

‘இந்தி பயண இலக்கியத்தின் தந்தை’ எனப் போற்றப்படும் இவர், ‘ராகுல்ஜி’ என்றும் அழைக்கப் படுகிறார்; புத்தத் துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர். பன்மொழிப் புலவர், பல்துறை வித்தகர். 1948இல் சாகித்திய அகாடமி விருது பெற்ற இவரது புகழ்பெற்ற நூல்களில் ஒன்று, ‘வால்காவிலிருந்து கங்கை வரை’. இந்தியாவிலும் நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், (முன்னாள்) சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகளில் எனத் தன் வாழ்நாளில் 45 ஆண்டுகள் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களில் கழித்தவர். ‘ஊர் சுற்றிப் புராணம்’ என்கிற இவரது நூல் வெளி யான காலத்தில் முக்கியமான பயண இலக்கியக் கையேடாகக் கருதப்பட்டது.
ஏ.கே.செட்டியார் (03.11.1911 - 10.09.1983)
தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைமைக்கு முன்னோடியாக அமைந்தவர்; இதழாசிரியர், எழுத்தாளர். 1850-1925 காலப் பகுதியில் எழுதப்பட்ட பலரின் 140 கட்டுரைகளைத் தொகுத்து, ‘பயணக் கட்டுரைகள்’ என்ற பெயரில் ஆறு நூல்களாக வெளியிட்டார். பல நாட்டுப் பயண அனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து, ‘உலகம் சுற்றும் தமிழன்’, ‘பிரயாண நினைவுகள்’ என நூல்களாக வெளியிட்டார். இவர் மொத்தம் எழுதியவை 17 நூல்கள்; இவரது தொகுப்பு நூல்களில் முக்கியமானது ‘தமிழ்நாட்டுப் பயணக் கட்டுரைகள்’. 1936-37ஆம் ஆண்டுகளில், படமெடுக்கும் தொழில்நுட்பத்தில் ஜப்பானிலும் அமெரிக்காவிலும் முறையான பயிற்சி பெற்றிருந்தார் ஏ.கே.செட்டியார், முதன்முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப்படத்தை 1940 இல் தமிழில் எடுத்தவர்.
சோமலெ (11.02.1921 - 04.11.1986)
சிவகங்கை மாவட்டத்தின் நெற்குப்பை என்ற சிற்றூரில் பிறந்த சோமலெ (சோம.லெட்சுமணன்), உலகம் முழுவதும் சென்றது வணிக நோக்கத்துக்காகத் தான். அவரது பரம்பரைத் தொழிலான ஏற்றுமதி இறக்குமதியில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக மேற்கே அமெரிக்காவிலிருந்து கிழக்கே ஆஸ்திரேலியா வரை பல நாடுகளுக்கும் பயணித்த சோமலெ, “போகும்போது வணிகராகப் போனேன், வரும்போது எழுத்தாளராக வந்தேன்” என்று எழுதியிருக்கிறார். ‘உலக நாடுகள் வரிசை’, ‘இமயம் முதல் குமரி வரை’, ‘தமிழக மாவட்ட வரிசைகள்’ எனத் தமிழ்ப் பயண இலக்கியத்துக்கு அடித்தளமிட்டவர் சோமலெ. இன்று சுற்றுலாத் துறை மிகப் பெரிய துறையாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அந்தத் துறைக்கு, 1950களில் தொடக்க விதைகளை இட்டவர் சோமலெ.
மணியன்
‘ஆனந்த விகடன்’ இதழில் தலைமை உதவி ஆசிரியராகப் பணியாற்றிய வேங்கடசுப்பிரமணியன் என்கிற மணியன், அந்த இதழில் ‘இதயம் பேசுகிறது’ என்கிற தலைப்பில் 1960களில் எழுதிய பயணக் கட்டுரைகள் புகழ்பெற்றவை. மணியன் முதலாவதாகச் சென்ற நாடு எகிப்து; அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் அழைப்பின் பேரில் அங்கு பயணித்த மணியன், அந்த அனுபவங்களை வெகுஜன வாசிப்புக்கு ஏற்றவாறு எழுதினார். ‘இதயம் பேசுகிறது’ என்கிற பொதுத் தலைப்பில் ஐரோப்பா, ரஷ்யா, ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தென் அமெரிக்கா, மெக்சிகோ, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இவர் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய அனுபவங்கள் 11 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.