

இணைய வசதியும் திறன்பேசியும் நம்மிடம் இருந்தால்போதும், நமக்குத் தேவையான எந்தப் பொருளையும் உலகின் எந்த மூலையிலிருந்து வேண்டுமானாலும் வீட்டிலிருந்தே வாங்க முடியும்.
ஆன்லைன் நுகர்வு எனப்படும் இந்தப் புதிய நுகர்வுக் கலாச்சாரம், வயது வித்தியாசம் இன்றி அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக இன்றைக்கு மாறியிருக்கிறது. பொருள்களைத் தேடி நாம் செல்லும் நிலை மாறி, பொருள்கள் நம்மைத் தேடி வீட்டுக்கே வரும் நிலையை ஆன்லைன் நுகர்வு ஏற்படுத்தியிருக்கிறது. எந்தவொரு மாற்றத்திலும் சாதகம், பாதகம் இருக்கும். ஆன்லைன் நுகர்வும் இதற்கு விதிவிலக்கில்லை.
பாதகம்: மோசமான நிலையில் இருக்கும் எந்தவொரு பொருளையும் ஆன்லைனில் விற்பனை செய்துவிடலாம். கறை நீக்கி, வண்ணம் பூசிக் கொஞ்சம் மெருகேற்றி இந்தப் பொருள் புதிதுதான் என வாடிக்கையாளரை நம்ப வைக்கும் வகையில் படம் எடுத்துப் போலியான சில விமர்சனங்களையும் (Product Reviews) தட்டிவிட்டு விற்பனைத் தளத்தில் பதிவேற்றிவிட்டால் போதும். நம்மில் பலர் இதுதான் உண்மை என நம்பி ஆர்டர் செய்து ஏமாந்துவிடுவோம். ஆன்லைன் நுகர்வுக் கலாச்சாரத்தின் முக்கியப் பிரச்சினை இது.
கவனம் தேவை: இது போன்ற ஆன்லைன் மோசடியில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்குச் சற்றுக் கவனமாக இருந்தால்போதும். நாம் வாங்க விரும்பும் பொருள் குறித்த அனைத்து விமர்சனங்களையும் படிப்பது, விற்பனையாளரின் ரேட்டிங்கை மட்டும் பார்த்து ஏமாறாமல், அந்தப் பொருள் குறித்த விவரங்களைப் பிற ஆன்லைன் தளங்களில் சரிபார்க்க வேண்டும். பொதுவாக, ஒரு நம்பகமான நிறுவனத்தின் தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பது நல்லது. விலை குறைவு என்கிற ஒரே காரணத்துக்காகப் பெயர் தெரியாத நிறுவனத் தயாரிப்புகளை வாங்குவதைத் தவிர்ப்பதன் வழி ஏமாறும் சாத்தியத்தைக் குறைக்க முடியும். விலை உயர்ந்த நகை, ஆடை, வீட்டு உபகரணப் பொருள்கள் போன்றவற்றை வாங்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பொருளை அல்லது பணத்தைத் திரும்பப் பெறுதல், பொருளை மாற்றுதல் போன்ற அனைத்து விதிமுறைகளையும் தெளிவாகப் படித்த பின் ஆர்டர் செய்ய வேண்டும்.
அச்சம் வேண்டாம்: பல பொருள்களுடன் ஒப்பிட்டுச் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க, கூட்டத்தைத் தவிர்க்க, நேரத்தை மிச்சப்படுத்த, நியாயமான விலையில் தள்ளுபடி பெற என ஆன்லைன் நுகர்வு நமக்கு அளிக்கும் சாதகங்கள் ஏராளம் உள்ளன. ஆன்லைன் நுகர்வில் ஏமாற்றப்படும் சாத்தியமுள்ளது என்கிற அச்சத்தில் அதனை முற்றிலும் தவிர்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது.
இணைய விற்பனையைப் பயன்படுத்துவது பல வகையில் வசதியானதுதான். ஆனால், ஆன்லைனில் பொருள்களை வாங்கும்போது கவனத்துடன் இருந்தால்போதும், ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்!