

காட்டை ‘மனிதன் வளர்ந்த தொட்டில்’ என்று சொல்வதுண்டு. இப்போது நாம் நம்மை அறியாமலேயே இயற்கையாகக் கொள்ளும் பயங்கள், மகிழ்ச்சிகள் ஆகிய எல்லாமே ஆதி காலத்தில் காட்டு வாழ்க்கையில் பெற்றவை என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
உதாரணமாக, ஆதி நாளில் இருட்டு வந்தால் மனிதர்களுக்குப் பயம்தான். அதற்குக் காரணம், இருளில் சில இரைகொல்லி விலங்குகள் மனிதனைத் தாக்கிவிடும். அந்தப் பயம் இன்னும் நம் மனதில் இருந்துவருகிறது.
அக்காலத்தில் இரவு நேரத்தில் காட்டு விலங்குகள் அருகில் வராமல் இருக்க நெருப்பை வளர்த்து, அதைச் சுற்றி மனிதர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். இன்றும்கூடக் குளிர் நாடுகளில் வீட்டிலேயே கனல் மூட்டிக் குடும்பத்தினர் அனைவரும் அதன் அருகே உட்கார்ந்துகொள்ளும் பழக்கம் உள்ளது.
வீட்டிலேயேதொட்டிகளில் செடி வளர்க்கவும், வீட்டைச் சுற்றி மலர்த் தோட்டம் அமைக்கவும், நாய், பூனை, கிளி, மீன்கள் போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கவும் மனிதனுக்கு ஆசை ஏற்படுவது ஏன்? ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சூழலைத் தற்போது வாழும் இடத்தில் ஏற்படுத்திக்கொள்ள மனிதன் விரும்புவதுதான் இதற்கான காரணம்.
ஊஞ்சலாடுவது என்றால் குழந்தைகளுக்குக் கொள்ளை ஆசை. அதேபோல மரம் ஏறுவதற்கும் ஆசைதான். இதற்குக் காரணம், பல்லாண்டுகளுக்கு முன் நமது மூதாதையர்கள் (common Ancestor குரங்கு பொது மூதாதையரிலிருந்து கிளைத்தவர்கள் நாம்) மரங்களில் குடியிருந்தார்கள் என்பதுதான். குழந்தைப் பருவத்தில் தொட்டிலில் படுக்க விரும்புவதற்கும், சற்று வளர்ந்த பின் ஆடும் நாற்காலியில் அமர்ந்து ஆட விரும்புவதற்கும் மனதில் பதிந்துவிட்ட அந்தப் பழங்காலத்து வாசனைதான் காரணம்.
மேலே கூறியவற்றிலிருந்து தெரிய வருவது என்ன? இன்று நாம் காட்டில் வாழவில்லை என்றாலும், காடு நமக்குள்ளே வாழ்ந்துவருகிறது என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நம்முள்ளே உறங்கிக் கிடக்கும் காட்டின் மீதான பாசம், நாம் எப்போதாவது இயற்கை அழகுமிக்க இடங்களுக்குப் போகும்போது மீண்டும் துளிர்த்துச் சிறிது நேரம் தலைதூக்குகிறது.
நம் வாழ்வோடு பிணைந்த காடுகள் இன்றும் நமது ஆரோக்கியத்துக்கு, ஏன் நாம் உயிர் வாழ்வதற்கே அவசியமாக உள்ளன. அதைப் புரிந்துகொள்ளாவிட்டால் நஷ்டமும் அழிவும் நமக்குத்தான்.
(நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ‘கானகத்து கீதங்கள்’ புத்தகத்திலிருந்து ஒரு பகுதி)
- ஜித் ராய், தமிழில்: கு.ராஜாராம்