

தமிழ்த் திரை, தொடக்கத்தில் புராணக் கதைகளையே படமாக்கியது. ஆனால், விடுதலைப் போராட்டமும் சமூகக் கருத்துகளும் அதில் ஓர் அம்சமாக இருந்தன. பெண் விடுதலைக் கருத்துகளுக்கும் அதில் இடமிருந்தது. ஆனால், 1980க்குப் பிறகு வணிகரீதியிலான படங்களின் வெற்றி, மீண்டும் பழமைவாதக் கருத்துகளைத் திரைக்குக் கொண்டுவந்துசேர்த்தது. அதில் பெண்கள் குறித்த கற்பிதங்களும் அடக்கம். ஆனால், இப்போது நிலைமை மாறிவருகிறது. தமிழ்த் திரை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்துப் பேசத் துணிந்துள்ளது. அந்த வகையில் முக்கியமான சில படங்கள்:
சுழல்
பிரபல இரட்டை இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் 2022இல் வெளிவந்த இணையத் தொடர் இது. மொத்தம் எட்டுப் பகுதிகளில் முதல் நான்கை பிரம்மா ஜியும் அடுத்த நான்கை அணுசரண் முருகையனும் இயக்கினர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி எனப் பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்தத் தொடர், குடும்பத்துக்குள் காலங்காலமாக நடந்துவரும் பாலியல் வன்முறையைப் பதிவுசெய்தது. மேலும் பெண்கள், குழந்தைகள் இதனால் அடையும் மனச்சிதைவை இப்படம் காட்சிப்படுத்தியது.
கார்கி
கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் 2022இல் வெளிவந்த இந்தப் படம், சென்னையில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நீதிமன்ற விசாரணைப் படலத்தை மையமாகக் கொண்டாலும் இது பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைப்பாட்டைப் பேசியது. சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரம் ஏற்ற இப்படம், பாலியல் குற்றத்தை மறுமுனையிலிருந்து பார்த்தது. இரு பெண்களின் தந்தையும் ’ஆண்’ என்பதைத் தெளிவாக உணர்த்தியது.
அனல் மேலே பனித்துளி
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், ஆர்.கய்சர் ஆனந்த் இயக்கத்தில் 2022இல் வெளிவந்தது இப்படம். ஆண்ட்ரியா மையக் கதாபாத்திரமாக நடித்த இப்படம், பெண்களைக் காக்க வேண்டிய பொறுப்புள்ள அரச அமைப்பின் பிரதிநிதிகளே பெண்களுக்கு எதிராகச் செய்த வன்முறையைச் சித்தரிக்கிறது. பல தடைகளைக் கடந்து ஒரு பெண் நீதிக்காக அதன் எல்லைவரை சென்று போராடுவதுதான் இந்தப் படத்தின் விசேஷமான அம்சம்.
தி கிரேட் இந்தியன் கிச்சன்
மலையாளத்தில் வெளிவந்து பெரும் கவனம் பெற்ற படத்தின் தமிழ் மொழிமாற்றப் படம் இது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மலையாளத்தில் ஜியோ பேபி இயக்கியிருப்பார். வீட்டின் சமையல்கட்டை வைத்து முழுப் படத்தையும் உருவாக்கியிருப்பார்கள். அதன் பல்வேறு கோணத்தைப் பொருள்படப் படமாக்கியிருப்பார்கள். ஆண்களுக்குச் சேவகம் செய்வதுதான் பெண்களின் கடமை என்கிற கற்பிதத்தைக் காட்சிகள்வழி இப்படம் கேள்வி எழுப்புகிறது.
அயலி
பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படும் தொண்ணூறுகளின் கிராமத்தை இந்த இணையத் தொடர் களமாகக் கொண்டது. முத்துக்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், அயலியாக அபி நட்சத்திரா நடித்திருக்கிறார். இந்தச் சிறு பெண் தன் சாதுரியத்தால் காலங்காலமாகப் பின்பற்றப் பட்டுவரும் சமூக வழக்கத்தை மாற்ற, பெண்களை ஒரு குடையின் கீழ் திரட்டி வெற்றி காண்கிறார்.