

இந்திய உச்ச நீதிமன்றம் 2013இல் நாடு முழுவதும் ஆசிட் விற்பனைக்குத் தடைவிதித்தது. ஆனால், அதற்குப் பிறகும் ஆசிட் தாக்குதல்கள் ஆயிரக்கணக்கில் பதிவாகியுள்ளன. இந்தியாவில், ஆண்டுக்குச் சராசரியாக 250-300 ஆசிட் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பல பதிவுசெய்யப்படுவதில்லை என்பதால் இந்த எண்ணிக்கை உத்தேசமானதுதான். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி ஆகியவை ஆசிட் தாக்குதல் அதிகம் நடைபெறும் மாநிலங்கள்.
ஆசிட் தாக்குதலைக் கிரிமினல் குற்றம் எனக் கண்டித்த உச்ச நீதிமன்றம், பரவலான ஆசிட் விற்பனைக்குத் தடைவிதித்தது. ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானோருக்கு இலவசச் சிகிச்சையும் ரூ.3 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்றும் 2015இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஆசிட் விற்பதற்கும் வாங்குவதற்கும் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன:
l மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் யாரும் ஆசிட் விற்பனை செய்ய முடியாது. குறிப்பிட்ட இடத்தில் மட்டும்தான் ஆசிட் விற்பனை செய்யப்பட வேண்டும்.
l 18 வயதுக்குக் குறைவான எவருக்கும் ஆசிட் விற்பனை செய்யப்படக் கூடாது.
l ஆசிட் வாங்குபவர் ஒளிப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் காண்பித்து, ஆசிட் வாங்குவதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும்.
l ஆசிட் விற்பனை குறித்த தகவல்களை மூன்று நாள்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
l ஆசிட் இருப்பு குறித்த அறிக்கையை, மண்டல துணை மாஜிஸ்திரேட்டுக்கு 15 நாள்களில் விற்பனையாளர் அனுப்பிவைக்க வேண்டும்.
l கணக்கில் வராத ஆசிட் இருப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது கைப்பற்றப்பட்டு, அதை வைத்திருந்தவருக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
விழிப்புணர்வு அவசியம்
கட்டுப்பாடுகள் இருந்தாலும், சந்தையில் ஆசிட் தடையில்லாமல் புழங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆன்லைன் மூலமாகவும் ஒருவர் இருந்த இடத்திலிருந்தே ஆசிட் வாங்க முடியும்.சட்டங்கள் எவ்வளவுதான் கடுமையானவையாக இருந்தாலும், அதைக் கடைப்பிடிக்கும்போது மட்டுமே அதற்குரிய பயன் விளையும். இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில், இத்தகைய விஷயங்களைக் கட்டுப்படுத்துவது கிட்டத்தட்டச் சாத்தியமில்லாத செயல்பாடுதான். எனினும், சட்டத்தின் துணைகொண்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் அதேவேளை, நுகர்வோராகிய மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
- அபி