், மனைவி, அம்மா போன்ற உறவு நிலைகள் இன்றிச் சுயமாகப் பொழுதைச் செலவிடலாம். வயது, பொறுப்பு போன்றவற்றை மறந்து, சந்தோஷமாக இருக்கலாம்.

ஆரம்பத்தில் தனியாகச் சுற்றுலா செல்லும் ஆர்வம் உள்ள பெண்கள், சுற்றுலா நிறுவனம் வழி இணைந்து, பயணங்களை மேற்கொண்டார்கள். இன்றோ ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் இணைந்து சுற்றுலா செல்கிறார்கள். தோழிகள் இணைந்து சுற்றுலா செல்கிறார்கள். உறவினர்கள் சேர்ந்து சுற்றுலா செல்கிறார்கள்.

பெண்கள் மட்டும் செல்லும் சுற்றுலாவிலும் தனியாகச் செல்லும் சுற்றுலா, குழுவாகச் செல்லும் சுற்றுலா என இரண்டு வகைகள் உள்ளன. தனியாகச் செல்லும் சுற்றுலாக்களை வெகு சிலரே மேற்கொண்டு வருகின்றனர். பைக் சாகசப் பயணம், ஆராய்ச்சிக்கான பயணம், எழுதுவதற்காகச் செல்வது என ஏதோ ஒரு நோக்கத்துடன் தனியாகப் பயணிக்கிறார்கள். தனியாகச் செல்வதைவிட, குழுவாகச் செல்லும்போது பாதுகாப்பு அதிகம் என்பதால் குழுச் சுற்றுலாவையே பெரும்பாலும் பெண்கள் விரும்புகின்றனர். பெண்களுக்கு மட்டுமேயான சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் சில பெண்கள்:

l அவந்திகா

ஒளிப்படக் கலைஞர் அவந்திகா, “தோழிகள் 5 பேர் சேர்ந்து இத்தாலி செல்வதாகத் திட்டம் போட்டோம். அதற்கு ஒரு சுற்றுலா நிறுவனம் உதவ முன்வந்தது. ஆனால், எனக்கு மட்டுமே விசா கிடைத்தது. பெண்கள் சுற்றுலாவை, ‘சோலோ’ சுற்றுலாவாக மாற்றிக்கொண்டேன். சுற்றுலா நிறுவனத்தோடு சேராமல், ஏற்கெனவே பெறப்பட்ட தகவல்களை வைத்து புறப்பட்டுவிட்டேன். இத்தாலியில் இறங்கியதும் பயம் பற்றிக்கொண்டது. ஆனால், 11 நாள்கள் தனியாக, தெரியாத நாட்டில், சின்ன அசெளகரியம்கூட இல்லாமல் அவ்வளவு சந்தோஷமாக அந்த ட்ரிப் அமையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. வாழ்நாள் அனுபவம். மீண்டும் ஒரு சோலோ ட்ரிப்புக்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார்.

l சாவித்ரிபாய் புலே பயணக்குழு

தமிழ்நாட்டில் ஆறு ஆண்டுகளாக இயங்கி வரும் ‘சாவித்ரிபாய் புலே’ பெண்கள் பயணக்குழுவை ஆரம்பித்தவர் கீதா இளங்கோவன். காடு சுற்றுலா, மலையேற்றம், வரலாற்றுச் சுற்றுலா, ஜாலி ட்ரிப் போன்றவற்றில் ஆர்வம் உள்ள பெண்கள் இணைந்து பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

l சுமித்ரா சேனாபதி

Wow Club Women on Wanderlust சுற்றுலா நிறுவனத்தை சுமித்ரா சேனாபதி நடத்தி வருகிறார். பல நாடுகளுக்குச் சென்று, பல புத்தகங்களை எழுதியிருக்கும் இவர், பெண்களுக்கு மட்டுமேயான சுற்றுலாவின் தேவையை உணர்ந்து, 17 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். மற்ற சுற்றுலா நிறுவனங்களைப் போலவே இதுவும் உலகம் முழுவதும் 50 இடங்களுக்குத் தன் சேவையை ஆற்றி வருகிறது.

l சாந்தினி அகர்வால்

பெங்களூருவைச் சேர்ந்த Transforming Travels என்கிற சுற்றுலா நிறுவனத்தை சாந்தினி அகர்வால் நடத்திவருகிறார். அந்நிறுவனம் ‘செட்டிநாடு - தஞ்சாவூர்’ பாரம்பரியச் சுற்றுலாவை நடத்துகிறது. மூன்று நாள்களில் இரண்டு நாள்கள் செட்டிநாட்டில் பழங்கால அழகிய மாளிகையில் தங்கி, செட்டிநாடு சிறப்பு உணவை உண்டு, சில இடங்கள் சுற்றிக் காட்டப்படுகின்றன. இவை தவிர, ஆத்தங்குடி டைல்ஸ், காரைக்குடி பழம்பொருள்கள் சந்தை, துணி நெசவு போன்ற இடங்களுக்கு ஃபேக்டரி விசிட்டையும் கிராமத்தில் ஒரு நடையையும் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒருநாள் தஞ்சாவூரில் பெரிய கோயில் தரிசனம், தஞ்சை சிறப்பு மதிய உணவு வழங்கி, விமானத்தில் பெங்களூருவுக்குச் செல்லலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in