

கற்றலினும் கேட்டல் நன்று என்பது முதுமொழி. அதையும் தாண்டி, சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாகக் கேட்பதில்தான் சுற்றுலா வழிகாட்டிகளின் வாழ்வாதாரமே அடங்கியிருக்கிறது. சுற்றுலாத் தலங்கள், அங்கிருக்கும் சிறப்புகள், தங்குமிடங்கள் குறித்த விவரங்கள் விரல் நுனியில் திறன்பேசியிலேயே காணக்கிடைக்கின்றன. இருப்பினும், அந்தத் தகவல்களைவிட நுட்பமான தகவல்களை நேரடியாக விளக்கும் சுற்றுலா வழிகாட்டிகளின் தேவை இன்றைக்கும் இருக்கிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறையின் பயிற்சி பெற்று அந்தத் துறையின் சான்றிதழ் பெற்றிருக்கும் சுற்றுலா வழிகாட்டிகள் தமிழ்நாடு முழுவதும் 470 பேர் இருப்பார்கள் என்கிறார் மதுரையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி நாகேந்திர பாபு. தமிழ்நாடு அரசின் சிறந்த சுற்றுலா வழிகாட்டிக்கான விருதைக் கடந்த ஆண்டு இவர் பெற்றிருக்கிறார். பதினாறாவது ஆண்டாக சுற்றுலா வழிகாட்டியாகப் பயணிக்கிறார்.
சுற்றுலா வழிகாட்டியாவதற்கு முன், தனியார் பள்ளி ஆசிரியராக வரலாறு, புவியியல், கணினிப் பாடங்களைக் கற்றுக்கொடுத்து வந்த பிரபு, வரலாற்றின் பெருமையைப் பள்ளி வளாகத்துக்கு வெளியேயும் பரப்புவதற்கு முடிவெடுத்தார். அதற்காகவே பரந்த உலகத்திலிருந்து வரும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த மக்களுக்கும் சொல்வதற்காகச் சுற்றுலா வழிகாட்டியாகியிருக்கிறார்.
இவரை ‘டான்சிங் கைடு’ பிரபு, ‘இந்தியாவின் ஒபாமா’ என்றெல்லாம் புகழ்கிறார்கள். நடனத்தில் இயல்பிலேயே நாட்டம் கொண்ட பிரபு, சுற்றுலாப் பயணிகளுக்குச் சிற்பங்களில் உறைந்திருக்கும் நடன அசைவுகளையும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் ஆடியும் பேசியும் விளக்குவதால் மதுரையில் இவரின் நடனம் பிரபலம்.
கனடாவிலிருந்து மதுரைக்குச் சுற்றுலா வந்திருந்தவர்கள் என்னிடம், “அடுத்து நாங்கள் கேரளத்துக்குச் சுற்றுலா செல்லப்போகிறோம். தமிழ்நாட்டின் பரதநாட்டியத்தையும் கேரளத்தின் கதகளியையும் வேறுபடுத்திக் காட்டும் சில நடன அசைவுகளை எங்களுக்காக ஆடிக் காட்ட முடியுமா?" என்று கேட்டார்கள்.
“இரண்டு கலைகளுக்கும் அபிநயங்களில் இருக்கும் வித்தியாசத்தை ஆடிக் காட்டினேன். அதைப் படம்பிடித்து அவர்களின் ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர். அடுத்த நாள் காலைக்குள் அந்தப் பதிவு லட்சக்கணக்கான பார்வைகளை எட்டியதைக் கண்டு வியந்தனர். ஊடகங்களிலும் இதைப் பற்றி அவர்கள் பேசினர். இந்தச் செய்தி மதுரை மக்களையும் எட்டியது. ஒரே இரவில் என் மீது புகழின் வெளிச்சம் விழுந்தது. அதனால் மதுரைவாசிகள் ‘இந்தியாவின் ஒபாமா’ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்” என்றார்.
ஆர்வம் காரணமாக நிறையத் தகவல் சேகரிப்பிலும் சுற்றுலாத் தலங்கள் குறித்த வரலாற்று ரீதியான ஆவணங்களையும் புத்தகங்களையும் படித்து தன்னை ஒரு முழுமையான சுற்றுலா வழிகாட்டியாகப் பலரும் கருதுவதற்கு நியாயம் சேர்க்கிறார் பிரபு. சுற்றுலா வழிகாட்டிப் பணியின் மீதான காதலால் அமெரிக்க ஆங்கிலம், பிரிட்டிஷ் ஆங்கில உச்சரிப்பு, பேச்சுப் பயிற்சியையும் இவர் கற்றுக்கொண்டிருக்கிறார். “இணையத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் குறித்த தகவல்கள் இருக்கும். ஆனால் அதன் பின்னணி, வரலாறு, தொன்மம் போன்றவற்றை விளக்குவதில்தான் ஒரு சுற்றுலா வழிகாட்டியின் சிறப்பு அடங்கியிருக்கிறது. உதாரணமாக, மதுரையில் இருக்கும் தாயுமானவர் சிலையைச் சொல்லலாம். இறைவன் மருத்துவச்சியாக ஒரு கர்ப்பிணிக்குச் சுகப்பிரசவம் செய்வித்த தொன்மையைச் சொல்கிறது இந்தச் சிற்பம். இதில் புவியீர்ப்பு விசைக்கு ஒத்திசைவாகப் பிரசவம் நிகழ்ந்திருக்கும் நுட்பமும் வெளிப்படுமாறு நான் பேசுவேன்”என்கிறார் பிரபு.
“ஒரு இளங்கலைப் பட்டம். பொது அறிவு, ஆங்கிலத்தில் பேசும் திறன் போன்றவை சுற்றுலா வழிகாட்டியாவதற்குத் தேவையான முக்கிய அம்சங்கள். தமிழ்நாடு சுற்றுலாத் துறை சுற்றுலா வழிகாட்டிகளைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும். அவர்களே பயிற்சி கொடுத்து, அதில் தேர்வானவர்களுக்குச் சான்றிதழ் அளிப்பார்கள். ‘டிராவல் அண்ட் டூரிசம்’ படிப்பைச் சில கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்கலாம்” என்கிறார் ‘டான்சிங் சுற்றுலா வழிகாட்டி' பிரபு.