கடவுளும் கன்ஸ்யூமர்களும்!

கடவுளும் கன்ஸ்யூமர்களும்!
Updated on
2 min read

வணிக உலகில் வாடிக்கையாளர்தான் கடவுள். ஆனால், முறையான சேவை கிடைக்காமல் அந்தக் கடவுளே கடும் சிரமத்துக்குள்ளான சம்பவங்கள் நிறையவே உண்டு. ‘ஓ மை காட்’ (2012) இந்தித் திரைப்படம், காப்பீடு விஷயத்தில் இருக்கும் சிக்கலை மையமாகக் கொண்டது. குஜராத்தி (!) நாத்திகரான காஞ்சி லால் (பரேஷ் ராவல்), கடவுளர் சிலைகளை விற்கும் கடையை நடத்துவார்; மறுபுறம் பக்தர்களைப் பகடி செய்வார். ஒரு நாள் மும்பையில் நிலநடுக்கம் ஏற்படும். அதில் அவரது கடை மட்டும் இடிந்து விழுந்துவிடும்.

கடவுளை நிந்தனை செய்ததால் கிடைத்த தண்டனை என்று எல்லாரும் ஏச, கடுப்பாகும் அவர் காப்பீட்டு நிறுவனத்தை அணுகுவார். ஆனால், நிலநடுக்கம் ‘கடவுளின் செயல்’ (Act of God) என்று அவர்கள் கைவிரித்துவிட, கடவுள் மீதே வழக்குத் தொடர முடிவெடுப்பார். பின்னர் கடவுளின் ஏஜென்ட்டுகளாக இருக்கும் மதத் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்படும். மதக் குழுக்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்கும். ஒருகட்டத்தில், கடவுளான கிருஷ்ணரே (வேறு யார்? அக் ஷய் குமார்தான்!) மனிதராக வந்து அவருக்கு உதவுவதாகக் கதை நீளும். நிஜத்திலும் இப்படி நிறைய நிகழ்வுகள் உண்டு.

கைவிரித்த வங்கி!

ஸ்குவாஷ் சாம்பியனான தீபிகா பள்ளிக்கல் நெதர்லாந்து சென்றிருந்தபோது, ராட்டர்டாம் நகர ஹோட்டலில் பணம் செலுத்தத் தனது ஆக்சிஸ் வங்கி டெபிட் கார்டைப் பயன்படுத்தினார். ஆனால், அது சாத்தியமாகவில்லை. பில் தொகையைவிட 10 மடங்கு பணம் அவரது வங்கிக் கணக்கில் இருந்தும் டெபிட் கார்டில் இருந்த சிக்கலால் பணம் செலுத்த முடியாமல் பரிதவித்தார். பிரபல விளையாட்டு நட்சத்திரமான தனது பிம்பம் சிதைக்கப்பட்டதால் மிகவும் வேதனையடைந்தார். வங்கியைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, Force Majeure என்று காரணம் சொன்னது - அதாவது ‘எங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சமாச்சாரம்’ என்று கூறிவிட்டது. வேறொரு விதமாகச் சொன்னால், ‘இது கடவுளின் செயல்’!

சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தீபிகா வழக்கு தொடர்ந்தார். உரிய சேவையை அந்த வங்கி வழங்கவில்லை எனக் கூறி அவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. செலவுக்காகக் கூடுதலாக ரூ.5,000 அவருக்கு வழங்கப்பட்டது. வங்கிகளை முழுமையாக நம்பித்தான் வரவு செலவு கணக்கையே நடத்துகிறோம் என்பதால், அவைதாம் நமது பணத்துக்குப் பாதுகாவல். அதை உணர்த்தும் வகையில்தான் இப்படியான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

நூதனமான நிபந்தனைகள்!

நேரமின்மை, அவசரம், குழப்பம் எனப் பல்வேறு காரணங்களால் ‘நீட்டிய இடத்தில் எல்லாம்’ கையெழுத்துப் போடும் நாம், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் எழுத்துபூர்வமாக வழங்கும் நிபந்தனைகளை வாசிப்பதே இல்லை. பிரச்சினை நிகழும்போதுதான் விபரீதம் நமக்கு உறைக்கும். காப்பீடு தொடர்பான தொலைக்காட்சி விளம்பரங்களில்கூட, நிபந்தனை குறித்த வாசகங்களைச் சொல்லும் குரல் தடதடவென ஓடும். கவனிக்காமல் விட்டால் நம் பாடு திண்டாட்டம்தான்.

2020 ஏப்ரல் 19இல் லூதியானாவைச் சேர்ந்த ஓர் இளைஞர், சாலை விபத்தில் உயிரிழந்தார். ஹெச்டிஎஃப்சி எர்கோ காப்பீடு நிறுவனத்தில் அவர் பாலிசி எடுத்திருந்தார். அவரது உறவினர் ஹர்வன்ஷ் கவுர், இழப்பீடு கோரி அந்நிறுவனத்தை அணுகியபோது அதிர்ச்சி காத்திருந்தது. 150சிசி திறன் கொண்ட பைக் அல்லது ஸ்கூட்டரை ஓட்டும்போது விபத்து நிகழ்ந்தால்தான் காப்பீடு வழங்கப்படும் என நிபந்தனைப் பட்டியலில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அந்த இளைஞர் ஓட்டிசென்று விபத்தில் சிக்கியதோ 346 சிசி திறன் கொண்ட பைக். காப்பீட்டு நிறுவனம் கைவிரித்துவிட்டது. இது குறித்து டெல்லியைச் சேர்ந்த ராஜீவ் மேத்தா சமூக வலைதளத்தில் எழுத, பெரும் விவாதம் எழுந்தது. தங்கள் தரப்பில் நியாயம் இருப்பதாகக் கூறிய அந்நிறுவனம், அந்த இளைஞரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கிவிட்டதாகவும் சுட்டிக்காட்டியது.

மயக்கிய மம்முட்டி விளம்பரம்

‘யார்தான் அழகால் மயங்காதவரோ?’ என்று ஒரு பாடல் வரி உண்டு. கேரளத்தைச் சேர்ந்த சாத்து, நடிகர் மம்முட்டி தோன்றும் விளம்பரத்தில் இந்துலேகா அழகு சோப்பு குறித்த ஜாலத்தில் அப்படித்தான் மயங்கினார். ‘இதைப் பயன்படுத்தினால் செளந்தர்யம் உங்களைத் தேடிவரும்’என்று அந்த விளம்பரம் சொன்னதை நம்பி, சோப்பை வாங்கித் தேய்த்துக் குளித்திருக்கிறார். உண்மையில், மம்முட்டியின் மனைவியாகத் தோன்றும் மாடலின் அழகுதான் அதில் மறைபொருளாகக் குறிப்பிடப்பட்டது. சாத்துவுக்கோ வயது 60ஐத் தாண்டிவிட்டது. அழகோ அழகியோ அவரைத் தேடி வரவில்லை. வருத்தமடைந்த அந்த வயோதிகர் வழக்கு தொடர்ந்தார். ரூ.50,000 இழப்பீடு கேட்டார். ஆனால், நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினை பேசிமுடிக்கப்பட்டது. ரூ.30,000 அவருக்கு இழப்பீடாகக் கிடைத்தது.

68 ரூபாய்க்கு ஐபோன்!

நிகில் பன்சால் எனும் மாணவர் 2014இல் ஸ்னாப்டீல் தளத்தில், ‘ரூ.68க்கு ஐபோன்’ (ரூ.46,651 தள்ளுபடி) எனும் விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு ஆர்வத்துடன் ஆர்டர் செய்தார். ஆனால், அது தொழில்நுட்பச் சிக்கலால் ஏற்பட்ட தவறு என்று சொல்லி அவரது ஆர்டர் ரத்துசெய்யப்பட்டது. மனமுடைந்த மாணவர், இணைய வணிகம் தொடர்பான புகார்களை விசாரிக்கும் இந்தியா ஃபோரம் அமைப்பிடம் முறையிட்டார். அதே விலைக்கு அவருக்கு ஐபோன் வழங்குமாறும், இழப்பீடாக ரூ.2,000 வழங்குமாறும் ஸ்னாப்டீலுக்கு உத்தரவிடப் பட்டது. அந்நிறுவனம் மேல்முறையீடு செய்தபோது அந்த இழப்பீடு ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது. ஆம், நுகர்வோர் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தால் பெரிய நிறுவனங்களை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்து நீதியைப் பெறலாம்!

- வெ.சந்திரமோகன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in