

நுகர்வோர் வழக்குகளில் 28 ஆண்டு அனுபவம் மிக்கவர் வழக்கறிஞர் வி. ஷங்கர். சென்னையைச் சேர்ந்த இவர் மாநில, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் உள்படத் தென்னிந்தியாவின் பல்வேறு நுகர்வோர் மன்றங்களில் வாதாடிய அனுபவம் மிக்கவர். நுகர்வோர் நலன் தொடர்பாக அவரிடம் பேசினோம்.
நுகர்வோர் நீதிமன்றத்தை எந்த மாதிரியான புகார்களுக்கு அணுகலாம்?
சேவைக் குறைபாடு என்பது நுகர்வோரின் பார்வையைப் பொறுத்தது. இது பரந்துபட்டது. நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவர் சூப் வாங்கினார். அதை பார்சல் செய்யப் பயன்படுத்திய டப்பாவுக்கு 6 ரூபாய் ஐம்பது காசு கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்தப் பாத்திரத்துக்கு அந்தத் தொகை அதிகம் என்று நினைத்த அவர், சம்பந்தப்பட்ட உணவு விடுதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார். ஒருவர் மருத்துவரிடம் செல்லும்போது அவர் வலதுகாலில் செய்ய வேண்டிய அறுவைச்சிகிச்சையை இடது காலில் செய்துவிட்டால் அதுவும் சேவைக் குறைபாடுதான். வீடு கட்டித்தருவதாகச் சொன்னவர், குறிப்பிட்ட காலத்துக்குள் அதை நிறைவேற்றவில்லையென்றால், நாம் வாங்குகிற வண்டியின் தரத்தில் குறைபாடு இருந்தால், குடிக்கிற தண்ணீருக்கு ஐந்து பைசா அதிகமாக வாங்கினால் இப்படிப் பலவும் சேவைக் குறைபாட்டில் அடங்கும். கல்வி மட்டும் இதில் அடங்காது. ஆனால், கல்வி நிறுவனங்களோடு தொடர்புடைய கட்டமைப்பில் குறைபாடு என்றால் அதற்கு நுகர்வோர் மன்றத்துக்குச் செல்லலாம். உதாரணத்துக்குப் பள்ளியில் இருக்கிற நீச்சல் குளத்தில் பராமரிப்பு சரியில்லை, கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது என்பது போன்ற புகார்கள் நுகர்வோர் மன்றத்தில் செல்லுபடியாகும்.
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய எவ்வளவு செலவாகும்?
நுகர்வோர் மன்றத்தில் வழக்கறிஞர் தான் வாதாட வேண்டும் என்பதல்ல. புகார்தாரரே தன் தரப்பு நியாயத்தை விளக்கலாம். ஆனால், நுகர்வோர் மன்றத்துக்கென்று சில சட்ட நுணுக்கங்கள் உண்டு. அதைச் சரியாகக் கையாளவில்லையென்றால் பாதிக்கப் பட்டவரே இழப்பீடு செலுத்தும்படி ஆகிவிடக்கூடும். அதுபோன்ற நேரத்தில் வழக்கறிஞர்களின் வழிகாட்டுதல் தேவைப்படும். பொருள்களின் மதிப்பைப் பொறுத்து ஐந்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை வழக்கறிஞர்கள் கட்டணம் வசூலிக்கக்கூடும். கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பொருள் என்றால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கலாம்.
எவ்வளவு நாள்களுக்குள் புகார் அளிக்க வேண்டும்?
சேவைக் குறைபாட்டைக் கண்டறிந்த இரண்டு ஆண்டுகளுக்குள் புகார் தாக்கல் செய்யலாம். அதற்கு மேல் ஆகிவிட்டால் ஏன் தாமதமானது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆன்லைன் வர்த்தகத்தில் நடைபெறும் சேவைக் குறைபாடுகள் குறித்து?
ஆன்லைன் வர்த்தகத்தில் பொருள் விற்கிறவர் யாரென்றே தெரியாத நிலையில்தான் பெரும்பாலான பொருள்களை வாங்குகிறோம். சேவைக் குறைபாடு தொடர்பான புகார்களில் எதிர்த் தரப்பினரை அடையாளம் காட்ட வேண்டும். விற்பனையாளர்களின் முகமோ முகவரியோ தெரியாதபட்சத்தில் புகாரளிப்பது சாத்தியமில்லாத விஷயம். தயாரிப்பாளர்கள் இந்தியாவுக்குள் இருந்தால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியும். தயாரிப்பாளர்கள் இழப்பீடு தர வேண்டும் என்று சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இங்குள்ள நிறுவனங்களிடம் இழப்பீட்டைப் பெற முடியும். நிறுவனங்கள் இந்தியாவுக்குள் இருக்கும்பட்சத்தில் கைது, ஜப்தி என்று ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியும். ஆன்லைனில் விலை மலிவாகக் கிடைக்கிறதே என்பதற்காகப் பொருள்களை வாங்குவதற்கு முன் அதன் தயாரிப்பாளர்கள் யார், பொருளின் தரம் எப்படி இருக்கிறது என்பது போன்ற அம்சங்களைக் கவனத்துடன் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் நுகர்வோரின் நிலை?
இங்கே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், வழங்கப்படும் தீர்ப்புகள் அனைத்தும் அமலாக்கப்படு கின்றனவா என்பதும் விவாதிக்க வேண்டியதே. இழப்பீடு கைக்கு வருகிறதா எட்டாக் கனியாக இருக்கிறதா என்பதைப் பொறுத்தே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களின் வெற்றி அமைகிறது. எதிர் மனுதாரர்கள் உள்ளூரில் இருந்தால் சிக்கல் இல்லை. வெளி மாநிலத்திலோ வெளிநாட்டிலோ இருக்கிறபோது வழக்கு, இழப்பீடு எல்லாமே பெரும் போராட்டமாக அமையக்கூடும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இருக்கிறதா?
ஒரு நாளைக்குப் பத்துப் பேராவது ஏதாவது புகாருடன் வருகிறார்கள். ஆனால், சிலர் ஆர்வ மிகுதியில் வந்துவிட்டுப் பிறகு வழக்குத் தொடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. சிலருக் குப் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் நுகர்வோர் மன்றங்களை நாடுவதற்குத் தயக்கம்காட்டுகின்றனர். அரசுடன் தனியார் அமைப்புகளும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பொருள்களின் தரமும் நுகர்வோர் பாதுகாப்பும் சீராக இருக்கும்.
நுகர்வோருக்கென்று இலவச சட்ட உதவி மையங்கள் உண்டா?
மாநிலச் சட்ட உதவி மையத்தில் பெரும்பாலும் சொத்து, விவாகரத்து, பணப் பரிமாற்றம் போன்றவை குறித்தே ஆலோசனை வழங்கப்படும். நுகர்வோருக்கு எனத் தனியாக இலவசச் சட்ட உதவி மையங்கள் இல்லை. சட்ட உதவிக்கு நுகர்வோர் வழக்கு களைக் கையாளும் வழக்கறிஞர்களை நாடலாம்.