

நாடகத் துறையில் ஒவ்வொரு நாடகத்தின் வெற்றிக்குப் பின்னணியில் இருக்கும் கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானது. நாடக மேடையில் தங்கள் எதிர்கொண்ட இக்கட்டான தருணத்தைச் சமாளித்த நினைவுகளை கலைஞர்கள் சிலர் பகிர்ந்துகொள்கின்றனர்.
ஒரு நாடகத்தில் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றியபோது, எழுத்தாளர் சந்திரமோகன் வந்து, “மகா பெரியவர்போல வேடமிட்டு நடிக்க ஒருவர் தேவைப்படுகிறார். எந்த நடிகரின் முகம் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்தும்” என்று கேட்டார். வாசுதேவன் என்ற நடிகர் குறித்துக் கூறினேன். சந்திரமோகன், “இப்போதே அவரை மகா பெரியவராக மாற்றவும்” என்றார். அப்போது அதற்குத் தகுந்த உடை என்னிடம் இல்லை. உடனே அருகில் உள்ள காதிபவனில் காவி உடை வாங்கி, அரங்கத்தி லிருந்த மூங்கில் கழியைத் தண்டமாக மாற்றி, பார்வையாளர் ஒருவரிடம் இருந்து மூக்குக் கண்ணாடியைப் பெற்று ஒளிப்படம் எடுத்தோம். மகா பெரியவரை (வாசுதேவன்) பார்த்த வேற்று மதத்தைச் சார்ந்த ஒளிப்படக் கலைஞர், அப்படியே மகா பெரியவர் போல் இருக்கிறார் என்று அவர் காலில் விழுந்து வணங்கினார். அந்த நாடக அரங்கேற்றம் முதல், எனக்குப் பாராட்டு கிடைத்த வண்ணம் உள்ளது. அதேபோல குடந்தை மாலி குழுவின் ‘ஞானபீடம்’ என்ற நாடகத்தில் ஒரு மகானை ‘உருவாக்கியபோது’ கிடைத்த பாராட்டுகளை இன்றும் நினைத்துப் பெருமைப்படுகிறேன். இந்தக் காட்சிகளுக்காக எனக்குப் பல மேடைகளில் பல விருதுகள் கிடைத்ததை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
கலைவாணர் கிச்சா, 50 வருட அனுபவமுள்ள நாடக ஒளி அமைப்பாளர்
‘மழையுதிர்க் காலம்’ என்ற கோடை நாடக விழா நாடகத்தின் ஒரு காட்சியில் ‘டீப்’ செட்டுக்குப் பின்னால் ஒருவர் தீயிட்டுக் கொள்வதுபோல் காட்சி அமைக்க வேண்டும். பொதுவாக நாடக மேடையில் தீயிடுவது ஆபத்தானது. இருப்பினும் ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஒரு வைக்கோல் பொம்மையைத் தீயிட்டுக் கொளுத்தி சமாளிக்கலாம் என்று நினைத்தோம். நாடகம் நடக்கும் நாளில் பொம்மையைக் கொண்டு வருபவர் தனது இயலாமையைத் தெரிவித்துவிட்டார். பிறகு யோசித்து ‘டீப்’ செட்டுக்குப் பின்னால் கொஞ்சம் ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்’ கொடுக்கலாம் என்று நினைத்தேன். உடனே ஒருவரை உடலைக் குறுக்கிய வண்ணம், அலறல் சத்தத்துடன், கை, கால்களை அசைத்துக் கொண்டிருக்கச் சொல்லி, ‘ஸ்மோக் எஃபெக்ட்’ கொடுத்தேன். பிளிக்கரிங் ரெட் லைட் எஃபெக்ட் கொடுத்ததும், காட்சி நன்றாக அமைந்தது. பார்த்தால் நிஜமாகவே தோன்றும் இந்தக் காட்சிக்காக, சிறந்த ஒளி அமைப்புக்கான விருது கிடைத்தது மறக்க முடியாத நிகழ்வு.
குஹ பிரசாத், 30 வருட அனுபவமுள்ள இசை அமைப்பாளர்
ஒருசமயம் ‘யார் பையன்’ என்ற நாடகம் குரோம்பேட்டை கல்சுரல் அகாடமியில் நடந்தது. அப்போது நாடகம் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக எனது லேப்-டாப் ஹேங்க் ஆகிவிட்டது. நிகழ்ச்சிக்குத் தேவையான இசைப் பதிவுகள் அதில் இருந்தன. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அந்த நாடகத்தில் இசைப் பதிவுகள் அவசியம் தேவைப்படும் உணர்வுபூர்வமான காட்சிகள் பல இருந்தன. இசைப் பதிவுகள் இல்லாமல் நாடகத்தில் தொய்வு ஏற்பட்டுவிடும். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளரைத் தொடர்புகொண்டு, “அருகில் ஏதேனும் பள்ளி இருக்கிறதா? அல்லது இங்கு அருகில் யாராவது கீ-போர்டு வைத்துள்ளாரா?” என்று கேட்டேன். அவரும் அருகில் இசை ஆசிரியர் ஒருவர் இருப்பதாகத் தெரிவித்தார். உடனே அவர் இல்லத்துக்குச் சென்று, “கீ போர்டு இருக்கிறதா?” என்று கேட்டேன். அவரிடம் பழைய கீ-போர்டு இருந்தது. நல்ல வேளை தப்பித்தோம் என்று நினைத்து, அதைக் கொண்டு வந்து, அன்றைய நாடகத்தை, கீ-போர்டு இசை உதவியோடு நடத்தி முடித்தோம்.
- கே.சுந்தரராமன்