

“தட்சிணசித்ரா உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. இன்றைக்கு ‘கிரிஷ்ணா’ என்கிற தோல்பாவைக் கூத்தைப் பார்க்கப் போறீங்க. அந்தக் காலத்துல 10-15 பேர் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவோம். இன்னைக்கோ நான் ஒரே ஆளுதான் மொத்த நிகழ்ச்சியையும் நடத்துறேன். நானே எல்லா பொம்மைகளையும் ஆட்டணும். கருவிகளை இசைக்கணும். கதாபாத்திரங்களுக்கு வசனம் பேசணும். இது பாரம்பரியக் கலை. ஆனா, இன்னைக்கு தட்சிணசித்ரா மாதிரியான இடங்கள்ல மட்டுமே நடக்குது. அதுவும்கூட எல்லா நாள்லயும் கிடையாது. விடுமுறை நாள்ல மட்டுமே நிகழ்ச்சி நடத்த வாய்ப்புக் கொடுக்குறாங்க. நீங்க விரும்புனா உங்க வீட்டு விசேஷம், கல்யாணம், பிறந்தநாள் விழாக்கள்லயும் இதுபோல நிகழ்ச்சி நடத்தித் தருவோம். இந்த நிகழ்ச்சியோட முடிவுல உங்களுக்கு விருப்பம் இருந்தா, கலைஞர்களுக்கு விரும்புனதைக் கொடுக்கலாம்…”
பெரிய உணர்ச்சிகள் இல்லாமல், சற்றே விரக்தி தொக்கி நிற்கக்கூடிய தொனியில் பாவைக்கூத்துக் கலைஞர் செல்வராஜா பேசுவதைக் கேட்கும்போது, அவர் குரலில் தோய்ந்திருக்கும் வருத்தம் நம் மீதும்கூடக் கவிந்து படர்ந்துவிடக்கூடும். இந்தக் கலையே வாழ்க்கையென்று இருந்துவிட்ட அவர், 70 வயதைக் கடந்துவிட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் அருகேயுள்ள கொளத்தூரில் வசிக்கிறார்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் இன்றி நாட்டார் கலைகளின் வாழும் அருங்காட்சியகமாக அமைதியாக வீற்றிருக்கிறது தட்சிணசித்ரா. சனி, ஞாயிற்றுக்கிழமைகள், விழா நாள்களில் அங்கு சென்றால் தோல்பாவைக் கூத்துக் கலைஞர் செல்வராஜாவின் பாவைக்கூத்தைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குச் சித்திக்கும்.
பன்முகத் திறன் கொண்ட கலை: உலகின் முதல் அசையும் படங்களைக் கொண்ட நிகழ்த்துக்கலை, தோல்பாவைக் கூத்து. திரைப்படம் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்னரே, அசையும் படத்துடன் கூடிய காட்சிகளை, இசையை, வசனத்தைக் கொண்ட நிகழ்த்துக்கலையாக அது திகழ்ந்தது. தோல் பாவைகள் எனப்படும் கதாபாத்திரப் பொம்மைகள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் தத்ரூபமாக வரையப்பட்டவை. இந்தோனேசியா போன்ற தெற்காசிய நாடுகளிலும் பரவியுள்ள இந்தக் கலை, கேரளத்தில் கோயில் சடங்குக் கலைகளில் ஒன்றாக இப்போதும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
தஞ்சை மராட்டிய அரசர்கள் மூலமாக மகாராஷ்டிரத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது இந்தக் கலை. கடந்த நூற்றாண்டில் கூடக் குறிப்பிடத்தக்க அளவு கவனம் பெற்ற ஒன்றாகவே இருந்துவந்தது - குறிப்பாகத் தென் தமிழகத்தில். அதே நேரம் சினிமாவின் வருகை, தோல்பாவைக் கூத்தின் இடத்தை முற்றிலும் பறித்துவிட்டது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
ஒரே நேரத்தில் வெவ்வேறு 10 செயல்பாடு களை நினைவில் வைத்து நிகழ்த்துவதற்காக அறியப்பட்டவர்கள் தசாவதானிகள். இன்றைக்கு அரிய கலையாகிவிட்ட பாவைக்கூத்து நிகழ்த்துக் கலைஞர்களோ, ஒரு நாடகத்தையே செல்வராஜாவைப் போலத் தனியாளாக நிகழ்த்திக் காட்டிவிடுகிறார் கள். எந்தப் பிசிறும் இல்லாமல் ஒரு கதா பாத்திரத்தின் குரலிலிருந்து மற்றொரு குரலுக்கு உணர்ச்சி, ‘பாவ’ங்களுடன் அவர்கள் கூடு விட்டுக் கூடு பாய்வது பார்வையாளர்களை வாய்பிளக்க வைக்கும்.
லேசாக்கும் நகைச்சுவை: கை-பார்வை-காது-பேச்சு ஒருங்கிணைப்பு என்பது பாவைக்கூத்துக் கலைக்கு ஆதார சுருதி. மிக விரைவாக எதிர்வினையாற்றும் திறன் இருப்பவர்களாலேயே இந்தக் கலைக்கு உணர்வுகளை ஊட்டிக் கதாபாத்திரங்களை நம் கண் முன்னால் உயிர்பெற வைக்க முடியும். பாவைக்கூத்துக் கலைஞர்களுக்கு இந்தத் தனித்திறன் கைகூடி வந்திருக்கிறது.
ஒரு கதையைத் தொடங்கிவைத்து, கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கு தெருக்கூத்தில் கட்டியங்காரன், நாடகத்துக் குக் கோமாளி இருப்பதைப் போல பாவைக் கூத்திலும் உண்டு. பாவைக்கூத்தை ரசிக்க வைக்கும், மனதை லேசாக்கும் கலையாக மாற்றுவது இந்தக் கோமாளி கதாபாத்திரமே.
‘கிருஷ்ணா’ பாவைக்கூத்தில், கம்ச ராஜாவாக ஒரு கணத்தில் கர்ஜனைபுரியும் செல்வராஜா, அடுத்த விநாடியே கோமாளிக் கதாபாத்திரத்துக்கு உருமாறி ‘அய்யா, இந்தா வந்துட்டேனுங்க’, ‘முட்டாளா, அது நாந்தானுங்க’, ‘கிருஷ்ணன்தானே, என் பக்கத்து வீட்டுக்காரனுங்க’ எனச் செய்யும் சேட்டைகள் பார்வையாளர்களைப் பிடித்து உட்கார வைத்து விடும்.
அதே கோமாளி ‘ஹேப்பி இன்று முதல் ஹேப்பி’ எனப் பாடிவரும்போது, கோமாளியின் தலையில் மயில் ‘டங்’கென்று கொத்தும்போது குழந்தை களைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவும் வைக்கும். கோமாளியைப் போன்றே நகைச்சுவை புரியும் இரண்டு கதாபாத்திரங்கள் உச்சிக் குடும்பனும் உளுவத் தலையனும்.
பிரகாசிக்காத வாழ்க்கை: “தஞ்சை மராட்டியர்களின் ஆட்சியில் சரபோஜியின் அரசவை தோல்பாவைக் கலைஞர்களாக என் மூதாதையர்கள் இருந்திருக்கிறார்கள். அரச வம்சங்களின் ஆட்சி இல்லாமல் போனபோது, ஊர் ஊராக நாடோடிபோல பாவைக்கூத்து நடத்தியிருக்காங்க. அந்தக் காலத்துல ராத்திரியிலதான் கூத்து நடந்திருக்கு. பொதுவா புராணக் கதைகளையே நிகழ்த்துவோம். என் பெரியப்பா செல்லப்பாதான் இந்தக் கலையில எனக்குப் பயிற்சி கொடுத்தாரு. என்னோட பொம்மைகள்ல சில 90 ஆண்டுகளுக்கு முன்னாடி அவர் செஞ்சவைதான்.
சினிமா வர்றவரைக்கும், தென் தமிழகத்தில் அதிகம் நடத்தப்படுற கலையா தோல்பாவைக் கூத்து இருந்துச்சு. டிவி வந்த பிறகு நிகழ்ச்சி நடத்தக் கிடைச்ச கொஞ்சநஞ்ச வாய்ப்பும் குறைந்தது. இப்போது செல்போன் வந்த பிறகு பாவைக்கூத்தை யாருமே கண்டுக்கிறதில்லை” என ஆதங்கப்படுகிறார் செல்வராஜா.
கமல் நடித்த ‘தசாவதாரம்’ படத்தின் ‘முகுந்தா முகுந்தா’ பாடல் உள்பட பல திரைப்படங்களிலும் செல்வராஜா பணியாற்றியிருக்கிறார். சில விழிப்புணர்வு பாவைக்கூத்துகளையும் நடத்தியிருக்கிறார். ஆனாலும் தோல்பாவைக் கூத்து அவருடைய வாழ்க்கையையோ, அவருடைய சந்ததிகளின் வாழ்க்கையையோ சுடர் விட்டுப் பிரகாசிக்க வைக்கவில்லை. தமிழ்நாட்டில் பொம்மலாட்டம் நடத்தப்படுவதே சொற்பமாகிவிட்ட நிலையில், பாவைக்கூத்து அரிதினும் அரிதாகிவிட்டது.
முற்காலத்தில் அகல் விளக்குகளின் வெளிச்சத்திலேயே தோல்பாவைக் கூத்துகள் நடத்தப்பட்டுவந்தன. இன்றைக்குப் பளிச்சென்று கண்ணைக் கூசவைக்கும் மின்விளக்குகள் வந்துவிட்டன. வசதிகளில் இது போன்ற நவீனம் புகுந்தாலும், மனிதர்கள் உதவியின்றிப் பாவைகள் ஆட முடியாது என்பதுபோல், இந்தக் கலைஞர்களின் வாழ்க்கை ஆட்டுவிப்பார் இன்றி அசைய முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.
செல்வராஜா தொடர்புக்கு: 9446710219