

கோடைக் காலத்தில் மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுப்பதைப் போலவே ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட சுற்றுலாவை மையப்படுத்திப் பயணப்படுபவர்கள் உண்டு. அந்த வகையில் சில சுற்றுலாக்கள்:
ட்ரெக்கிங் சுற்றுலா: மலையேற்றத்தின் மீது ஆர்வம் கொண்டு மலை யேறுவதே ட்ரெக்கிங். இதை சாகசப் பயணமாக மேற்கொள்வோரும் உண்டு. மலையேற்றம் என்று பொதுவாகக் கூறினாலும் வாக்கிங், ஹைக்கிங், ட்ரெக்கிங் என இதைப் பிரிக்கிறார்கள். வாக்கிங் என்பது நடைப்பாதையில் 4 கி.மீ. தூரம் வரை நடப்பது. ஹைக்கிங் என்றால், ஒரு நாள் முழுவதும் நீடிக்கும் நெடிய நடை. ட்ரெக்கிங் என்பது 2 நாள்கள் முதல் சில நாள்கள் வரை கரடுமுரடான மலையில் ஏறுவது. இதற்கென பிரத்யேக ஷூ உள்பட பல பொருள்கள் தேவைப்படும். தமிழ்நாட்டில் குன்னூர், ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல், ஏலகிரி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இப்படி மலையேற்றம் செல்வோர் உண்டு.
பாரம்பரிய நடை: பாரம்பரிய நடை எனப்படும் ஹெரிடேஜ் வாக் என்பது பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள ஒரு சுற்றுலா முறை. வரலாற்றைத் தேடி, வேரைத் தேடி, நதிமூலத்தைத் தேடி செல்வோர் ஒரு குழுவாக ‘ஹெரிடேஜ் வாக்’ மேற்கொள்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், தளங்கள், யுனெஸ்கோ பாரம்பரியத் தலங்களுக்குச் செல்வது இதன் சிறப்பு. இந்தக் குழுவில் 20 முதல் 30 பேர் வரை பல தரப்பினர் இடம்பெறுவார்கள். நாள்களில் தொடங்கி வாரங்கள் வரை இப்பயணம் மேற்கொள்வோர் உண்டு. குறிப்பிட்ட ஊர்கள், நகரங்களில் உள்ள வரலாற்றுத் தலங்களை மையப்படுத்தி இப்பயணத்தை மேற்கொள்வார்கள். தமிழ்நாட்டில் சென்னை - மாமல்லபுரம் இதில் அதிகம் தேர்வு செய்யப்படும் இடமாக இருக்கின்றன.
சைக்கிள் சுற்றுலா: சைக்கிள் சுற்றுலா இன்று பிரபலமாகி வருகிறது. ஆனால், இது 1800களில் அறிமுகமான ஒரு பழைமையான சுற்றுலா முறை. மேலை நாடுகளில் தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு சைக்கிளிலேயே விரும்பிய இடங்களுக்குச் சென்று திரும்புவது வழக்கமான ஒன்று. இப்போது நம் நாட்டில் இதுவே அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக் கிறது. சிலர் அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் சைக்கிளிலேயே சென்று வருகிறார் கள். அதேபோல குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்றால், அங்கு வாடகைக்குக் கிடைக்கும் சைக்கிளை எடுத்துக்கொண்டும் ஊரைச் சுற்றி வரலாம். புதுச்சேரி, பெங்களூரு போன்ற ஊர்களுக்குச் சென்றால் சைக்கிள் சுற்றுலாக்களைக் காணலாம். தற்போது இளைஞர்கள் மத்தியில் இருசக்கர வாகனச் சுற்றுலாவும் பெருகி வருகிறது.
ஆன்மிகச் சுற்றுலா: எந்த ஒரு சுற்றுலாவிலும் வழிபாட்டுத் தலங்களுக்கும் நிச்சயம் இடம் இருக்கும். அண்மைக் காலமாகத் திருக்கோயில்களை மையப்படுத்தி சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. உதாரணமாக அறுபடை வீடு சுற்றுலா என்றால், முருகன் திருக்கோயில்கள் அமைந்துள்ள ஆறு இடங்களுக்கு மட்டும் சுற்றுலா சென்று திரும்புகிறார்கள். இப்படித் திருப்பதி, ஷீரடி பயணம், நவக்கிரக ஆலயங்கள், அம்மன் கோயில்கள் எனச் சுற்றுலாக்கள் செல்வோர் உண்டு. தனியார் மட்டுமின்றி, மாநில சுற்றுலாத் துறை, ஐ.ஆர்.சி.டி.சி. போன்ற அமைப்புகள் இதுபோன்ற சுற்றுலாக்களுக்கு மக்களை அழைத்துச் செல்கின்றன.