

டெல்லியில் வேலை பார்த்த காலத்தில் தினமும் சுற்றுலா சென்றுவருவது என் வழக்கம் என்று சொன்னால் ஏற இறங்கப் பார்ப்பீர்கள். இரண்டரை மணி நேரப் பேருந்துப் பயணத்தில் அலுவலகம் செல்வது சுற்றுலா எனும் வகைமைக்குள் அடங்குமா தெரியாது. அடங்கினால், நிச்சயம் ‘துன்பச் சுற்றுலா’ எனும் துணைப் பட்டியலுக்குள் அடங்கியே தீரும். தெற்கு டெல்லியின் முனிர்காவிலிருந்து வட கிழக்கு டெல்லியின் ஷாத்ராவில் உள்ள அலுவலகத்துக்கு ப்ளூ லைன் பேருந்துகளில் சென்றுவந்த அந்த நாள்கள் கொடுமையானவை. குறிப்பாக, கோடைக்காலங்கள்.
தணலாகக் கொதிக்கும் தார்ச்சாலையில் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போதுகூட பிரச்சினை இருக்காது. நிறுத்தங்களிலோ சிக்னல்களிலோ கூடுதலாக ஓரிரு நிமிடங்கள் நிற்கும்போது நகரம் நரகமாகிவிடும். தலைநகரின் தாறுமாறு தட்பவெப்பநிலை அப்படி யானது; அனல் ஆறு மாதம், குளிர் மீதி மாதம். இடையிடையே மழை உண்டு.
டெல்லி ஒரு சொர்க்கபுரி
சும்மாவேனும் சுற்றிப் பார்க்க, பத்மவிருது - சாகித்ய அகாடமி விருது வாங்க, ஜந்தர்மந்தரில் போராட என எதற்காக நீங்கள் டெல்லிக்கு வண்டியேறினாலும், அது எந்த மாதம் என்பதை நினைவில் கொண்டாக வேண்டும். நவம்பர் மத்தியிலிருந்து மார்ச் மத்தி வரை வருகை தருபவர்களுக்கு டெல்லி ஒரு சொர்க்கபுரி. குறிப்பாக, குளிர்காலத்தை நேசிப்பவர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். அடர்த்தியான நிறங்களில் ஸ்வெட்டர், ஜாக்கெட் (அப்படித்தான் சொல்ல வேண்டும்!) அணிந்த ஆண்களும் சல்வார் கமீஸ் மீது ‘ஷால்’ போர்த்திய பெண்களும் அங்குமிங்கும் உலாத்துவதைப் பார்த்த அறை நண்பரின் கானாடுகாத்தான் மச்சினர் ஒருவர், “டெல்லி அமெரிக்கா மாதிரி இருக்குல்ல!” என்று சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டார்.
பனிக்கா பயப்படுவார்கள்?
தமிழ்நாட்டிலிருந்து வருபவர்களில் பெரும்பாலானோர் கரோல் பாக் பகுதியில் உள்ள விடுதிகளில்தாம் தங்குவார்கள். பெரியவர்கள் ஸ்வெட்டர், குல்லாய், வேட்டி சகிதம் வலம்வருவார்கள். பேரிளம் பெண்கள் பட்டுப்புடவை மீது மேட்ச்சாக ஸ்வெட்டர் அணிந்து இடம்பெயர்வார்கள். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோர் எக் காலத்தில் டெல்லி வந்தாலும், அதே வெண்ணிற வேட்டி சட்டையில்தான் இருப்பார்கள். கோடைக் காலத்திலாவது அந்த ஆடை அம்சமாகப் பொருந்திவிடும். ஆனால், குளிர்காலத்திலும் ஸ்வெட்டர் எதுவும் அணியாமல், துளி நடுக்கமும் இல்லாமல் தமிழர் தலைவர்கள் இருப்பதைப் பார்த்து டெல்லிவாழ் தமிழர்களே மிரண்டதுண்டு. வார இறுதி நாள்களில் டெல்லி தமிழ்ச் சங்கத்தில் சிறப்பான நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம். நம்மூர் பிரபலங்கள் நம்மைத் தாண்டித்தான் படியேறிச் செல்ல வேண்டியிருக்கும். மடக்கிப் பிடித்து ஆட்டோகிராஃப் வாங்குவதும் செல்ஃபி எடுத்துக்கொள்வதும் உங்கள் சாமர்த்தியம்!
வெயில் தாங்க முடியாது
தப்பித்தவறி, மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் வந்துவிட்டீர் களேயானால் தலைமுறைக்கும் டெல்லி உங்களுக்குப் பிடிக்காமல் போக வாய்ப்பு உண்டு. வெயில் வெளுத்துவாங்கிவிடும். நாள் முழுதும் வியர்வையில் நனைந்து கொண்டே இருப்பீர்கள். கானாடுகாத்தான் மச்சினர் இந்தக் காலகட்டத்தில் வந்திருந் தால், “ஏயப்பா! இதென்ன ஆப்பிரிக்கா கணக்கா இருக்கு” என்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் ஏறித் தப்பிச் சென்றிருப் பார். எப்படி இருந்தாலும், சுற்றுலாவுக்கென வந்தவர்கள் விட்டேனா பார் என்று டெல்லியையும் சுத்துப்பட்டு சுற்றுலாத் தலங்களையும் சுற்றிப் பார்த்து விட்டுத்தான் செல்வார்கள்.
கடல் இல்லாத மெரினா பீச்
டெல்லிக்குள்ளேயே குதுப் மினார் தொடங்கி செங்கோட்டை வரை எத்தனையோ இடங்கள் உண்டு. டூர் கைடு புத்தகமாக மதனின் ‘வந்தார்கள்… வென்றார்கள்’ எடுத்துவரும் வரலாற்று நேசர்களும் உண்டு. ஆனால், வரிசைக்கிரமமாக எந்தக் கோட்டையை முதலில் பார்ப்பது எனக் குழம்பி ‘கோட்டை’ விடுபவர்களே அநேகம். இந்தியா கேட் என்பது கடல் இல்லாத மெரினா பீச் மாதிரி, ஆற அமர அமர்ந்து பேச அருமையான இடம். அங்கிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை கூப்பிடு தூரம்தான். ராஜபாதையில் (இப்போது - கடமைப் பாதை) ஓர் எட்டு நடந்தால் நாடாளுமன்றம் வந்துவிடும். உரிய பாஸ் வாங்கிச் சென்று பார்க்கலாம். ராகுல் காந்தி தவிர அனைவருக்கும் அனுமதி உண்டு!
ஏகப்பட்ட சந்தைகள்
ப்ளூ லைன் பேருந்துகள் இப்போது இல்லை. அரசுப் பேருந்துகள் நல்லபடியாகவே இயங்கு கின்றன. டெல்லி மெட்ரோ ரயிலில் செல்வதே தனிச் சுற்றுலாவாக இருக்கும். சரோஜினி நகர் மார்க்கெட், லாஜ்பத் நகர் மார்க்கெட் என ஏகப்பட்ட சந்தைகள் இயங்குகின்றன. கன்னாட் பிளேஸ் அருகே பாதாளத்தில் இருக்கும் பாலிகா பஜார் செல்பவர்கள் சற்றே கவனமாக இருக்க வேண்டும். “இது அக்பர் பயன்படுத்திய வெண்கொற்றக் குடை அண்ணா” என்று விலை போகாத குடையைத் தலையில் கட்டிவிடுவார்கள். ஆனாலும், தமிழ்நாட்டிலிருந்து வரும் கொடாக் கொண்டர்கள் இந்திவாலாக்களிடம் தமிழிலேயே தலையில் அடித்துப் பேரம் பேசித் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிவிடுவதும் உண்டு.
தமிழ்ச் சாப்பாடு
மோமோஸ், சமோசா, பாவ்பாஜி, செளமீன், லஸ்ஸி, கைமா, கபாப் என ஏகப்பட்ட உணவு வகைகள் கிடைக்கும். முனிர்கா முதல் இந்திரபுரி வரை எல்லா இடங்களிலும் தமிழ்ச் சாப்பாடு கிடைக்கும். தமிழர்கள் நடத்தும் மெஸ்களில் அவர்களின் அன்பைப் போலவே தாராளமாகச் சோறும் கிடைக்கும். டெல்லியில் ரொட்டியைவிட சப்ஜிக்குத்தான் விலை அதிகம். எனினும் சாம்பார் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பார்கள். சாம்பார் வடையை சர்தார்ஜிக்கள் சப்புக்கொட்டிச் சாப்பிடுவதைப் பார்க்கும் நம்மூர் நான்வெஜ் பிரியர்கள் ஆயுள் பரியந்தம் சைவப் பிரியர்களாகவே மாறிவிட வாய்ப்பிருக்கிறது.
டெல்லியின் மகிமை
டெல்லி வந்தால் அங்கிருந்து ஆக்ரா சென்று தாஜ்மஹாலைத் தரிசிப்பது தமிழரின் குல வழக்கம். அதுவும் உச்சிக் குடுமியைக் கையில் பிடிப்பதுபோல தாஜ்மஹால் கோபுரத்தைப் பிடிக்கும் கோணத்தில் படம் எடுத்துக்கொள்ளாதவர்கள் ஊர் விலக்கம் பெற்றுவிடுவார்கள். ஆன்மிக நாட்டம் கொண்ட வர்களுக்கு ஹரித்வார் - ரிஷிகேஷ், கொண்டாடித் திளைக்க விரும்புபவர்களுக்கு குலுமணாலி என ‘டெல்லிக்கு மிக அருகே’ எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. ஊரிலிருந்து வரும் நண்பர்களுடன் ஒட்டிக்கொண்டு அந்த இடங்களுக்குச் சென்றுவருவார்கள் சில டெல்லிவாழ் தமிழ் நண்பர்கள். அதற்கு ஈடாக இந்தி தெரிந்த கைடாக அவர்களுக்குக் கைம்மாறு கால்மாறு செய்துவிடுவதும் உண்டு.
இதையும் சொல்லியே ஆக வேண்டும். டெல்லியிலேயே வசிப்பவர்களை விடவும் சுற்றுலாவுக்காக ஊரிலிருந்து வருபவர்கள் சுற்றிப்பார்த்த இடங்களே அதிகம். டெல்லியின் மகிமை அப்படி!