மழைநீர் சேகரிப்பு ஏன் தேவை?

மழைநீர் சேகரிப்பு ஏன் தேவை?

Published on

தமிழ்நாட்டில் 2000-2002ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் வறட்சி நிலவியபோது, தமிழ்நாடு அரசு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அறிவித்தது. அதன்படி 2002இல் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்டிடங்களி லும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை உருவாக்க அரசு உத்தரவிட்டது. மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டது.

மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை எப்படி ஏற்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது. மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புத் திட்டம், வரைபடத்தில் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதிக்கப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த அளவுக்கு இத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டியது. அதன் தொடர்ச்சியாக சாதாரண வீடு தொடங்கிப் பெரிய கட்டிடங்கள்வரை மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் துரித கதியில் அமைக்கப்பட்டன.

ஆனால், பெரும்பாலான கட்டிடங்களில் பெயரளவுக்கு மட்டுமே கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அரசு இதில் காட்டிய முழு ஈடுபாட்டை மக்கள் காட்டவில்லை. மேலும் மழைநீர்க் கட்டமைப்புகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்ய அரசின் கண்காணிப்பும் இல்லாமல் போனது. மேலும் கட்டமைப்பை ஏற்படுத்தியவர்கள் அதை முறையாகப் பராமரிக்கவில்லை. அதனால், மழைநீர் சேகரிப்புத் திட்டம் அடுத்த சில ஆண்டுகளிலேயே தொய்வைக் கண்டது. அதே நேரம் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை முறையாக உருவாக்கித் தொடர்ச்சியாகப் பராமரிப்பவர்கள், மழைநீரை வீணாக்காமல் சேகரித்து, அதனால் பயன்பெற்றுவருவதைப் பல பகுதிகளில் இன்றும் பார்க்கலாம்.

இன்றும் தமிழ்நாட்டுக்கு இது தேவையான திட்டம்தான். கோடைக்காலத்தில் இதை உணராதவர்கள் இருக்கமாட்டார்கள். தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை அளவு ஆயிரம் மி.மீக்கு மேல். இது தமிழ்நாட்டின் குடிநீர், பாசனத் தேவைக்குப் போதுமானதுதான். ஆனால், இந்த மழையால் கிடைக்கும் தண்ணீரைச் சேகரிப்பதில்தான் சிக்கல். குறிப்பாகப் பெய்யும் மழையில் வெறும் 14% மட்டுமே பூமிக்குள் இறங்குகிறது; 10% மட்டுமே மண்ணில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். நகர்ப்புறங்களில், மண் சாலைகள் இல்லாததால் மழைநீரைச் சேகரிப்பதில் சிக்கல்கள் தொடர்கின்றன. இது மாற வேண்டும் என்றால், தொலைநோக்குப் பார்வையில் மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்க வேண்டும். இதை ஒரு மக்கள் இயக்கமாகவும் மாற்ற வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in