Published : 05 Mar 2023 06:52 AM
Last Updated : 05 Mar 2023 06:52 AM

மகளிர் நாளின் வரலாறு

சர்வதேச உழைக்கும் மகளிர் நாள் கொண்டாடப்படுவது, அதற்கு மார்ச் 8ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகியவற்றுக்கான காரணம் குறித்துப் பல்வேறு பொய்களும் கட்டுக்கதைகளும் நிலவிவந்தன. மதிப்பு மிக்க ஊடகங்களிலும் ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரபூர்வ இணையதளங்களிலும்கூட சர்வதேச மகளிர் நாள் குறித்த தவறான தகவல்கள் நிரம்பிய கட்டுரைகள் பதிவேற்றப்பட்டிருந்தன. சர்வதேச மகளிர் நாள் தொடர்பான கட்டுக்கதைகள் அனைத்தையும் உடைத்து அதன் உண்மையான வரலாற்றை ஆதாரபூர்வமாக நிறுவும் விதமாக மறைந்த பத்திரிகையாளரும் மார்க்சிய ஆய்வாளருமான இரா.ஜவஹர் ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’ (வெளியீடு: பாரதி புத்தகாலயம்) என்னும் நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். பின்னர் இந்த நூல் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

1910இல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற ‘சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு’ மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. “அனைத்துத் தேசிய இனங்களையும் சார்ந்த சோஷலிஸ்ட் பெண்கள் ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தைக் (Women’s Day) கடைப்பிடிக்க வேண்டும். சமூகப் பிரச்சினைகள் பற்றிய சோஷலிசக் கண்ணோட்டத்துடன், பெண்கள் பிரச்சினை அனைத்துடனும் வாக்குரிமைக் கோரிக்கையை இணைத்து விவாதிக்க வேண்டும்” என்கிற அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான் சர்வதேச மகளிர் நாள் உருவாகக் காரணமாக அமைந்தது. அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்து, மகளிர் நாள் தீர்மானத்தை முன்மொழிந்தவர் கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரா ஜெட்கின்.

இந்த மாநாட்டில் மகளிர் நாளுக்கான தேதி இறுதிசெய்யப் படவில்லை. அதனால், 1911இலிருந்து பல நாடுகளில், பல தேதிகளில் ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டுவந்தது. ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சிக்கு எதிராக 1917 நவம்பர் 7 அன்று லெனின் தலைமையில் புரட்சி நடந்தது. அதற்கு முன்னோடியாக அந்த ஆண்டு மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்களின் புரட்சி தொடங்கியது. இதில் ஆண் தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். ரஷ்யப் பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூரும் வகையில் இனிமேல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று 1921இல் மாஸ்கோ நகரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலம் அமைப்பின் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதிலிருந்துதான் உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச உழைக்கும் மகளிர் நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

சர்வாதிகார அரசுக்கு எதிராகத் தமது உரிமைகளை மீட்பதற்கான உழைக்கும் பெண்களின் புரட்சியை நினைவு கூர்வதற்காக உருவானதுதான் சர்வதேச உழைக்கும் மகளிர் நாள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. உழைக்கும் பெண்களின் உரிமைகளை உறுதிசெய்வதும் அனைத்துப் பணிகளிலும் அனைத்து நிலைகளிலும் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்வதும்தான் சர்வதேச மகளிர் நாள் கொண்டாட்டங்களுக்கு அர்த்தம் சேர்க்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x