

நம்முடைய பண்பாட்டு வெளியில் அரங்கம் என்கிற கலைவடிவத்தின் இடம் என்ன, அது எவ்வாறு தன்னுடைய வீச்சுகளை விரிவுபடுத்தியது, இன்றைக்கு நாடகத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பது குறித்த புரிதல்தான் ஒரு செறிவான எதிர்கால நாடகத்தை நோக்கி அழைத்துச்செல்ல முடியும். அடிப்படையில் மனிதன் தன்னுடைய மனமகிழ்வையும் சுதந்திரத்தையும் வெளிப்படுத்த கையாண்ட வடிவம்தான் நாடகம்.
அது ஆடலாகவும் பாடலாகவும் ஆடல் பாடல் இணைந்த கூத்தாகவும் வடிவம் கொண்டது. அதன் மூலம் எளிய மனிதன் தன்னுடைய அழகியல் ஈடுபாடுகளையும் சுதந்திரத்தின் எல்லைகளையும் விரிவுபடுத்திவந்திருக்கிறான். சங்க காலத்திலும் பின்னர் வந்த காப்பிய காலத்திலும் நம்முடைய இசை, ஆடல் மரபுகள் குறித்த பல்வேறு செய்திகள் உள்ளன. தொல்காப்பியர் காலத்தில் வாழ்ந்த சாத்தனார் இயற்றிய கூத்த நூல், நடன இலக்கணம், வகைமை குறித்த எண்ணற்ற குறிப்புகள் கொண்ட ஓர் ஆவணமாக விளங்குகிறது. ஆடல் பாடலுடன் ஒரு சிறப்பான செய்தியைச் சொல்வது என்கிற நிலையில் நாடகம் உருவாகிறது.
வேத்தியல், பொதுவியல் ஆகிய பிரிவுகளுடன் மன்னர் சிறப்புகளைச் சொல்லும் அரசவை நாடகங்களும் பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் என மக்கள் வாழ்க்கையைச் சொல்லும் நாடகங்களும் கலாச்சாரத்தின் பகுதிகளாக இருந்திருக் கின்றன. இவற்றின் வளர்ச்சி அடைந்த வடிவங்களாகவே கீர்த்தனை நாடகங்களும் பின்னர் தெருக்கூத்தும் பரவலாக இடம்பெறு கின்றன.
பல்வகை வடிவங்கள்
கும்மி, அம்மானை, பறை, தப்பாட்டம், தேவராட்டம், கணியான் கூத்து எனப் பல்வேறு விளையாட்டு, சடங்குகளுடன் இணைந்த கொண்டாட்ட வடிவங்களாகவே நாடக உணர்வுகள் வெளிப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாகவும் வாய்மொழியாகவும் பல பிரதிகள் காலப்போக்கில் உருவாகி நாடகம் என்ற வடிவம் பரந்துபட்ட மக்களின் அபிமானத் துக்குரிய வடிவமாக நிலைபெற்றுள்ளது.
பொதுவாக, ஓசைகளும் அசைவுகளும் தீவிரமாக மனித மனதை அலைக்கழிக்கும் தன்மை கொண்டவை. அதனால்தான் இலக்கியம் போன்றவை அறிவுபூர்வமான தாக்கங்களுடன் நின்றுவிடும் நிலையில், ஓசைகளையும் அசைவுகளையும் அடிப் படையாகக் கொண்ட நாடகம் போன்ற நிகழ்கலைகள் பல அடிமன உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்பவையாக இருக்கின்றன. படித்தவர் முதல் பாமரர் வரை எல்லாருக்கும் பல சுவையுணர்வுகளை எழுப்பிச் சமூகத் தளத்தில் பரவலான மதிப்பீடுகள் உருவாகக் காரணமாக அமைகின்றன.
விடுதலை உணர்வு
கிராமப்புறப் பாதையில் வண்டிகள் செல்லும்போது சருகுகள் எழுப்பும் ஓசைதான் தன்னுடைய கற்பனைகள் தூண்டப்படக் காரணமாக அமைந்தது என்கிறார் நவீன நாடகக் கலைஞர் முத்துசாமி. உடலும் மனமும் அந்நியமாகிவரும் இன்றைய சூழலில் உடல்தன்மையின் லயத்திலிருந்தே மனிதன் தன்னுடைய மீட்புக்கான சாத்தியங்களை ஆராயவேண்டியுள்ளது.
இந்நிலையில், அரங்கம் ஓர் உயிர் இயக்கத்துக்கான சாத்தியங்களை முன் வைக்கிறது. ஓசைகளும் அசைவுகளும் கொண்ட ஒரு செறிவான மனித இயக்கம் இங்கு சாத்தியமாகிறது. நெடுந் தூரத்தில் வேளாண் நிலத்திலிருந்து ஒலிக்கும் பெண்ணின் பாடலில் உள்ள சோகம் ஒரு கவிஞனின் மனதை அலைக்கழிக்கிறது. இன்று பறை, துடும்பு போன்ற இசைக் கருவிகள் விடுதலை உணர்வின் குறியீடாக நாடகங்களில் ஒலிக்கின்றன. ஒரு சமூகத்தின் நினைவுகளுக்கு உயிரூட்டிச் செயலூக்கம் வழங்குவதற்கான உந்துதலைக் கொண்டது அரங்கம்.
பெருஞ்சினம்
திரெளபதி கூத்துகளில் வெளிப்படும் திரெளபதியின் பெருஞ்சினம் என்ற குறியீட்டின் ஊடாக பல்லவர், சாளுக்கியர் காலகட்டப் போர் நினைவுகள் தூண்டப்படுகின்றன. போரில் மாண்டவர்கள் பற்றிய நினைவுகள், அரசின் வரிவிதிப்புக் கொடுமைகளால் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம், ஊர் திரும்பும் ஏக்கம் எனப் பல்வேறு நினைவேக்கங்கள் தூண்டப்படுவதையும், திரெளபதி கூத்து கிராமத்தின் நினைவாகவே தங்கிவிட்டிருப்பதையும் பார்க்க முடியும்.
பிரசன்னா ராமசாமியின் ‘சக்திக்கூத்து’ நாடகம் திரெளபதியின் குரலில் அரசவை மேலோரின் மெளனத்தைக் கேள்விக்கு உள்படுத்தும் பாரதியின் மனநிலையை இன்றைய காலத்துக்குப் பொருத்திப் பார்க்கிறது; போர்களில் நிகழும் பெண் மீதான ஒடுக்குமுறை, இயற்கை, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசு, மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்த எதிர்ப்புக் குரலாகவும் ஒலிக்கிறது.
முழு மனிதர்களாக உணர்தல்
ஒற்றைக் குரல்களின் ஆதிக்கங்களும் அபாயங்களும் பெருகிவருகிற இன்றைய சூழலில் பன்மைக் குரல்களும் சிறுகதை யாடல்களும் செயல்படும் தளமாக அரங்கம் இயங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன. தொன்மங்கள், காப்பியங்கள், நாட்டுப்புறக் கதையாடல்கள், இசைப்பாடல்கள், கூத்து ஆகியவை நம்முடைய நாடகங்களின் பின்புலங்களாக நம்முடைய கலாச்சாரத்தில் தொடர்ந்து இருந்துவருகின்றன. ஒவ்வொருமுறை நிகழ்த்தப்படும்போதும் காலம், சூழல் மாறுபாடுகளுக்கு ஏற்றபடி மாறுபட்ட தொனிகளும் அர்த்தங்களும் கொண்ட வையாக நாடகங்கள் திகழ்கின்றன. நம்முடைய சமகால அழகியல் அணுகுமுறை களுக்கான ஊக்கமும் உத்வேகமும் பெறக்கூடிய வாய்ப்புகளை இவை வழங்கு கின்றன.
இன்றைய உலகமயமாக்கல் சூழலில் பண்பாட்டு வேர்கள் சிதைந்து, தனிமையில் உழலும் தனிமனிதனைச் சமூகவயப்படுத்தும் வேலையை ஓர் அரங்கமே செய்ய இயலும். அவனை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஸ்பரிசித்து, அவனுடன் ஓர் அந்தரங்கமான உரையாடலை மேற்கொள்ள ஒரு நாடகத்தின் அண்மையே தேவையாக உள்ளது. சமூக, கலாச்சாரரீதியாக ஒடுக்கப்பட்ட மனிதன் தனது வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளைத் தாண்டி இங்குதான் தன்னை ஒரு முழு மனிதராக உணர்கிறார்கள்.
கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட இடம்
தமிழில் சினிமாவின் வரவிற்குப் பிறகு மிகை உணர்ச்சியும் கேளிக்கை மனநிலையும் கொண்ட நாடகங்கள் சூழலை ஆக்கிரமித்த நிலையில், மாறுபட்ட அமைப்பும் சிந்தனையும் கொண்ட புதிய நாடகங்களின் தேவையே நவீன நாடக உருவாக்கத்துக்கான காரணமாக அமைந்தது. பேராசிரியர் சே.ராமானுஜம், ந.முத்துசாமி, மு.ராமசாமி, பிரசன்னா ராமசாமி, மங்கை, பிரளயன், ச. முருகபூபதி போன்றோர் நவீன நாடக இயக்கத்தை முன்னெடுத்தனர். தேசிய நாடகப் பள்ளியில் பயின்ற ரெஜின்ரோஸ், அறிவழகன், மெலடி, கோபி, சந்திரமோகன், சிவபஞ்சவன் போன்ற நாடகப் பயிற்சி பெற்றோர் புதிய நாடக உத்திகள் மூலம் புத்தாக்க அரங்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இளைஞர்கள் சமூகத்துடனான தங்கள் எதிர்பார்ப்புகளையும் கோபங் களையும் வெளிப்படுத்துவதற்கான கலை வடிவங்கள் குறித்த தேடலில் உள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரினாவில் கூடிய இளைஞர்கள் கூட்டம் அதற்கான ஒரு வெளிப்பாடு. தங்கள் படைப்புச் சக்திகளை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதற்கான உடல்வளத்தையும் மனவளத்தையும் பெறுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட இளம் பெண்களும் ஆண்களும் பயிற்சிக்கூடங்களை நாடியபடி உள்ளனர். அவை கலைப் படைப்புகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதோடு உடல், மன உறுதிப்பாட்டுடன் வாழ்க்கைச் சூழலை எதிர்கொள்வதற்கான வலிமையைப் பெற உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய ஒரு நம்பிக்கையே எதிர்கால நாடகச் செயல்பாடுகளுக்கான ஆதாரமாக உள்ளது. அதற்கான காத்திருப்பில் எண்ணற்ற இளம் செயல்பாட்டாளர்கள் இன்று களத்தில் உள்ளனர்.
நாடகத்தளம் என்பது மனிதனுக்குக் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட இடமாக இருக்கிறது. ஒரு நுட்பமான அளவில் அதிகாரத் தகர்ப்பிற்கான இடமாகவும் இருக்கிறது. இந்தச் சிந்தனையோட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் நவீன நாடகக் காலகட்டத்தைப் பார்க்கிறோம். உண்மையில் நவீனம் என்பது மரபுக்கும் பழமைக்கும் எதிரானதன்று. அது கட்டுப்பெட்டித்தனத் துக்குத்தான் எதிரானது. நவீனம் என்பது மரபின் புத்துருவாக்கம் அல்லது நீட்சியே. ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனைகள் செய்யக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு நவீன மனம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
- வெளி ரங்கராஜன்