

சுற்றுலாவுக்கு உதவும் முக்கியமான செயலிகள் சில:
திட்டமிடல்: போக்குவரத்து, தங்கும் இடம் ஆகியவற்றைத் திட்டமிடுவது போலவே எந்தெந்தப் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டும்? எந்தெந்த இடங்களுக்கு எங்கு, எப்போது செல்ல வேண்டும்? என்ன வாங்க வேண்டும்? தவிர்க்கக் கூடிய / கூடாத விஷயங்கள் என்ன எனச் சகலத்தையும் நினைவூட்டச் சில செயலிகள் உள்ளன. பயணத் திட்டமிடலுக்கு ஏற்பப் பரிந்துரைகளையும் இந்தச் செயலிகள் அளிக்கின்றன. எதையும் தவறவிடாமல் இருக்க இந்தச் செயலிகளைப் பயன்படுத்தலாம். இவற்றில் சில: Trip advisor, Pack point.
மொழிபெயர்ப்பு: மொழி தெரியாத ஊருக்குச் செல்லும்போது தகவல்களை மொழியாக்கம் செய்யக்கூடிய மொழிபெயர்ப்புச் செயலிகளைப் பயன்படுத்தலாம். ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரெஞ்சு என உலகின் பல்வேறு மொழிகள் அடங்கிய மொழிபெயர்ப்புச் செயலிகளின் உதவியால் தகவல் பரிமாற்றம் எளிதாகும். இவற்றில் சில: Google Translate, Microsoft Translator, iTranslate.
வானிலை: வெயிலோ மழையோ புயலோ வானிலை முன்னறிவிப்பு தொடர்பான துல்லியமான தகவல்கள் வழங்கும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அலைபேசி பயன்படுத்தப்படும் இடத்தை அடிப்படையாக வைத்து இயங்கும் இந்தச் செயலிகள் தரும் தரவுகளுக்கு ஏற்ப பயணத்தைத் திட்டமிடலாம். இவற்றில் சில: Accu weather, Windy.com.
வழித்தடம்: ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பயணப்படுவதற்கான தொலைவு, நேரம், வாகன நெரிசல் நிலவரம், பெட்ரோல் டீசல் நிலைய விவரங்கள் போன்றவற்றின் தகவல்களை உள்ளடக்கிய செயலிகளைப் பயன்படுத்தலாம். இந்தச் செயலிகள் உலகின் எந்தப் பகுதிக்கும் பயணம் செய்து வரச் சரியான வழித்தடங்களைக் காண்பிக்கின்றன. இவற்றில் சில: Google maps, What3words
பணப் பரிவர்த்தனை: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கான ‘கூகுள் பே’, ‘போன் பே’ போன்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அது மட்டுமின்றி பயணத்தின்போது ஏற்படக்கூடிய முழு வரவு செலவுக் கணக்குகளைக் கண்காணிக்கவும், உடன் பயணிப்பவர்களுடன் செலவினங் களைப் பிரித்துப் பட்டியலிடவும் ‘கூகுள் பே’ செயலியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில செயலிகள் பயணச் செலவைப் பகுப்பாய்வு செய்து தரவுகள் அளிக்கின்றன. இவற்றைப் பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். இவற்றில் சில: Google pay, Splitwise, phonepe.
தனி நபர் சுற்றுலா: தனியாகப் பயணம் செய்வது இந்தக் காலத்து டிரெண்ட். சவாலான அனுபவத்தை எதிர்கொள்ள ஏராளமானோர் தனிப் பயணம் மேற்கொள்கின்றனர். மலையேற்றம், சைக்கிளிங், பாரம்பரிய நடை, போட்டோ வாக் போன்றவற்றின் தகவல்களை வழங்கும் செயலிகள் தனிப் பயணிகளுக்குப் பயனுள்ளதாக அமையும். இவற்றில் சில: AllTrails, Travel buddy.
பாதுகாப்பு: பயணங்களின்போது அவ்வப் போது பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது நல்லது. குறிப்பாகத் தனியாகப் பயணம் மேற்கொள்பவர்கள் எதிர்வர இருக்கும் அபாயத்தை முன்கூட்டியே உணரவும், உதவி தேவைப்படும்போது அவசரத் தொடர்பு எண்களுக்கு எச்சரிக்கைத் தகவல் அனுப்பவும் சில பாதுகாப்புச் செயலிகளைப் பயன்படுத்தலாம்.
தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்யும் பெண்கள் ‘காவல் உதவி’ செயலியைப் பயன்படுத்தலாம். அவசரகால உதவி தேவைப்படும்போது செயலியில் உள்ள எஸ்ஓஎஸ் பட்டனை அழுத்தினால், அழைப்பவர்கள் போலீஸாரின் தொடர் கண்காணிப்பின்கீழ் வந்துவிடுவார்கள். தொடர்பு இல்லாத இடங்களில் எச்சரிக்கை செய்தியைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வசதியும் உள்ளது. இவற்றில் சில: bSafe, Kaaval Uthavi, kavalan.