

சுற்றுலாவைத் துல்லியமாக வடிவமைப்பதற்கு ஆன்லைன் திட்டமிடல் நமக்கு உதவும். அதற்கான எளிய வழிமுறைகள் இங்கே:
இடத்தைத் தீர்மானியுங்கள்: செல்ல விரும்பும் இடத்தைத் தீர்மானிப்பதே ஆன்லைன் திட்டமிடலின் முதல்படி. இது உங்கள் விருப்பங்களைச் சுருக்கவும், திட்டமிடல் செயல்முறையை நன்கு நிர்வகிக்கவும் உதவும்.
பயணத் தேதிகளைத் தீர்மானியுங்கள்: எப்போது பயணிக்க விரும்புகிறீர்கள் என்பதை முன்னரே முடிவெடுக்க வேண்டும். பள்ளி விடுமுறைக் காலத்தைவிட உங்கள் அலுவலகத்தில் வேலை அழுத்தம் குறைவாக இருக்கும் காலத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அது ஆஃப் சீசனாக இருந்தால் நல்லது. ஆஃப் சீசனில் கூட்டம் குறைவாக இருக்கும்; விடுதிகளில் வாடகையும் பாதியாக இருக்கும்.
ஆன்லைன் டிக்கெட்: பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றில் நீங்கள் எதில் பயணிக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பயண இணையதளங்களைப் பயன்படுத்தி உங்கள் இலக்குக்கான பேருந்தையோ ரயிலையோ விமானத்தையோ தேடுங்கள். அவற்றில் சிறந்த ஒன்றைத் தேர்வுசெய்வதற்கு விலையையும் நேர அட்டவணைகளையும் ஒப்பிடுவது உதவும். சிறந்ததைத் தேர்ந்தெடுத்த பின்னர், இணையவழி டிக்கெட்டுகளைப் பதிவு செய்யுங்கள். அதற்கு முன்பாக, விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முழுமையாகப் படித்துவிடுங்கள்.
தங்குமிடங்களைத் தேடுங்கள்: பயண இணையதளங்கள் அல்லது ஹோட்டல் முன்பதிவு இணையதளங்களைப் பயன்படுத்தி நீங்கள் செல்லும் இடத்திலுள்ள ஹோட்டல்களைத் தேடுங்கள். ஹோட்டல்களின் விலையையும் மதிப்புரைகளையும் ஒப்பிடுவது உங்களுக்குத் தேவையான சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க உதவும்.
தங்கும் விடுதியை முன்பதிவு செய்யுங்கள்: உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தங்கும் விடுதியைத் தேர்ந்தெடுத்ததும், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இணையத்தில் முன்பதிவு செய்யுங்கள். அதற்கு முன்னர் செக்-இன், செக்-அவுட், கூடுதல் படுக்கை போன்றவை குறித்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படிப்பது நல்லது.
கூடுதல் ஏற்பாடுகள்: நீங்கள் பயணிக்கப் போகும் ஊரில் உள்ள முக்கிய இடங்களைப் பார்ப்பதற்கு உங்களுக்கு வாடகை கார் உள்ளிட்ட பிற ஏற்பாடுகள் தேவைப்படலாம். இவற்றை நீங்கள் இணையத்தில் முன்பதிவு செய்துவிடுவது கடைசி நேர ஏமாற்றத்தைத் தவிர்க்க உதவும்.