தமிழ் நவீன நாடக முன்னோடிகள்

தமிழ் நவீன நாடக முன்னோடிகள்
Updated on
3 min read

உலக அளவில் நாடகத் துறையில் நிகழ்ந்த புதிய மாற்றங்களைக் கவனித்து தமிழ் நாடகத் துறையை நவீனப்படுத்தியவர்கள் பலர். அவர்களில் கவனம் பெற்ற சிலரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம்:

 சே.இராமானுஜம் 

நாடகத்தின் பன்முகங்களை நுட்பமாக அறிந்தவர் பேராசிரியர் சே.இராமானுஜம். பள்ளி நாடகங்கள் - சிறுவர் அரங்கம் என்பதைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு தனது நாடகப் படிப்பை டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் முடித்தார். திருச்சூர் நாடகப் பள்ளியில் உதவி இயக்குநராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். ‘புறஞ்சேரி’, ‘வெறியாட்டம்’, ‘நாற்காலிக்காரர்’, ‘அண்டொர்ரா’, ‘செம்பவளக்காளி’, ‘தங்கக் குடம்’ போன்ற தமிழ் நாடகங்களோடு மலையாள நாடகங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

 ந.முத்துசாமி 

தமிழ் நவீன எழுத்தாளரான இவர்,சிற்றிதழ்களில் தொடர்ந்து இயங்கியவர். ‘நடை’ சிற்றிதழில் நாடகமும், நாடகம் தொடர்பான கட்டுரைகளையும் எழுதிவந்தார். ‘காலம் காலமாக’, ‘தெனாலிராமன்’, ‘சுவரொட்டி’ உள்ளிட்ட பல முக்கியமான நாடகங்களை எழுதியிருக்கிறார். இவரது ‘நாற்காலிக்காரர்’ நாடகம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுவருகிறது. இவர் தொடங்கிய கூத்துப்பட்டறை, தேசிய அளவில் முக்கியமான நாடகக் குழுக்களில் ஒன்று. நாடகப் பங்களிப்புக்காக மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது 2000ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

 கே.ஏ.குணசேகரன் 

நாட்டுப்புறப் பாட்டு, நாடகம், கலைப் பயிற்சியாளர் எனப் பல தளங்களில் செயலாற்றியவர் முனைவர் கே.ஏ.குணசேகரன். கிராமப்புறங்களில் நாடகப் பட்டறைகள் மூலம் நாடகங்களைத் தயாரித்து விழிப்புணர்வு ஊட்டியவர். நாட்டுப்புறக் கலையில் ஆய்வு மேற்கொண்ட இவர், பட்டியல் சாதி மக்கள் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். அவற்றுள் ‘பலியாடுகள்’ குறிப்பிடத்தக்கது. ‘தன்னானே' நாடகக் குழு மூலம் நாடகங்களை உருவாக்கியவர்.

 ஞாநி 

பத்திரிகையாளராகக் கவனம் பெற்றவர் ஞாநி. இவர் ‘பரீக்‌ஷா' என்ற நவீன நாடகக் குழுவை 1978இலிருந்து நடத்திவந்தார். வீதி நாடக முன்னோடியான பாதல் சர்க்கார் உள்ளிட்டோரின் பிற மொழி நாடகங்களைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றி இவர் மேடையேற்றியுள்ளார். சுந்தர ராமசாமி, ந.முத்துசாமி, பிரபஞ்சன் போன்ற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் நாடகமாக எழுதி இயக்கியுள்ளார். சமூகக் கருத்துகள் கொண்ட பல நாடகங்களை இவர் எழுதியுள்ளார். அவற்றுள் ‘பலூன்’, ‘விசாரணை’ குறிப்பிடத்தகுந்தவை.

 புரிசை கண்ணப்பத் தம்பிரான் 

வட தமிழ்நாட்டுப் பகுதியில் வழிபாட்டுச் சடங்கு வடிவமாக நிகழ்த்தப்படும் கூத்துக்கு நவீன வடிவம் கொடுத்தவர் கண்ணப்பத் தம்பிரான். ஓவியர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து இவர் எழுதிய ‘காளி’ நாடகம், நவீன நாடக வெளியில் இவருக்குக் கவனம்பெற்றுத் தந்தது. நாடகத்தில் நிகழ்ந்த மாற்றங்களைக் கூத்திலும் செயல்படுத்த முடியும் என நடத்திக் காட்டியவர். நவீன நாடக ஆளுமைகள் பலருடன் இணைந்து இயங்கினார். பாரதியாரின் ‘பாஞ்சாலி சபத’த்தைக் கூத்தில் நிகழ்த்தினார். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் சிறுகதையையும் கூத்து வடிவமாக நிகழ்த்தியுள்ளார்.

 இந்திரா பார்த்தசாரதி 

இந்திரா பார்த்தசாரதி, ‘கால இயந்திரங்கள்’, ‘நந்தன் கதை’,‘ஒளரங்கசீப்’, ‘போர்வை போர்த்திய உடல்கள்’, ‘கொங் கைத்தீ’ உள்ளிட்ட 10 நாடகங் களை எழுதியிருக்கிறார். பழைய பாதையிலிருந்து விலகி நாசூக்கும் நளினமும் சிந்தனை ஆழமும் கொண்ட நாடகங்களை எழுதியவர் இவர். இவரது ‘ஔரங்கசீப்’ நாடகம் உருதுவில் மொழிபெயர்க்கப்பட்டுப் பலமுறை வெவ்வேறு வட இந்திய நகரங்களில் மேடை ஏற்றப்பட்டிருக்கிறது. சாகித்திய அகாடமி, சங்கீத நாடக அகாடமி விருது ஆகிய இரண்டையும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் இவர்.

 மு.இராமசாமி 

மு.இராமசாமி, தமிழ் நவீன நாடக அரங்கில் முதன்மைச் செயல்பாட்டாளர்களுள் ஒருவர். மதுரையில் ‘நிஜ நாடகக் குழு'வைத் தொடங்கி, தொடர்ந்து நாடகங்களைத் தயாரித்தவர். சங்கீத நாடக அகாடமி நடத்திய முதல் தென் மண்டல நாடக விழாவிலும் தேசிய நாடக விழாவிலும் ‘துர்க்கிர அவலம்’ நாடகம் மூலம் பிற மொழியினரின் கவனத்தை ஈர்த்தவர். ‘தோழர் பெரியார்’ என்ற நாடகம் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் நிகழ்த்தப்பட்டது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறைத் தலைவராகப் பணியாற்றிய இவர், திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துவருகிறார்.

 பிரளயன் 

வீதி நாடக இயக்கத்தில் பிரளயன் குறிப்பிடத்தக்கவர். அவர் ஒருங்கிணைத்த 'சென்னை கலைக் குழு' என்கிற நாடகக் குழுவும் பிரபலம். இவரது நாடகப் பயணம், மக்களோடு இணைந்தது; அதன் நோக்கம், சமூகக் கருத்துகளை நாடகத்தின் வழி மக்களிடம் கொண்டு செல்வதாகும். ‘நாங்கள் வருகிறோம்’, ‘முற்றுப்புள்ளி’, ‘பெண்’ ஆகியவை இவருடைய முக்கிய நாடகங்கள். வீதி நாடகங்கள் மூலம் எழுத்தறிவை வளர்க்கத் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட அறிவொளி இயக்கச் செயல்பாட்டில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. ‘குட்டி இளவரசன்’ என்கிற உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலை இவர் நாடகமாக்கியுள்ளார்.

 அ.மங்கை 

சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ் நாடகப் புலத்தில் நடிகர், இயக்குநர், நாடக ஆசிரியர் என முப்பதாண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வருபவர். குரலற்றவர்களுக்கும் விளிம்பு நிலையினருக்குமான குரலாக சமூக நாடகங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கவிஞர் இன்குலாப் எழுதிய ‘ஔவை', சே.இராமானுஜம் எழுதிய ‘மௌனக் குறம்' உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட நாடகங்களை ‘மரப்பாச்சி’ குழுவுக்காக அ. மங்கை இயக்கியுள்ளார்.

 வ.ஆறுமுகம் 

திருச்சூர் நாடகப் பள்ளியில் நாடகம் பயின்ற வ.ஆறுமுகம், புதுவை  சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் பணியாற்றியவர். ‘பிரளயம்’, ‘சுவரொட்டிகள்’, ‘கோயில்’ ஆகிய நாடகங்களை இயக்கியுள்ளார். இவரது எழுத்தாலும் இயக்கத்தாலும் உருவான ‘கருஞ்சுழி’ என்ற நாடகம் மண்டல நாடக விழா (விஜயவாடா), தேசிய நாடக விழா (புது டெல்லி) ஆகிய இரு நிகழ்வுகளிலும் பங்கேற்றுத் தமிழ் நாடக அரங்குக்குத் தனி மதிப்பைப் பெற்றுத் தந்தது.

 ப்ரஸன்னா ராமஸ்வாமி 

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து நாடகங்களை அரங்கேற்றிவருகிறார் ப்ரசன்னா ராமஸ்வாமி. புராணங்கள், வரலாற்று நிகழ்வுகள், இலக்கியங்கள், சமகாலச் செய்திகள் ஆகியவற்றை இணைத்து நாடகங்களை இயக்கி வருகிறார். பட்டியல் சாதி மக்கள் எதிர்கொள்ளும் அநீதிகளைத் தன் நாடகங்களில் தொடர்ந்து பதிவுசெய்துவருகிறார். மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

 வேலு சரவணன் 

வேலு சரவணன், சிறார் நாடகஅரங்கு சார்ந்த தீவிர செயல் பாட்டாளர். தமிழ்நாட்டில் சிறார் அரங்கு, பள்ளி நாடகங்கள் பற்றிப் பேசினால் வேலு சரவணன் பெயர் உறுதியாக இடம்பெறும். கிராமம் சார்ந்த கதைகளில் தனக்கேயான நிகழ்த்து முறைகளை உருவாக்கியவர். புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப் பள்ளியின் துறைத் தலைவராக உள்ளார். இவருடைய ‘கடல் பூதம்’, ‘குதூகல வேட்டை’ என்னும் இரண்டு சிறுவர் நாடகங்களும் இரண்டாயிரம் முறைக்கு மேல் மேடையேற்றப்பட்டுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in