

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் நீர் இருக்கிறது. நம் கண்களுக்குத் தெரியாத அந்த நீர்தான், மறைநீர். இது ஆங்கிலத்தில் Indirect water, Virtual water, Embedded water போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சருகாகக் காய்ந்திருக்கும் காகிதத்திலும் கணினியிலும் திறன்பேசியில் கூடவா நீர் இருக்கிறது என்றால், ஆம் இருக்கிறது. ஒரு பொருளின் உற்பத்தி, தயாரிப்பு, சேவை என அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்படும் மறைநீர், அதன் கடைசிக் கண்ணியில் இருக்கும் நுகர்வோரான நம் கண்களுக்குத் தெரிவதில்லை.
உதாரணத்துக்கு, ஒரு கைப்பிடிச் சோற்றை வடிக்கச் செலவழிக்கப் படும் தண்ணீரின் அளவு எவ்வளவு எனக் கேட்டால் அரிசியைக் களையவும் அதைச் சமைக்கவும் பயன்படுத்தப் படும் தண்ணீரின் அளவைச் சொல்லிவிடுவோம். உண்மையில் விதை நெல்லில் இருந்து தொடங்குகிறது நீரின் கணக்கு. நாற்றுவிடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடைக்குப் பிறகு நெல்லை வேகவைத்து அரிசியாக்குதல், அரிசியைக் கடைகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து என ஒவ்வொரு நிலையிலும் செலவிடப்படும் தண்ணீரின் அளவு நமக்குத் தெரியாது. இவை எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு கைப்பிடிச் சோற்றின் மறைநீர் அளவு. இதேபோல் ஒவ்வொரு பொருளுக்கும் அளவுண்டு.
சிறிய ரக காருக்கு52,000 முதல் 83,000 லிட்டர்வரை தோல் ஷூக்களுக்கு8,000 லிட்டர்கைப்பேசி12,760 லிட்டர்பருத்திச் சட்டை2,720 லிட்டர்பருத்திக் கால்சட்டை10,850 லிட்டர் பொருள்களின் தயாரிப்புக்குச் செலவிடப்படும் மறைநீரின் தன் மையை வைத்து அவற்றை மூவகை நீர்த் தடமாகப் பிரிக்கிறார்கள்.
நீல நீர்த்தடம்: தயாரிப்பு/உற்பத்திப் பணிகளுக்கு ஏரி, குளம், ஆறு போன்ற மேற்பரப்பு நீர், நிலத்தடி நீர் போன்றவற்றைப் பயன்படுத்துவது.
பச்சை நீர்த்தடம்: நேரடியாகவோ ஆவியாக்கியோ மழைநீரைப் பயன்படுத்துவது.
சாம்பல் நீர்த்தடம்: பொருள்களின் தயாரிப்புக் குப் பயன் படுத்தப்பட்ட நீரைச் சுத்திகரித்து வெளியேற்ற நன்னீரைப் பயன்படுத்துவது.
அரிய உலோகங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் கைப்பேசி போன்றவற்றுக்கு உலோகங்களைத் தோண்டியெடுக் கும் சுரங்கப் பணிகளிலிருந்தே தண்ணீர் செலவிடப் படுகிறது. ஆடைகளும் தோல் பொருள்களும் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் அதிகமான தண்ணீரைக் கோருபவை. அதனால்தான் பல்வேறு நாடுகளும் மறைநீர் அதிகம் தேவைப்படும் பொருள்களை உற்பத்தி செய்யாமல், வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்கின்றன. இதன்மூலம் இவற்றின் தயாரிப்பில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்கள் செலவழிக்கும் தண்ணீரையும் சேர்த்து அவர்கள் மிச்சப்படுத்துகிறார்கள். அந்நியச் செலாவணி யால் கிடைக்கும் வருமானத்தைவிடத் தங்கள் நாட்டின் நீர் வளம் முக்கியம் என்பதை அந்த நாடுகள் உணர்ந்திருக்கின்றன.
மென்பொருள் துறை, கால் சென்டர், பிபீஓ போன்ற பணிகளை வளர்ந்த நாடுகள் பிற நாடுகளில் உள்ள பணியாளர்களைக் கொண்டே பெரும்பாலும் மேற்கொள்கின்றன. ஊதியம் குறைவு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் மறைநீரைச் சேமிப்பதுதான் மற்றுமொரு முக்கியமான காரணம்.
நாட்டின் பொருளாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடைய மறைநீரைச் சேமிப்பதில் நாம் மூன்று வழிகளில் பங்கேற்கலாம். பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பது, மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகிய மூன்றையும் செய்வதன்மூலம் மறைநீரைச் சேமிக்கலாம். நாம் தூக்கியெறியும் ஒவ்வொரு பொருளிலும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் மறைந்திருக்கிறது என்கிற கவனத்துடன் செயல்படுவோம்.