

நான் வடக்கே மானசரோவர் வரை போயிருக்கிறேன், கிழக்கே கொல்கத்தா வரை போய்த் திரும்பி விட்டேன், மேற்கே அகமதாபாத் சென்று அங்குள்ள மலைகள், குகைகள் எல்லாம் பார்த்துவிட்டு வந்துள்ளேன் என்றெல்லாம் சொல்பவர்களைக் கூப்பிட்டுக் கேட்க வேண்டும். உங்கள் சொந்த ஊருக்கு அருகிலுள்ள கிராமங்களை உமக்குத் தெரியுமா என்று?
இதைப் பேருந்து, ரயில் பயணங்களின்போது பலரிடமும் நான் கேட்டிருக்கிறேன். அப்போது அவர்கள் சொன்னது “சொந்த ஊர் விட்டா வேலை செய்கிற ஊர், அதை விட்டா மாமனார் ஊர் அங்கே போனா சாப்பிடறது. தூங்கறதுதான், வெளியே போனதுகூட இல்லை, இதத் தவிர வேறு எதுவும் தெரியாது. ஏதாவது லாங் டூர் போவோம், எப்போவாவது” என்பதே.
அவர்கள் சொல்லுகிற லாங் டூரில் தெற்கே என்றால் அதில் என்னென்ன ஊர்கள், வடக்கே என்றால் அதில் என்னென்ன ஊர்கள் அது என்ன டூர் என்றும் எனக்குத் தெரியும். அதெல்லாம் எந்தச் சிக்கலுமில்லாத வாழ்க்கையின் டெம்ப்ளேட் பயணங்களே. சரி அவற்றை விட்டுவிடலாம். நான் என்னைப் பற்றிச் சொல்ல வந்தேன்.
உங்களிடம் சொல்வதற்கென்ன... நான் கும்மிடிப்பூண்டியைத் தாண்டியதில்லை. அதில் விருப்பமும் எனக்கு இருந்ததில்லை. இதைச் சொல்ல எனக்கு வெட்கமுமில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் சொந்த ஊருக்குச் செல்லும்போதெல்லாம் எனது ஊருக்கு அருகிலுள்ள கிராமங்களில் கூடுதலாக இன்னொன்றைத் தெரிந்துகொண்டுதான் திரும்புகிறேன். இப்படியாக வட தமிழ்நாட்டின் 300 ஊர்களையாவது நான் அறிந்து வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இப்போதைக்குத் தென்தமிழகத்தில் குறைந்தது 30 ஊர்களையாவது தெரியும். நிறைய ஆர்வம் இருக்கிறது, பார்ப்போம்.
எனது இந்தப் பயணங்களின்போது ஒன்று எனக்குத் தெரிந்தது. தமிழகத்தில் ஒவ்வொரு 10 கிலோ மீட்டருக்கு ஓர் இடத்தில் நமது பழக்கவழக்கங்கள் மாறுகின்றன. ஒவ்வொரு 30 கிலோ மீட்டருக்கு ஓர் இடத்தில் நமது சடங்குகள் மாறுகின்றன. ஒவ்வொரு 60 கிலோ மீட்டருக்கு ஓர் இடத்தில் நமது பண்பாடும் கலாச்சாரமும்கூட மாறுகின்றன. எல்லா இடங்களிலும் மாறாமல் இருப்பது, “நீங்க எந்த ஊர், அங்கே யார் வீடு'' என்ற விசாரணைகளும் “அடடே அவரை எனக்குத் தெரியுமே'' என்கிற சக மனிதர்களுடனான பரிச்சயத்தின் மீதுள்ள மாறாத நேசமுமே!