

திரை கட்டிப் பொம்மைகளை இயக்கும் கலை, சிற்றரங்க நிகழ்த்துக் கலைகளில் ஒன்று. உலகம் முழுவதும் வழக்கத்தில் இருந்த இந்தக் கலை தமிழகத்தில் பொம்மலாட்டம் என்று அழைக்கப்படுகிறது. மரப் பாவை வைத்து நிகழ்த்தப்படுவதால் இது மரப்பாவைக் கூத்து என்றும் அழைக்கப்படுகிறது. “மன்னராட்சியில் அந்தப்புரத்தில் தனித்திருந்த ராணிகள் வெளி ஆடவர் யாரையும் பார்க்கக் கூடாது என்பதால், கலைஞர்கள் தங்கள் முகத்தைத் திரைக்குப் பின்னே மறைத்துக்கொண்டு பொம்மைகளை வைத்துக் கூத்து நிகழ்த்தப்பட்டது. இப்படித்தான் இந்தக் கலை தோன்றியது” என்கிறார் கணநாதர் பொம்மை நாடக சபாவைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் சோமசுந்தரம்.
வள்ளித் திருமணம், அரிச்சந்திரன் கதை, பிரகலாதன் கதை என வழிவழியாக வழங்கி வரும் புராணக் கதைகளே பெரும்பாலும் பொம்மலாட்டத்தில் இடம்பெறும். தற்போது சமூகக் கதைகளும் விழிப்புணர்வுக் கதைகளும் நிகழ்த்தப்படுகின்றன. அருகிவரும் இந்தக் கலையைத் தமிழகத்தில் தற்போது ஐந்தாறு குடும்பங்களே (சேலம், மயிலாடுதுறை, மதுரை) நிகழ்த்திவருகின்றன. அ்தில் சோமசுந்தரத்தின் குடும்பமும் ஒன்று.
திருக்குறள், தேவாரம், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல் போன்றவற்றில் மரப்பாவைக் கூத்து குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பொம்மைகளை இயக்குபவரே பாடுவதோடு, வசனங்களைச் சொல்கிறவராகவும் இருந்தனர். பிற்காலத்தில் பொம்மைகளைச் சிலர் இயக்க, பாடல்களை மற்றவர் பாடும் முறையும் வந்தது. அதுபோல் தொடக்கத்தில் பாடலும் வசனமும் மட்டுமே இருந்தன. காலப்போக்கில் ஆர்மோனியம், தபேலா, டோலக் எனப் பக்கவாத்தியங்களும் இணைந்துகொண்டன. பொம்மலாட்டத்தில் பாடுவதற்குத் திடமான குரல் வளம் வேண்டும் என்பதால், ஆண்களே பெண் கதாபாத்திரங்களுக்கும் குரல்கொடுத்து வந்தனர். பிறகு, பெண்களும் பங்குபெறத் தொடங்கினர்.
எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதால் பொம்மைகள் பெரும்பாலும் கல்யாணமுருங்கை மரத்தில் செய்யப்படும். சிலர் அத்தி மரத்திலும் செய்வதுண்டு. மரத்துண்டுகளைப் பதப்படுத்தி முகம், உடல், கைகள், கால்கள் எனத் தனித் தனியாகச் செய்யப்படும். அவற்றின் மீது ‘மக்கு’ பூசுவது என்று ஒரு நடைமுறை உண்டு. பிறகு, கதாபாத்திரத்துக்கு ஏற்ப அவற்றின் மீது மஞ்சள், இளஞ்சிவப்பு என வண்ணம் பூசப்படு கிறது. சிறு கறுப்புக் கயிற்றின் மூலம் பொம்மைகளின் உடல் பாகங்கள் இணைக்கப் பட்டுக் கயிற்றின் மறு முனை சிறு குச்சியுடன் இணைக்கப்படுகிறது. குச்சியை அசைத்தால் அதற்கேற்பப் பொம்மை அசையும். ஆடை, அணிகலன் அணிவித்தலுக்குப் பிறகு பொம்மைகள் மேடையேறத் தயாராகிவிடும்.
இந்தப் பொம்மைகள் ஒன்றரை அடி முதல் மூன்று அடி உயரம் வரைக்கும் செய்யப்படும். “பொம்மைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தூசி தட்டி, கயிறு மாற்றிப் பராமரித்தால் பல ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும். எங்கள் தாத்தா காலத்துப் பொம்மைகளை இப்போதும் வைத்திருக்கிறோம். முன்பு கோயில் திருவிழா, சித்திரை விழா போன்றவற்றுக்கு எங்களை அழைப்பார்கள். இப்போது கிராமியக் கலைகள் மீது பலருக்கும் ஈர்ப்பு குறைந்துவிட்டது. இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இந்தக் கலையைக் கற்றுக்கொள்கின்றனர். ஆனால், வருமானம் இல்லாததால் வேறு வேலைகளுக்குச் சென்றுவிடுகின்றனர்” என்று இன்றைய நிலையை வேதனையுடன் பகிர்ந்துகொள்கிறார் சோமசுந்தரம்.
சோமசுந்தரம் தொடர்புக்கு: 9364612890