

ஒவ்வோர் ஆண்டும் எங்கள் பள்ளி ஆண்டு விழாவில் தமிழ், சம்ஸ்கிருத நாடகங்கள் கட்டாயம் இடம்பெறும். நான் அந்தப் பள்ளியில் சேர்ந்த ஆண்டிலேயே (ஆறாம் வகுப்பு) சம்ஸ்கிருத நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். நாடகத்தில் ஒரே ஒரு வசனத்தைத்தான் பேச வேண்டியிருந்தது. அதற்காக ஒன்றிரண்டு மாத காலம் தினமும் ஒத்திகையில் பங்கேற்றேன்.
அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே போன்ற ஒன்றிரண்டு வசனங்கள் பேசும் கதாபாத்திரத்தைப் பெற்று ஒத்திகை என்னும் பெயரில் வகுப்புகளிலிருந்து தப்பித்தேன். ஆண்டு விழா அன்று நாடகத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கும். ‘விக்’ வைப்பதற்காக ஷாம்பூ போட்டு தலைகுளித்துவிட்டு வரச் சொல்வார்கள். வந்தவுடன் இனிப்புடன் கூடிய சிற்றுண்டி விருந்து கிடைக்கும். ஒத்திகையின்போது நம்மை உருட்டி மிரட்டிய ஆசிரியர்கள் “என்ன வேண்டும்? என்ன வேண்டும்” என்று கேட்டுக் கேட்டுப் பரிமாறுவார்கள். அருகில் அமர்ந்து ஊட்டிவிடாத குறையாகச் சாப்பிடவைப்பார்கள். அதன் பிறகு ஒன்றிரண்டு மணி நேரம் ஒப்பனைக் கலைஞரிடம் ஒப்புக்கொடுக்க வேண்டும். அதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டும். ஒப்பனைக்குப் பிறகு கண்ணாடியில் பார்த்தால் நாம் வேறோருவராக மாறிவிட்டது போல் இருக்கும். இடையில் ஒருமுறை தமிழ் நாடகத்தில் வாய்ப்பு கேட்டதற்கு “நீ சான்ஸ்கிரிட் நாடகத்துல நடிச்சாதான் நல்லா இருக்கும்” என்று கூறி எங்கள் பாசத்துக்குரிய தமிழ் ஆசிரியை மறுத்துவிட்டார்.
நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும்போது ‘மார்க்கண்டேயன்’ நாடகம் அரங்கேற்றப்பட்டது. அப்போது வேறு மாணவர்கள் கிடைக்காததால், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களை ஆண்டு விழா நாடகங்களில் ஈடுபடுத்துவதில்லை என்னும் கொள்கை தளர்த்திக் கொள்ளப்பட்டது. எமதூதன். வாயிற்காவலன் என்று துக்கடா வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த எனக்கு ‘மெயின் வில்லன்’ எமனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கணிசமான வசனங்களைப் பேச வேண்டியிருந்தது. நாடகத்தின் நிறைவுக் காட்சிக்கு முந்தைய காட்சியில் சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டிருக்கும் மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசிவிட்டு எமன் ஆணவத்துடன் பேச வேண்டும். அந்தக் காட்சிக்கான நீண்ட வசனத்தை ஒத்திகைகளில் சிறப்பாகப் பயிற்சி செய்திருந்தேன். நாடகத்தில் அதைப் பேசி கைத்தட்டல் வாங்கும் வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால், நாடகம் நடக்கும்போது, நான் பாசக்கயிற்றை வீசியபோது தவறுதலாக ‘லைட்ஸ் ஆஃப்’ என்று சொல்லிவிட்டார்கள். உடனே விளக்குகள் அனைத்தும் அணைந்துவிட்டன.
தவறை உணராமல் மேடைக்குப் பின்னால் இருந்தவர்கள் அடுத்த காட்சிக்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்கள். இருந்தாலும் விடவில்லை. இருளில் நின்றபடியே அந்த வசனத்தைப் பேசிவிட்டுத்தான் மேடையைவிட்டு வெளியேறினேன். பார்வையாளர்களில் தாராள மனம் படைத்த சிலர் மட்டும் கைத்தட்டினர்.