எல்லா கதைக்கும் முடிவைத் தேடாதே

எல்லா கதைக்கும் முடிவைத் தேடாதே
Updated on
2 min read

வட சென்னையின் இதயப் பகுதியாக விளங்கிய ஜார்ஜ்டவுன் பகுதியைச் சேர்ந்தவன் நான். ஒற்றைவாடை சாலையின் (Walltax Road) ஒருமுனையில் தொடங்கி பிராட்வே சாலையை இணைக்கும் நெடிய அம்மன் கோயில் தெருவில்தான் என்னுடைய வீடு இருந்தது. நீண்ட அந்தத் தெருவோடு பல கிளைத் தெருக்கள் இணையும். எங்கள் வீட்டின் இரண்டுபக்கத்திலும் இரண்டு கடைகளை வாடகைக்கு விட்டிருந்தோம். அதில் ஒன்றில் மின்சாதனப் பொருள்களை விற்கும் கடையும் மற்றொன்றில் பலசரக்குக் கடையும் இயங்கிவந்தன.

என்னுடைய இந்த நினைவுக் குறிப்பின் காலம், ஐந்து, பத்து, 25, 50 பைசா நாணயங்கள் புழக்கத்தில் இருந்த காலம்; தையல் இலை, தேங்காய் பத்தை (தேங்காய்த் துண்டு) போன்றவை பலசரக்குக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட காலம். எங்களின் வீட்டிலேயே வாடகைக்கு இருந்த பலசரக்குக் கடை அண்ணாச்சியின் பெயர் ராஜாமணி. ஆனால், நான் சொல்லப்போவது அவரைப் பற்றி இல்லை.

எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் பத்து வீடுகள் தள்ளிப் புதிதாக ஒரு பலசரக்குக் கடை வந்தது. ஏற்கெனவே அந்தத் தெருவில் இருந்த பல கடைகளை மீறி அவரிடம் பொருள்களை வாங்குவதற்குக் கூட்டம் கூடியது. இத்தனைக்கும் அவரிடம் மற்ற கடைகளைவிடப் பத்து பைசா விலை கூடுதலாக இருக்கும். அந்தக் காலத்தில் கலப்படம் மிகவும் பிரபலமானதாக இருந்தது. ஆனால், அவரின் கடையில் விற்கப்படும் பொருள்கள் சுத்தம் செய்யப்பட்டு நேரடியாகச் சமையலுக்குப் பயன்படுத்துவதற் கான தரத்தில் இருந்தது நல்ல விற்பனைக்கான காரணமாகச் சொல்லப்பட்டது. ஓர் உக்கிரமான பெண் தெய்வத்தின் பெயர் அவருக்கு அமைந்திருந்தாலும், அதற்கு மாறான புன்னகையுடன் தோற்றப்பொலிவோடும் அவர் இருந்ததும் மற்றுமொரு முக்கியக் காரணம். அத்தோடு அவரிடம் மேலோங்கியிருந்த புத்தகம் படிக்கும் பழக்கம். பள்ளிப் புத்தகங்களை எடைக்கு வாங்குவதில்லை என்னும் கொள்கை முடிவே எடுத்திருந்தார். புத்தகங்களின் பக்கங்களைக் கிழித்துப் பொட்டலம் கட்டும் பலசரக்குக் கடைக்காரர்களிலிருந்து, கிழித்த பக்கங்களில் இருக்கும் அரிய தகவல்களை ஓர் அறிவிப்புப் பலகையில் இடம்பெறச் செய்தது அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது.

ஜெயகாந்தன், சுஜாதா, லக் ஷ்மி, இந்துமதி, சிவசங்கரி, அசோகமித்திரன், சு.சமுத்திரம், ராஜேஷ்குமார், புஷ்பா தங்கதுரை எனப் பல எழுத்தாளர்கள் அவர் அளித்த புத்தகங்களின் வழியாகவே எனக்கு அறிமுகமானார்கள். ஜெய காந்தனின் ‘யுகசந்தி’ சிறுகதைத் தொகுப்பின் ஒரேயொரு கதையைப் படித்துவிட்டு “கதையை அவர் முடிக்கவேயில்லை” என்று புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தேன். “எல்லாக் கதைகளையும் எழுதுபவரே முடிக்க வேண்டும் என்பதில்லை. படிப்பவர்களும் அவர்கள் விரும்பியபடி முடித்துக்கொள்ளலாம். உன்னுடைய சூழ்நிலைகளுக்கான சுய முடிவை நீதானே எடுக்க வேண்டும். அதைத்தான் ஜெ.கேவின் கதைகள் உணர்த்தும்” என்று படிப் பதில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியவர் அவர்.

அதேபோல் ஒருவர் எழுதும் படைப்புகளை வைத்து அவரை எடைபோடக் கூடாது என்பார். இன்னும் கிரிக்கெட், அரசியல், ஆன்மிகம், அறிவியல், சினிமா என அவரிடம் பேசுவதற்கு விஷயங்கள் பல இருந்தன. பின்னாளில் பத்திரிகை களில் வெளிவரும் என்னுடைய கட்டுரைகள், பேட்டிகளையும் ஆர்வமாகப் படிப்பார். விமர்சிப்பார். உரிமையாகக் கண்டிக்கவும் செய்வார்.

திடீரென்று ஒரு நாள் குளியலறையில் அவர் வழுக்கிவிழுந்து உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வந்தது. அவ்வளவு ஆணித்தரமாக தன்னுடைய கருத்துகளை முன்வைப்பவர். “அவரின் கருத்தில் இருந்த உறுதி, காலில் ஏன் இல்லாமல் போய்விட்டது?” - இந்தக் கேள்வியைப் பலமுறை எனக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் அவர் இருந்தால் இதற்குப் பதில் சொல்லியிருப்பார்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in