மரக்கன்று நடுதல்: அறிவியல்பூர்வமாகத்தான் செயல்படுகிறோமா?

மரக்கன்று நடுதல்: அறிவியல்பூர்வமாகத்தான் செயல்படுகிறோமா?
Updated on
3 min read

பெயருக்கு மரக்கன்று நடும் விழா எடுத்து, எந்த வகையான மரங்களை நடுகிறோம், அவை அப்பகுதியைச் சேர்ந்தவையா? இல்லையா? அவற்றை நடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்கிற புரிதல் இல்லாமல் லட்சக்கணக்கில் மரங்களை நடுவதால் எந்தப் பயனும் இல்லை. விதைப் பந்துகளைப் பார்த்த இடங்களில் எல்லாம் வீசி எறிவதால் காடு வளர்ந்து விடாது; ஆற்றோரத்தில் மரத்தை நட்டால் ஆறுகளை மீட்டெடுக்க முடியாது; வெட்டவெளிகளில் யூகலிப்டஸ் மரங்களையும், கடலோர மணற்பகுதிகளில் சவுக்கு மரங்களையும் நட்டால் அது காடாகி விடாது; அயல் மரங்களை ஆயிரக்கணக்கில் நட்டுவிட்டால் நகரங்களுக்குள் காட்டை ஏற்படுத்திவிட முடியாது. இவை எதுவுமே சரியான காட்டு மீட்பு நடவடிக்கைகள் அல்ல.

உலகெங்கிலும் கானகங்கள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றன. உலகளவில் 1990இலிருந்து 17.8 கோடி ஹெக்டர் காட்டுப் பரப்பு அழிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவின் பரப்பளவில் கிட்டத்தட்ட பாதியளவு அழிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை ஓரளவுக்காவது குறைத்துக்கொள்ளவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் இரண்டு முக்கியச் செயல்பாடுகளை முன்னெடுத்தாக வேண்டும். முதலாவது, எஞ்சியிருக்கும் கானகப் பகுதிகளை மேலும் அழிக்காமலும் சீரழிக்காமலும் பாதுகாத்தல்; இரண்டாவது, அழிவுக்குள்ளான, சீரழிவுக்குள்ளான கானகங்களை அறிவியல்பூர்வமான முறையில் சூழலியல்சார் மீளமைப்புச் செய்தல்.

உயர்ந்தோங்கிய மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதி மட்டுமே கானகம் அல்ல. வறண்ட புதர்ச் செடிகள் கொண்ட பகுதிகள், பரந்த புல்வெளிகள், பாலைவனங்கள் யாவும் கானகங்களே! அதாவது, இயற்கையான வாழிடங்கள் அனைத்தையும் கானகங்கள் என்றே புரிந்துகொள்ள வேண்டும்.

அழிந்துபோன கானகங்களைச் சரியான முறையில் மீட்டெடுக்கும் முன் அந்த நில அமைப்பின் நிலவியல், அங்குள்ள இயல் தாவரங்கள், உயிரினங்கள், அப்பகுதியில் உள்ள மக்களின் கலாச்சாரம், அந்த இடம் எந்தச் சூழலியல் மண்டலத்தைச் சேர்ந்தது என்பது குறித்த புரிதல்கள் தேவை.

கானக மீளமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் முன், மூன்று முக்கியக் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். எங்கே செய்ய வேண்டும்? என்ன வகையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்? எப்படி அந்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்?

எங்கே மீளமைக்க வேண்டும்?

எவ்வகையான உயிரினங்கள் எங்கெங்கே வாழ்கின்றன என்பதை வைத்து, உலகில் உள்ள நிலப்பகுதிகளை 800 சூழலியல் மண்டலங்களாகச் சூழலியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் 51 வகை சூழலியல் மண்டலங்கள் இந்தியாவில் உள்ளன; தமிழ்நாட்டில் மட்டுமே ஏழு வகையான சூழலியல் மண்டலங்கள் உள்ளன.

 மேற்கு மலைத் தொடரின் தெற்கேயுள்ள மலையுச்சி மழைக் காடுகள்

 மேற்கு மலைத் தொடரின் தெற்கேயுள்ள ஈர இலையுதிர்க் காடுகள்

 தக்காணப் பீடபூமியின் வறண்ட இலையுதிர்க் காடுகள்

 தக்காணப் பகுதியின் முட்புதர்க் காடுகள்

 கிழக்குத் தக்காணப் பகுதியின் வறண்ட-பசுமைமாறாக் காடுகள்

 மலபார் கடற்கரையோர ஈரக் காடுகள்

 கோதாவரி-கிருஷ்ணா அலையாத்திக் காடுகள்

ஒரு சூழலியல் மண்டலத்தில் நிலவும் இயற்பியல் - உயிரியல் நிலைகளைப் புரிந்துகொள்வதன் மூலம் அங்கே எந்தப் பகுதியில் மீளமைப்புச் செய்யப் பட வேண்டும் எனும் புரிதலைப் பெற முடியும்.

<strong>ப.ஜெகநாதன்</strong>
ப.ஜெகநாதன்

என்ன செய்ய வேண்டும்?

கானக மீளமைப்பு என்றால் எல்லா இடங்களிலும் செடிகளை நட்டு வளர்த்துவிடுவதல்ல. அந்த இடம் ஒரு பரந்த புல்வெளியாகவோ பாறைப்பாங்கான இடமாகவோ நீர்நிலையாகவோ கடலோர மணற்குன்றுகளாகவோ பாலைநிலமாகவோ இருந்தால், அங்கே சென்று அந்த இடத்துக்குச் சம்பந்தமே இல்லாத தாவரங்களை இட்டு நிரப்புவது சரியல்ல. இந்த வகையான வெட்டவெளிச் சூழலியல் தொகுதிகளை, ஆங்கிலத்தில் Open Natural Ecosystems (ONEs) என்பர். இவ்வகையான வாழிடங்கள் பல்லூழிக் காலங்களாக அப்படியே இருப்பவை. இப்பகுதிகளில் மட்டுமே உயிர்வாழப் பரிணமித்த உயிரினங்கள் பல உள்ளன. இவற்றைப் பாழ்நிலங்கள் (wasteland) என்று வகைப்படுத்துவது முறைகேடானது.

எனவே, ஓரிடத்தை மீளமைக்கத் திட்டமிடும் முன் மூன்று முக்கியக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்:

 அந்த இடம் அழிக்கப்படுவதற்கும் சீரழிக்கப்படுவதற்கும் முன்பு என்னவாக இருந்தது?

 அந்த இடத்தின் தற்போதைய நிலை என்ன?

 அந்த இடத்தை எப்படிப்பட்ட இடமாக மீளமைக்க வேண்டும்?

முதல் கேள்வி, அப்பகுதியில் எந்த விதமான உயிர்ப்பன்மை இருந்தது? இந்தக் கேள்வி, அது எந்தச் சூழலியல் மண்டலத்தைச் சார்ந்தது என்பதை அறிந்துகொள்ள வைக்கும். இரண்டாம் கேள்வி, அந்த இடம் எந்த அளவுக்குச் சீரழிந்துள்ளது என்பதையும், மூன்றாம் கேள்வி அப்பகுதியில் உள்ள சீரழிக்கப்படாத அல்லது அழிக்கப்படாத இடத்தைச் (ஏற்புடைய மீளமைப்புப் பகுதி - Benchmark site) கண்டறிவதற்கும், அந்த இடத்தை சார்ந்து நாம் மீளமைக்கத் தேர்வுசெய்யும் இடத்தையும் காலப்போக்கில் கொண்டுவர வேண்டும் என்பதையும் அறியத் தரும்.

எப்படி மீளமைக்க வேண்டும்?

சூழலியல்சார் கானக மீளமைத்தலின் கோட்பாடுகளை அறிந்து, அதன்படிச் செயல்படுதல் அவசியம். முற்றிலும் அழிக்கப்பட்ட அல்லது பல்வேறு மனிதச் செயல்பாடுகளால் சீரழிக்கப்பட்ட (எ-கா: காடுபடு பொருள்களை அளவுக்கு அதிகமாகச் சூறையாடுதல், அதிகப்படியான கால்நடை மேய்த்தல், கள்ள வேட்டை போன்றவை) கானகப் பகுதியை மீளமைக்கும் முன் அங்கே நாம் எந்த வகையில் முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அங்கே தாவரங்களை (மரம், புதர், புற்கள் என அந்த வாழிடத்திற்கு ஏற்ப) நட வேண்டுமா, அப்பகுதிக்குப் பாதுகாப்பு அளிப்பதன் மூலம் அங்கிருந்த இயற்கையான வாழிடத்தை மீளமைக்க முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். சில பகுதிகளில் தாவரங்கள் ஏதும் நடாமல் அந்த வாழிடத்தைச் சீரழிக்கும் காரணிகளைக் கண்டறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்துதல் அல்லது அப்புறப்படுத்துதல் மூலமும் அப்பகுதிகளை மீளமைக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு வாழிடத்தில் இருக்கும் மாசுக்களை அகற்றுதல் அல்லது களைச் செடிகளை அழித்தல் போன்ற செயல்பாடுகளால் அந்தப் பகுதியைச் சீரமைக்க முடியும். இதுபோன்ற தீவிர அறிவியல் நடைமுறைகளின் மூலமாக மட்டுமே காடுகளை மீட்டெடுப்பது சாத்தியம்.

இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட சூழலியல்சார் கானக மீளமைப்புத் திட்டங்களைப் பற்றி கீழ்க்கண்ட வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம்: https://era-india.org/

- ப.ஜெகநாதன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in