

‘சோஹோ’ ஸ்ரீ தர் வேம்புவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கும் பலருக்கும் அவருடைய சகோதரி ராதா வேம்புவைப் பற்றித் தெரியாது. சர்வதேச அளவில் கவனிக்கப்படும் மின்னஞ்சல் சேவையான சோஹோ மெயிலின் தலைவர் ராதா வேம்பு.
சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவரது இன்றைய சொத்து மதிப்பு ரூ.21,500 கோடி. சுயமாக உருவான இந்தியக் கோடீஸ்வரப் பெண்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்குப் பெண்கள் செல்வது எளிதல்ல. உலக அளவில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் 20 சதவீதம்தான். இந்தியாவின் முன்னணி 500 நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை வெறும் 3 சதவீதம்தான். இந்தச் சூழலில்தான் ராதா வேம்பு ‘சோஹோ மெயிலின்’ தலைவராக உயர்ந்துள்ளார்.
தொழில்துறை மேலாண்மை
சோஹோ நிறுவனத்தின் பெருமளவிலான பங்கு ராதா வேம்பு வசம் உள்ளது. இது தவிர்த்து, ‘ஜானகி ஹைடெக் அக்ரோ’, ‘ஹைலேண்ட் வேலி கார்ப்பரேஷன்’ ஆகிய இரு நிறுவனங்களையும் ராதா வேம்பு நிர்வகித்துவருகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 1972ஆம் ஆண்டு ராதா வேம்பு பிறந்தார். நடுத்தர வர்க்கக் குடும்பம். தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக இருந்தார். இதனால், ராதா வேம்புவின் படிப்பு சென்னையில் அமைந்தது.
வீட்டுச் சூழல் காரணமாகச் சிறு வயதிலேயே ராதா வேம்பு படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். சென்னை ஐஐடியில் தொழில்துறை மேலாண்மைப் படிப்பில் பட்டம் பெற்றார். தன் சகோதரர்களுடன் சேர்ந்து தொடங்கிய ‘சோஹோ’ நிறுவனத்தை வளர்த்தெடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
1995-க்குப் பிறகான காலகட்டம் உலக அளவில் மென்பொருள் துறைசார்ந்து களமிறங்கிய தொழில்முனைவோர்களுக்கு மிக முக்கியமான காலகட்டம். இணையம் அந்த நேரத்தில்தான் பரவலாகத் தொடங்கியது. உலகின் போக்கில் இணையம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்த தொழில் முனைவோர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் மென்பொருள் துறையில் கால்பதித்து முழுமூச்சுடன் செயல்பட்டனர். இந்தக் காலகட்டத்தில்தான் லாரி பேஜ்ஜும், சர்கே பிரினும் கூகுள் நிறுவனத்தை உருவாக்கினார்கள். சீனாவில் ஜாக் மா அலிபாபாவை உருவாக்கினார். தமிழ்நாட்டில் தர் வேம்பு, ராதா வேம்பு, அவர்களது இரண்டு சகோதரர்களும் அந்தக் கனவுடன்தான் சோஹோவை நடத்திவந்தனர்.
2000-க்குப் பிறகு சோஹோ வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. பிற நிறுவனங்களைவிட மிகக் குறைந்த விலையில் சோஹோ சேவை வழங்கியது. சோஹோவின் வளர்ச்சிக்கு இது முக்கியக் காரணமாக அமைந்தது. இந்தச் சூழலில், 2007ஆம் ஆண்டு சோஹோ மெயிலை நிர்வகிக்கும் பொறுப்பை ராதா வேம்பு ஏற்றார். ஜிமெயிலும் யாஹூவும் மின்னஞ்சல் சந்தையை வசப்படுத்தியிருந்த காலகட்டம் அது. ராதா வேம்பு தன் தலைமையின் கீழ் சோஹோ மெயிலைச் சர்வதேசச் சந்தையில் முக்கிய இடத்துக்கு நகர்த்திச் சென்றார்.
ஊழியர்கள் நலன்
பொதுவாக ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் அடிக்கடி வேலையை விட்டு விலகி வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வது சகஜமானது. ஆனால், சோஹோ நிறுவனத்தில் ஊழியர்கள் வேலையிலிருந்து விலகுவது மிகக் குறைவானது. ஏனென்றால், சோஹோ நிறுவனம் ஊழியர்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்குவதால் அவர்கள் சோஹோவை விட்டு விலகுவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று சொல்கிறார்கள். ஊழியர் நலனை மையப்படுத்திய போக்கை உருவாக்கியதில் ராதா வேம்புக்கு மிக முக்கியப் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது.
ஊடக வெளிச்சத்தை விரும்பாத இவர், தன்னுடைய செயல்கள் பேசட்டும் என்கிற நிலைப்பாட்டைக் கொண்டவர்.ஒட்டுமொத்ததில் சொத்து மதிப்பைத் தாண்டி, மென்பொருள் துறையில் தமிழ் நாட்டின் முக்கிய ஆளுமையாக ராதா வேம்பு உள்ளார்.
- வாஸிம் அக்தர்