

நாடு சுதந்திரமடைந்து 40ஆம் ஆண்டை நெருங்கிய வேளையில்தான் இந்தியாவில் நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றங்களும் நுகர்வோர் தீர்வு ஆணையங்களும் உருவாக்கப்பட்டன. இதற்கு 1986ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (COPRA) பாதை அமைத்துக் கொடுத்தது.
நுகர்வோருக்கு எந்த வடிவில் ஏற்படும் பிரச்சினைகளையும் சேவைக் குறைபாட்டைக் களையவும் அது தொடர்பான தகராறுகளைத் தீர்க்கவும், நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கவுமே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அதற்குரிய கட்டமைப்புகள் மாவட்ட, மாநிலம், தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டன. தேசிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி விற்பனையாளரால் ஏமாற்றப்பட்டதாகவோ சுரண்டப்பட்டதாகவோ நுகர்வோர் உணர்ந்தால், அந்த விற்பனையாளருக்கு எதிராக நுகர்வோர் வழக்கு தாக்கல் செய்ய இச்சட்டம் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. தேசிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986க்குப் பதிலாக தேசிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019ஐ மத்திய அரசு நிறைவேற்றியது. இந்தப் புதிய சட்டம் 2020இல் அமலுக்கு வந்தது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்த சூழலில், புதிய சட்டத்துக்குத் தேவை ஏற்பட்டது. தேசிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி மூன்றடுக்கு நுகர்வோர் நீதிமன்றங்கள் நாட்டில் செயல்பட்டு வருகின்றன.