

தமிழ் நவீன நாடகங்களுக்கு முறையான ஒளி வடிவமைப்பினை அறிமுகப்படுத்தியவர் செ.ரவீந்திரன். எப்போதும் தனது பெயரை எந்த முன்னொட்டும் பின்னொட்டும் இல்லாது குறிப்பதையே பெரிதும் விரும்புபவர் அவர். பேராசிரியர் என்று யாராவது தெரியாமல் சொன்னால், ‘பேருக்குத்தான் ஆசிரியர்... பேராசிரியர் எல்லாம் வேண்டாம்’ என அவரது வழக்கமான சிரிப்போடு மறுதலிப்பவர். 1943இல் தூத்துக்குடியில் பிறந்து சென்னை, மதுரை, புது டெல்லி என நாடோடி வாழ்க்கையில் பணி ஓய்வுக்குப் பிறகு புதுச்சேரியில் வசித்துவருபவர்.
பொதுவாக நாடக மேடைகளில் ஒளியின் பயன்பாடு என்பது கதாபாத்திரங்களின் முகம், ஒப்பனை, அரங்கப் பின்னணி ஆகியவற்றைப் பார்வையாளர்களுக்குத் துலக்கமாகக் காண்பிக்க வேண்டும் என்கிற அளவிலேயே இருந்துவந்தது. அதன் பிறகு, அடுத்தகட்ட வளர்ச்சியாக மேடையில் நிகழ்த்தப்படும் சாகசங்கள், கனவுக் காட்சிகள், காதல் காட்சிகள் போன்றவற்றைக் காண்பிப்பதற்காக வண்ண வண்ண கண்ணாடித்தாள்கள் ஒட்டப்பட்ட வட்டத்தகரங்கள் மின்சார விளக்கின்மீது பொருத்தப்பட்டு சுழற்றிவிடப்பட்டதுதான் நாடக ஒளி அமைப்பாகக் கருதப்பட்டுவந்தது.
பின்னணியில்லா தொடக்கம்
இத்தகைய சூழலில் 1981இல் சென்னை மியூசியம் அரங்கில், ‘கூத்துப்பட்டறை' ந.முத்துசாமியின் ‘உந்திச்சுழி’ நவீன நாடகத்துக்கான ஒத்திகை நடத்தப்பட்டுக்கொண்டிருந்தபோது, பேராசிரியர் இ.ஆர்.கோபாலகிருஷ்ணனோடு அந்த அரங்குக்கு செ.ரவீந்திரன் சென்றிருந்தார். ந.முத்துசாமியின் அறிமுகம் கிடைத்தது. ஒத்திகை நடைபெற்றுக்கொண்டிருந்த மியூசியம் அரங்கில், நாடகத்துக்குப் பயன்படுத்தப்படும் விளக்குகள் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த ரவீந்திரன் ஆர்வமிகுதியால், ‘இவ்வளவு விளக்குகள் இருக்கின்றனவே… ஏன் நீங்கள் எதையும் பயன்படுத்தவில்லை’ என்று முத்துசாமியிடம் கேட்க, அதற்கு அவர், ‘எங்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது, உங்களுக்குத் தெரியுமானால் பயன்படுத்துங்கள்’ என்று கூற... அன்றிலிருந்து தனது ஒளி வடிவமைப்புப் பயணத்தைத் தொடங்கியவர் செ.ரவீந்திரன்.
எழுதப்பட்ட நாடகப் பிரதிக்கு மேலும் அதிகமான பொருளைத் தரக்கூடிய, மிகப்பெரிய பங்கை வகிக்கக்கூடியது ஒளி அமைப்பு என்ற புரிதலை அன்றிலிருந்து தமிழ் நவீன நாடக இயக்குநர்கள் உணரத் தொடங்கினர். ஏனெனில், கதாபாத்திரத்தின் உணர்வுகள் பார்வையாளர்களின் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், நாடக ஆசிரியர் பார்வையாளனுக்குக் கூற வரும் கருத்து என்ன என்பதை ஒளி அமைப்பின் மூலம் வேறொரு பரிமாணத்தில் பார்வையாளருக்குள்ளே சலனத்தை ஏற்படுத்த முடியும் என்று தனது ஒளி வடிவமைப்பின் மூலமாக உணர்த்தியவர் செ.ரவீந்திரன்.
தூண்டுதல்கள்
ஒளி வடிவமைப்பாளர் பி.ராமமூர்த்தி, அமெரிக்க நாடக ஒளி வடிவமைப்பாளர் ரிச்சர்ட் பில் ப்ரோ ஆகியோரைத் தனது ஆசான்களாகக் கொண்டவர். ‘Lighting is an Anti Social Activity’ என்கிற ரிச்சர்ட் பில் ப்ரோவின் கருத்தைத் தனக்கான வழிகாட்டலாகக் கொண்டு இயங்கிவருபவர். சமூகத்தின் இருண்ட பக்கங்களை நாடகத்தின் வாயிலாகப் பேசும்பொழுது, அதற்கான ஒளி வடிவமைப்பை மேற்கொள்வதன் மூலம் சமூக விரோதச் செயலை ஒளி அமைப்பாளர் என்பவர் மேற்கொள்கிறார் என்று கருதுபவர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் 1971ஆம் ஆண்டிலிருந்து தயாள்சிங் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி, 1985இல் டெல்லி பல்கலைக்கழகத்தின் தற்கால இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுத் துறையில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் 2005ஆம் ஆண்டுவரை பணியாற்றி ஓய்வுபெற்றவர். தனது டெல்லி வாழ்க்கையின்போது, 1972இல் டெல்லியில் ஹங்கேரிய இயக்குநர் ஜோல்தான் ஃபேப்ரியின் ‘Ants Nest’ திரைப்படமும் தேசிய நாடகப் பள்ளியின் அப்போதைய இயக்குநராக இருந்த இப்ராஹிம் அல்காசி இயக்கத்தில் மேடையேறிய அயனெஸ்கோவின் ‘The Lesson’ என்கிற நாடகமுமே திரைப்படம், நாடகம் குறித்து தன்னைச் சிந்திக்கத் தூண்டின என்கிறார் ரவீந்திரன்.
எழுத்துப் பங்களிப்பு
டெல்லியில் தமிழ் நவீன நாடகத்தின் அடையாளமாக விளங்கிய கி.பென்னேஸ்வரனின் ‘யதார்த்தா’ நாடகக் குழுவினரின் ஏறத்தாழ 30 நாடகங்களுக்கு மேல் ரவீந்திரன் ஒளி வடிவமைப்புச் செய்துள்ளார். மேலும், பென்னேஸ்வரனின் ‘வடக்கு வாசல்’, ‘மணற்கேணி’, ‘மணல் வீடு’, ‘தளம்’, ‘The Wagon Magazine’ ஆகிய சிறுபத்திரிகைகளில் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளை எழுதிவந்துள்ளார். தமிழ் மரபுக் கலையான தெருக்கூத்து பற்றிப் பலரும் அறியச் செய்ததில், ‘யாத்ரா’ சிறுபத்திரிகையில் ரவீந்திரன் எழுதிய கட்டுரைகளுக்குப் பெரும் பங்கு உண்டு.
சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகை மூலம் தமிழிலும் க.நா.சு.வின் தூண்டுதல் காரணமாக ஆங்கிலத்திலும் எழுதத் தொடங்கியதாகக் கூறும் ரவீந்திரன், திலீப் குமாரின் த்வனி பதிப்பகத்தின் மூலம் ‘பின்னோக்கிய பார்வையில்’, ‘மனப்பதிவுகள்’ ஆகிய புத்தகங்களையும் போதி வனம் பதிப்பகம் மூலமாக, ‘Tamil Writing Today’, ‘ஒளி உலகின் ஊடாக ஒரு பயணம்’, ‘சினிமா காலத்தில் செதுக்கிய கலை’, ‘ந.முத்துசாமியின் படைப்புலகம்’, ‘தமிழக நிகழ்த்துக் கலை மரபின் வேர்களைத் தேடி’, ‘Influence Studies’, ‘கலை அரங்கமும் திரை அரங்கமும்’ ஆகிய புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
உலகத் திரைப்படங்கள் குறித்த ஆழமான பார்வையைக் கொண்ட செ.ரவீந்திரன் குறைந்தபட்சம் நூறு உலகத்தரம் வாய்ந்த இயக்குநர்களின் திரைப்படங்களையாவது தமிழ் வாசகர்களுக்குச் சிறப்பாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு அடுத்த புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். பம்மல் சம்பந்தம் தனது நாடக மேடை அனுபவங்கள் குறித்து எழுதிய ‘Over Forty Years Before The Footlights’ என்ற புத்தகத்தைப் போன்று தனது எண்பதாவது வயதில், தனது 40 ஆண்டு கால நாடக ஒளி வடிவமைப்பு குறித்த முழுமையான புத்தகத்தை எழுத வேண்டும் என்கிற பேராவலுடன் இயங்கி வருகிறார்.
(நாடக ஒளி வடிவமைப்பாளரும் பேராசிரியருமான செ. ரவீந்திரனுக்குச் சமீபத்தில் 80 வயது நிறைவடைந்தது)
- கே.எஸ்.கருணா பிரசாத்