

சுற்றுலா போவது என்று முடிவுசெய்தால் பொதுவாக மலைப்பகுதிகள், சரணாலயங்கள், பறவைக் காப்பிடங்கள், உயிர்க்காட்சியகங்கள் போன்ற இடங்களுக்கே அதிகம் செல்கிறோம். ஆனால், நம் சமூகத்தில் இயற்கையை, உயிரினங்களை அவற்றுக்கு உரிய மதிப்போடு மதிக்க நாம் கற்றுக்கொள்ளவில்லை. ஓர் அருவியையோ நீர்நிலையையோ கண்டால், பெரும்பாலான ஆண்கள் அந்த இடத்துக்குச் சென்று மது குடிப்பதுதான் மகிழ்ச்சி எனத் தவறாகக் கருதுகிறார்கள்.
அதேபோல் அருவிகளில் கூட்டம்கூட்டமாக ஷாம்பு, சோப்பு போன்ற வேதிப்பொருள்கள் நிறைந்தவற்றை பயன்படுத்திக் குளிப்பதுடன், ஞெகிழிக் கழிவை அந்த இடத்திலேயே மலைமலையாகக் குவிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளோம். அதிக விலை கொடுத்து ஞெகிழி தண்ணீர் புட்டிகளை வாங்கிக் குடித்துவிட்டு, பார்த்த இடத்தில் ஞெகிழிக் கழிவைத் தூக்கி எறிவதையும் சாதாரணமாகச் செய்கிறோம்.
வேடந்தாங்கல், கூந்தங்குளம் போன்ற பறவை சரணாலயங்களுக்கும், கிண்டி பூங்கா போன்ற உயிர்க் காட்சியகங்களுக்கும் செல்லும் பெரும்பாலோர், அங்கிருக்கும் உயிரினங்களை உற்றுநோக்கவோ அறியவோ முற்படுகிறோமா? அல்லது நொறுக்குத்தீனி தின்பது, கட்டுச்சோறு சாப்பிடுவது போன்றவற்றில் கவனம் செலுத்து கிறோமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
காட்டுயிர்கள், பறவைகளின் பெயர்கள், அவற்றின் அடிப்படைப் பழக்கவழக்கங்கள் குறித்துப் பெரும்பாலும் தவறான, அறிவியலுக்குப் புறம்பான தகவல்களையே பேசிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் இருக்கிறோம். இது சார்ந்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் சம்பந்தப்பட்ட துறை, அரசின் செயல்பாடுகள் தேவை. அதே நேரம் இயற்கை, காட்டுயிர்கள் குறித்து குறைந்தபட்சமாகவாவது அறிந்துகொள்ள நாமும் தயாராக இருக்க வேண்டும். அதற்கு இயற்கை குறித்த ஆர்வமும் அறிவியல் பார்வையும் அவசியம்.
எந்தச் சரணாலயம், இயற்கை சார்ந்த இடத்துக்குச் சென்றாலும் குரங்குகளுக்கு உணவளிப்பது; காக்கை, புறாக்களுக்குத் தானியம் அளிப்பது; மான்கள், நாய் போன்றவற்றுக்கு உணவளிப்பது போன்ற அறிவியலுக்கு எதிரான, தவறான பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கிறோம். இயற்கையாக வாழும் உயிரினங்கள் தங்களுக்குத் தேவையான இரையை இயல்பாகத் தேடி வாழும் திறன் பெற்றவை. மாறாக, மனிதர்கள் அவற்றுக்கு உணவளிப்பதன் மூலம் அவற்றின் இயல்பைக் குலைக்கிறோம், அவற்றின் இனப்பெருக்கம் தேவையற்று அதிகரிக்கவும் வழிவகுக்கிறோம்.
மற்றொருபுறம் பதப்படுத்தப்பட்ட, செயற்கை வேதிப்பொருள்கள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்களை அவற்றுக்குத் தந்து பழக்குவதன் மூலம், அவற்றின் உடலுக்கு ஊறுவிளைவிக்கவும், அவை இயல்பு குலைந்து மனிதர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளவும் வழிவகுக்கிறோம். பெரும்பாலான சுற்றுலாத்தலங்களில் நொறுக்குத் தீனிகளையும் குளிர்பானப் புட்டிகளையும் மனிதர்கள் கையிலிருந்து குரங்குகள் பிடுங்கிக்கொண்டு செல்லும் நிலைக்குக் காரணம் நாம் உருவாக்கிய தவறான பழக்கமே.
குறைந்த செலவில் நம் கருணை உணர்வை வெளிப்படுத்தவும், இயற்கையை அழிப்பதால் நமக்கு ஏற்படும் குற்றவுணர்வுக்கு மருந்து போட்டுக்கொள்ளவும் இதுபோன்ற வழிமுறைகளை நாடுகிறோம். ஆனால், அது இன்னும் பெரிய பிரச்சினைகளுக்கு அடிப்படையாக மாறுவதை நம்மில் பலரும் உணர்வதில்லை. அதேபோல் இயற்கையாக வாழும் உயிரினங்களை நெருங்கிச் சென்று செல்ஃபி எடுக்கும் முட்டாள்தனமும் அதிகரித்துவருகிறது. இது நமக்கு மட்டுமல்லாமல் அந்த உயிரினங்களுக்கும் ஆபத்தாக முடிவதற்கான சாத்தியமே அதிகம்.
பொதுவாக, ஓரிடத்துக்குச் சுற்றுலா செல்லும்போது அந்த இடத்தின் தாவரங்கள், உயிரினங்கள் குறித்த அடிப்படைத் தகவல்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு செல்வது நல்லது. அந்த இடத்தைக் கூடிய மட்டும் சேதப்படுத்தாமல், தொந்தரவு செய்யாமல் ரசிக்க முயல வேண்டும். எப்போதும் கையில் உலோகத் தண்ணீர் பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஞெகிழிப் பை, ஞெகிழிப் புட்டிகளில் விற்கப்படும் தண்ணீரை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பயணத்தின்போது பொருள் தேவையைக் குறைத்துக்கொள்வதும், தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களை நாமே கைவசம் எடுத்துச் செல்லும் பழக்கத்தையும் கொண்டிருந்தால், நாம் ரசித்த இயற்கையை அடுத்த தலைமுறையும் ரசிக்க வாய்ப்பு அமையும்.