போவோம்.. போய்த்தான் பார்ப்போம்!

போவோம்.. போய்த்தான் பார்ப்போம்!
Updated on
2 min read

‘இந்த முறை கண்டிப்பா ட்ரிப் போறோம்’ - இப்படித்தான் ஆரம்பித்தது எங்கள் ஊர் சுற்றும் திட்டம். எதைப் பண்ணினாலும் பிளான் பண்ணிப் பண்ணணும், இல்லையா?

சுற்றுலாவுக்குத் திட்டமிட 10 பேர் கொண்ட வாட்ஸ் அப் குழு ஒன்றைத் தொடங்கினோம். ஆரம்பமே அமர்க்களம்தான். “எங்கே போறோம்?, “எங்கே போறோம்?”னு ஆளாளுக்குக் கேள்வி கேட்டார்களே தவிர, யாரும் பதிலே சொல்லவில்லை. ‘இங்கே போகலாம், அங்கே போகலாம்’ என 999 இடங்களைப் பரிந்துரைத்து, கடைசியாக விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேள்வியில் வந்து நிற்பதைப் போல கோவாவில் வந்து நின்றார்கள். இதெல்லாம் பட்டன் போன் காலத்து பிளான். ஸ்மார்ட் போன் வந்து ஏ.ஐ. அடித்து ஆடிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும், அதே கோவா பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? வாய்ப்பில்லை ராசா எனப் பாதிப் பேர் கம்பிநீட்டப் பார்க்க, பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரிக்கு அடித்தது அதிர்ஷ்டம்.

அடுத்து என்ன? டிக்கெட் புக்கிங்தானே! ‘இந்த மாசம் விடுமுறை இல்லை’, ‘நேரமில்லை’, ‘அலுவலகத்தில் அனுமதியில்லை’, ‘சண்டேயில்லை’, ‘மண்டேயில்லை’, ‘கொண்டையில்லை’ என அடுத்த மாதத்தின் ஏதோ ஒரு மூன்று நாள்களை ஃபிக்ஸ் செய்வதற்குள் தலைமுடி பிய்ந்ததுதான் மிச்சம். இந்தப் பஞ்சாயத்தையெல்லாம் ஓரங்கட்டிவிட்டுப் பார்த்தால், ‘ஜன்னல் ஓரச் சீட்டு எனக்குத்தான்’ என வெர்சுவலாகத் துண்டுபோட முயன்றவர்கள் அடுத்த பஞ்சாயத்தைக் கிளப்பினார்கள். எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்த சில நல்ல உள்ளங்கள் மூலம் ஓரச் சீட்டு ஆள்களைச் சமாதானப்படுத்தி டிக்கெட் முன்பதிவு ஒருவழியாக முடிந்தது. அப்போது சட்டென்று, “நான் வரல, நீங்க நல்லபடியா போயிட்டு வாங்க” என ஒரு ஆள் சரக்கென்று எஸ்கேப் ஆனார். இதுதான் சாக்கு என்று இந்திய பேட்டிங் வரிசை போல அடுத்தடுத்து ஆளாளுக்குக் கழன்றுகொண்டார்கள். “அப்ப பிளான் போட்டதெல்லாம் பொய்யா கோபால்” எனத் திரும்பிப் பார்க்க, அவர்களோ சிட்டாகப் பறந்துவிட்டார்கள்.

சரி போனவர்கள் போகட்டும், இருப்பவர்களைத் தேத்தி பாண்டிச்சேரியை எப்படியாவது பார்த்தே தீருவது என சபதம் எடுத்தோம். “அதிகாலை ‘9 மணி!’ பஸ்ஸெல்லாம் புக் செய்தால் நான் வர மாட்டேன்” என ஒருத்தர் சொல்ல, இரவுப் பயணமே உலகில் சிறந்தது என ஒருமனதாக முடிவெடுத்தோம். “சரி, செலவைப் பங்கிட்டுக்கொள்ளலாமா?” என்கிற கேள்விக்கு ஒருவரும் எந்த ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்க வில்லை. ஷின்சானே தோற்று விடுகிற அளவுக்கு எங்கள் குழுவில் ‘அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி’.

“நாம மூணு பேர்தான் இருக்கோம். ஆள் அதிகமா இருந்தால் செலவைப் பிரித்துக்கொள்ளலாமே” என்றார் நண்பர். அடடே இதுவும் நல்ல யோசனையாக இருக்கிறதே எனப் பேசிக்கொண்டிருக்கையில் “அலுவலக நண்பர்கள் இருவரை நான் கூட்டிட்டு வர்றேன்” என்றார் இன்னொருவர். சுற்றுலாத் திட்டமிடல் குழுவில் இணைந்த அந்த இருவர், வந்தவுடன் கேட்ட முதல் கேள்வி, “கோவாதானே போறோம்?”. அடப்பாவிகளா! மறுபடியும் முதல்ல இருந்தா? ஆள விடுங்க என்று வாட்ஸ்-அப் குழுவையே வெடிவைத்துத் தகர்த்துவிட்டோம்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in