

இந்திய நாடக ஆளுமைகளில் ஒருவரான சப்தர் ஹாஷ்மி தனது மாணவப் பருவத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ‘ஜன நாட்டிய மஞ்ச்’ (JANAM) என்கிற நாடகக் குழுவை உருவாக்கினார். மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்திய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இவர் நாடகங்களை உருவாக்கினார். 34 வயதுக்குள் 24 நாடகங்களில் மையக் கதாபாத்திரத்தில் நடித்து, 4 ஆயிரம் நிகழ்ச்சிகளை அரங்கேற்றியவர் ஹாஷ்மி.
படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தாலும் நாடகத்துக்காக வேலையை உதறி மக்களுக்காக நாடகங்களை நிகழ்த்தினார். மக்கள் கூடும் இடங்களில் வீதி நாடகங்களை நிகழ்த்தினார். தொழிலாளர்களுக்காக ‘மெஷின்’ என்கிற நாடகத்தை 1978இல் நடத்தினார். அர்த்தமுள்ள வசனங்கள் மூலம் அடர்த்தியான விஷயங் களையும் எளிய மக்களுக்குப் புரியவைத்தார். தொழிலாளர் பிரச்சினை, விவசாயிகளின் துயரம், வேலையின்மை, பெண்களுக்கு எதிரான வன்முறை, பணவீக்கம், அரசியல், விலைவாசி உயர்வு போன்று மக்களைப் பாதிக்கும் விஷயங்களை நாடகங்களாக உருவாக்கினார் சப்தர் ஹாஷ்மி. இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்கள், கிராமங்களில் நாடகங்களை அரங்கேற்றினார். மக்களுக்காக நடத்தப்படும் நாடகங்களுக்குத் தேவையான பொருளாதார உதவியை மக்களிடமிருந்தே பெற்றுக் கொண்டார்.
அப்போது ஜனம் நாட்டியக் குழுவில் ஒரே பெண்ணாக, பல்வேறு பெண்களின் கதாபாத்திரங்களை ஒரே நாடகத்தில் ஏற்று நடித்துவந்த மோலோயா, ஹாஷ்மியின் இணையரானார். டெல்லி தொழிற்சாலை ஒன்றில் நடந்த ஒரு போராட்டத்தில் தொழிலாளர்கள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஹாஷ்மி உருவாக்கிய ‘ஹல்லா போல்’ என்கிற நாடகத்தை அவர் நிகழ்த்திக்கொண்டிருந்தபோதே ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தக் கொலை, இந்தியா முழுவதிலும் உள்ள மக்களின் மனசாட்சியை உலுக்கியது. ஹாஷ்மியின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தன் கருத்துகளுக்கும் செயல்களுக்கும் வித்தியாசமின்றி வாழ்ந்த அந்த மகத்தான மக்கள் கலைஞர், இந்தியாவின் வீதி நாடக அடையாளமாக மாறினார்.
சப்தர் ஹாஷ்மியின் குருதி கொட்டிய இடத்தில் மீண்டும் அதே நாடகத்தை முழுமையாக நடத்திக் காட்டினார் மோலோயா. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1 அன்று இதே இடத்தில் நாடகம் நிகழ்த்தப்பட்டுவருவது குறிப்பிடத்தகுந்தது.