

திரையரங்குக்குச் செல்வதே அரிதாக இருந்த காலத்தில் படத்தைப் பார்த்த நண்பர்கள் காட்சிகளை விவரித்துக் கதை சொல்வார்கள். அப்படித்தான் தாங்கள் சுற்றுலா சென்றுவந்த அனுபவத்தை ‘டிராவல் விளாகர்ஸ்’ எனப்படும் யூடியூபர்கள் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். முன்னதைப் போல இல்லாமல் இது காட்சிக்கும் விருந்தாக அமைகிறது. இவர்களின் அனுபவம் நமக்குப் புதுப்புது சுற்றுலாத் தலங்களை அறிமுகப்படுத்துவதோடு திட்டமிடுவதற்கும் உதவியாக அமைகிறது. பேர்பெற்ற சுற்றுலா விளாகர்களில் சிலர் இவர்கள்:
Tamil Trekker
நண்பர்களோடு உலகம் சுற்ற விரும்பும் புவனிதரணுக்குப் பத்து லட்சத்துக்கும் அதிகமான சந்தா தாரர்கள். ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், சீனா, ரஷ்யா, இந்தோனேசியா, எகிப்து, அசர்பைஜான், தாய்லாந்து என உலகின் பல நாடுகளை வலம்வந்து 400க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றியிருக்கிறார். ஒவ்வொரு நாட்டுச் சுற்றுலாவையும் தனித்தனியாகப் பல அத்தியாயங்கள் வெளியிட்டிருப்பது சிறப்பு. எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கிருக்கும் மக்களுடன் உரையாடுவதுடன் நேயர்கள் கேட்கிற கேள்விகளுக்கு அங்கிருப்போரிடம் பதில் வாங்கி வெளியிடுகிறார். ஆப்பிரிக்கக் காடுகளில் வசிக்கும் மக்களைச் சந்தித்து இவர் வெளியிட்ட காணொளிகளை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். குறைவான பணத்தில் சுற்றுலா செல்லக்கூடிய நாடுகள், விசா தேவையில்லாத நாடுகள் என்பது போன்ற வழிகாட்டும் வீடியோக்களையும் இவர் பதிவிட்டுள்ளார்.
Village Database
பட்ஜெட் சுற்றுலா செல்ல விரும்பு வோருக்கு ரகு சுப்புராயன் சிறந்த வழிகாட்டி. ஏழு லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் கொண்ட தனது யூடியூப் அலைவரிசையில் 600க்கும் அதிகமான வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார். எந்தெந்த மாதங்களில், எந்தெந்த இடங்களுக்குப் பயணம் செய்யலாம், செலவு, எதில் கவனமாக இருக்க வேண்டும், எந்தப் பொருளை எப்படி வாங்க வேண்டும், சுற்றுலா செல்லும் இடங்களில் கிடைக்கும் உணவு எனச் சுற்றுலாத் திட்டமிடலுக்குத் தேவையான அடிப்படைத் தகவல்கள் அனைத்தையும் இவரது சுற்றுலாக் காணொளிகள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். காஷ்மீர், மசினகுடி, குமுளி, டெல்லி, மும்பை, கோவா என இந்தியாவின் பெரும்பாலான இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் காணொளிகள் மிகைப்படுத்துதலும் செயற்கைத்தனமும் இல்லாத எளிமையான விவரிப்பால் கவனம் ஈர்க்கின்றன.
Tamil Navigation
உலகம் முழு வதையும் சுற்றிவர ஆசைப்படும் கருணாகரன், தன் சுற்றுலா அனுபவங்கள் பிறருக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதற்காக 300க்கும் மேற்பட்ட காணொளிகளைப் பதிவேற்றியுள்ளார். நம்மைச் சுற்றியிருக்கும் இடங்களில் நாம் தவறவிட்டவற்றையும் பேசுபொருளாக இருக்கும் இடங்களையும் கவனப்படுத்துகிறார். பெரும்பாலும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகத் தேடிச் செல்கிறார். சோழர்கள் வாழ்ந்த காடு, பாண்டிய மன்னன் வெட்டிய கிணறு, பொன்னியின் செல்வனின் இலங்கை அரண்மனை, பாதாளத்தின் ராவணன் குகை, சோழர்கள் வென்ற கடாரம், சீனர்கள் கும்பிடும் போதிதர்மர், காஞ்சி நடவாவிக் கிணறு, கீழடியின் வேரைத் தேடி என ஒவ்வொரு காணொளியும் புதுப்புது தகவல்களைத் தருகின்றன.
Dhaya
செல்போனும் கையுமாக நான்கு சுவர் களுக்குள் முடங்கிப் போகிற பெரும்பாலான 2கே கிட்ஸ்களுக்கு வீட்டுக்கு வெளியேயும் ஓர் உலகம் இருக்கிறது என்பதைக் காட்டு வதற்காக 100க்கும் மேற்பட்ட காணொளிகளை தயா பதிவிட்டிருக்கிறார். தான் செல்லும் இடங்களைப் பற்றிய குறிப்புகளோடு தலைமுடிக்குச் சாயமேற்றியது, காப்பி யடிக்கும் யூடியூபர்கள், ரஜினியைப் பற்றி வட இந்தியர்கள், இயற்கை நடை, சந்தாதாரர்களோடு சுற்றுலா, நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் என்பது போன்ற காணொளிகளையும் இடையிடையே பதிவிடுகிறார். 2கே கிட்ஸ்களைத் தக்க வைக்கும் வகையில் நண்பர்களோடு உரையாடுவதுபோலக் காணொளி முழுக்க இயல்பாகப் பேசிக்கொண்டே இருக்கிறார். டிரோன் வைத்திருப்பதால் சுற்றுலாக் காட்சிகளைப் பாடல்களோடு இணைத்து எடிட் செய்து வெளியிடுவது நல்ல காட்சி அனுபவமாக இருக்கிறது.
Abi’s Travel Diary
பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதே அரிது. இதில் தனியாகச் சுற்றுலா சென்று அதைக் காணொளியாகப் பதிவிடுவது அரிதினும் அரிது. அப்படி அரிதானவர்களில் ஒருவரான அபியின் யூடியூப் அலைவரிசைக்கு ஒன்றரை லட்சத் துக்கும் அதிகமான சந்தாதாரர்கள். ஒரு பக்கம் பதேர்பூர்சிக்ரி, நகர், அலகாபாத், கோவா போன்ற இடங்களுக்குச் செல்கிறவர் மறுபக்கம் ரிஷிகேஷ், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஹரித்வார், உத்தரகாசி என ஆன்மிகச் சுற்றுலாத் தலங்களின் காணொளிகளாகப் பதிவிடுகிறார். ஒரு நகருக்குச் சென்றால் அங்கிருக்கும் முக்கியமான சுற்றுலாத் தலங்கள், போக்கு வரத்து, தங்குமிடம், செலவு, பயண நேரம் போன்றவற்றை விளக்குகிறார். பெண்கள் எவ்விதத் தயக்கமும் மனத்தடையும் இல்லாமல் பயணங்களை மேற்கொள்ளலாம் என்கிற உத்வேகத்தை இவரது காணொளிகள் தருகின்றன.