

தமிழ்நாட்டின் நீர்த்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டும் நீர் ஆதாரங்கள் சுருங்கிக்கொண்டும் இருக்கின்றன. இந்தப் பின்னணியில், வரும் காலங்களில் நீர்ப் பற்றாக்குறையைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து நீரியல் நிபுணர், பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் உடனான உரையாடல்:
தமிழ்நாட்டில் வரும் காலங்களில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சினைகள் எப்படி இருக்கும்? அதை நாம் எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?
வரும் காலங்களில் நீர்த்தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகும். முன்பெல்லாம் விவசாயத்துக்கு மட்டும்தான் நீர் அதிகமாகத் தேவைப்பட்டது. இப்போது தொழிற்சாலைகள், நகர்ப்புறத் தேவைகள் எனப் பல துறைகளுக்குத் தண்ணீர் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. நம்மிடம் உள்ள ஒரே நீராதாரம் மழைதான். காலநிலை மாற்றத்தின் காரணமாக மழை எப்போது வரும், எத்தனை நாள்களுக்கு மழை வரும், எவ்வளவு மழைபெய்யும் என்பதை எல்லாம் துல்லியமாகக் கணிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். குறைந்த நாள்களில் அதிக மழை என்பதே நடைமுறை ஆகிவிட்டது. ஆக, நாம் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளின் 24 மணி நேரமும் மழை பெய்கின்ற காலத்தில் நீரைச் சேகரித்துவைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
2019இல் சென்னை கிட்டத்தட்ட பூஜ்ய நாள் (Day Zero) அபாயத்தை எதிர்கொண்டது. மீண்டும் சென்னைக்கோ தமிழ்நாட்டின் பிற நகரங்களுக்கோ அப்படி நிகழ வாய்ப்புள்ளதா?
முற்றிலும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை என்னும் நிலைமைதான் பூஜ்ய நாள். கடற்கரை நகரம் என்பதால் சென்னைக்கு அந்த ஆபத்து இல்லை. ஏரிகள், குளங்கள், குட்டைகள் என நீரைச் சேகரித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன. மேலும் உப்புத்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் நிலத்தடி நீரும் நமக்கு இருக்கிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஆண்டுக்குச் சராசரியாக 1,400 மி.மீ மழை பெய்கிறது. கடந்த 50-60 ஆண்டுகளில் சில ஆண்டுகளில் மட்டுமே ஆயிரம் மி.மீக்கு குறைவான மழை பதிவாகியிருக்கிறது. அப்படிப் பெய்கின்ற மழைநீரை முழுமையாகச் சேகரிப்பதுதான் புத்திசாலித்தனமான உத்தியாக இருக்க முடியும்; பூஜ்ய நாள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், அந்த பூஜ்ய நாள் மேற்கு மாவட்டங்களில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
நீர் சார்ந்து கிராமப்புறங்களில் இருக்கும் பிரச்சினைகள் என்ன?
கிராமங்களில் நிலைமை கவலைக்குரியதாகத் தான் இருக்கிறது. 1965இல் பசுமைப் புரட்சிக்குப் பிறகு குறுகிய காலப் பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் ஒரே விவசாய நிலத்தில் மூன்று போகம் பயிர்செய்யலாம் என்னும் நிலைமை வந்தது. அதற்கு ஏரி, கால்வாய்ப் பாசனங்கள் போதுமான பயனளிக்கவில்லை. எனவே, கிணற்றுப் பாசனத்தை அதிகளவில் நாட வேண்டியிருந்தது. இதனால் எல்லா இடங்களிலும் ஆழ்துளைக் கிணறுகளையும் திறந்தநிலைக் கிணறுகளையும் வெட்டிவிட்டனர். இதனால் கடந்த 30 வருடங்களில் மிக அதிகளவில் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டது. நிலத்துக்குள் செலுத்தப்படும் நீர் மிகவும் குறைவு, நிலத்திலிருந்து எடுக்கப்படும் நீர் மிக அதிகம். இது இத்தனை ஆண்டுகளாக நாளுக்கு நாள் அதிகரித்து இப்போது நிலத்தடி நீர் முற்றிலும் அற்றுப்போகும் ஆபத்தான கட்டத்தை அடைந்துவிட்டோம். மேற்கு மாவட்டங்களில் சில பகுதிகள் ஏற்கெனவே இப்படி ஆகிக்கொண்டிருக்கின்றன. எனவே, கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. அங்கும் நிலத்தடி நீரைப் பெருக்குவது எப்படி என்பது முக்கியமான கேள்வியாக இருக்கப் போகிறது. இதற்கு ஒரே தீர்வு எங்கெல்லாம் பயன்படுத்தப்படாத, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளும் திறந்தநிலைக் கிணறுகளும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அவற்றை மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளாக மாற்ற வேண்டும். இருக்கும் குளம் குட்டைகளிலும் மழைநீரைச் சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.
இன்னொரு பக்கம் 14 கடலோர மாவட்டங்களில் நிலத்தடி நீர் நிறைய உறிஞ்சி எடுக்கப்படுவதால் கடல்நீர் கலந்து நிலத்தடி நீர் உப்புத்தன்மை வாய்ந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது; இதை நாம் தடுக்க வேண்டும். நிலத்தடி நீரை மேம்படுத்திப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் நீர்நிலைகளின் நிலை என்ன? எஞ்சியிருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மக்கள் நகர்ப்புறங்களில்தான் வசிக்கிறார்கள். இதனால் ஏரிகள், குளங்கள், வரத்துக் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், மூன்றாம் முழுமைத் திட்டம் (Third Master Plan) தொடங்கியிருக்கிறது. இதுவரையிலான இரண்டு திட்டங்களில் என்னென்ன தவறுகள் நடந்திருக்கின்றன என்பதைப் பார்த்து அவற்றை எல்லாம் களைய வேண்டும். ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படக் கூடாது. சிறு ஆக்கிரமிப்பு இருந்தால்கூட உடனடியாக அகற்றப்பட வேண்டும். எஞ்சியிருக்கும் நீர்நிலைகள், ஈரநிலங்கள் (inland and coastal wetlands) அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நீர்நிலைக்கும் தண்ணீர் வருவதற்கான வழி உள்ளது. அதற்கான வரத்துக் கால்வாய், உபரித் தண்ணீர் செல்வதற்கான கால்வாய்களைச் சரிசெய்ய வேண்டும்.
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கும் நீரைப் பாதுகாப்பதற்கும் பொதுமக்கள் அவசியமாகக் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
‘என் நிலத்தில் பெய்கின்ற மழைநீர் என்னுடைய நீர், அதை நான் எப்பாடுபட்டாவது சேமிப்பேன்’ என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். ஆனால், பலர் மழை பெய்தால் அதை எப்படியாவது சாலையை நோக்கி வெளியேற்றிவிடுகிறார்கள். அப்படிச் செய்துவிட்டு வெள்ளம் வந்துவிட்டது என்பார்கள். நிறைய படித்தவர்கள் செல்வச்செழிப்பு மிக்கவர்களே இதைச் செய்கிறார்கள். ‘எனது தேவைக்கு நிறைய நீர் வேண்டும் ஆனால், வீட்டு வாசலில் ஒரு சொட்டு நீர் நிற்கக் கூடாது’ என்பது என்ன மாதிரியான அணுகுமுறை? அனைவரும் தனது வசதிகளுக்கும் எல்லைகளுக்கும் உட்பட்டவரை மழைநீரைச் சேகரிக்க வேண்டும்
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், தொழிற்சாலைகள், மிகப்பெரிய நிலப்பகுதியில் அமைந்துள்ள அரசு நிறுவன வளாகங்கள் - இவை தமது வளாகங்களில் பெய்யும் மழைநீரைச் சேகரிக்கின்றனவா? தண்ணீரை மறுசுழற்சி செய்கின்றனவா? பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தாங்கள் பெற்ற, பயன்படுத்திய, சேகரித்த நீர் குறித்த கணக்கை வெளியிட வேண்டும் (Water budget).
ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீரை மறுசுழற்சி செய்ய முடியும். குடிநீர்ச் சுத்திகரிப்புக் கருவியிலிருந்தும் குளிரூட்டிகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீரைப் பயன்படுத்தலாம். சமையலறையிலிருந்து வெளியேறும் தண்ணீரைச் செடிகளுக்குப் பாய்ச்சுவது உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். தண்ணீர்ச் சிக்கனத்தைக் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு சொட்டுத் தண்ணீருக்கும் நாம் கணக்கு வைத்திருக்க வேண்டும். ‘நீரின்றி அமையாது’ என்று சொன்னால் மட்டும் போதாது. அனைவரும் அதை உணர்ந்து, அதன்படி செயல்பட வேண்டும்.