

உலக விளையாட்டுத் திருவிழா என்றழைக்கப் படும் ‘ஒலிம்பிக்’ போட்டிகளில் இருந்துதான் பெண்களின் விளையாட்டு வரலாறும் தொடங்குகிறது. ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தில் உள்ள ஏதென்ஸில் 1896இல் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் ஒலிம்பிக் போட்டி, பெண்களின் பங்கேற்பு இல்லாமல்தான் தொடங்கியது.
1900இல் பாரிஸில் நடந்த இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில்தான் பெண்களுக்கு இடம் கிடைத்தது. ஆனால், 1,066 பேர் பங்கேற்ற அந்த ஒலிம்பிக்கில் பெண்கள் வெறும் 12 பேர் மட்டுமே பங்கேற்றனர். அந்தக் காலத்தில் பெண்களின் பங்கேற்பு விளையாட்டுகளில் குறைவாக இருந்ததற்குச் சமூகத்தில் ஊறியிருந்த பழமைவாதம் ஒரு காரணம். இன்றும்கூட அடிப்படைவாதம் நிலவும் நாடுகளில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரத் தடை இருக்கிறது. ஆனால், இதுபோன்ற தடைகளைத் தகர்த்துதான் பெண்கள் களம் கண்டார்கள். அந்த வகையில் ஜப்பான், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளின் முன்முயற்சி முக்கியமானது. ஒலிம்பிக்கைத் தாண்டி விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்பதை இந்த நாடுகள் தொடர்ச்சியாக ஊக்குவித்தன. 1960க்குப் பிறகே பெண்கள் பங்கேற்பில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஒலிம்பிக்கில் மட்டுமல்ல, பொதுவாகவே விளையாட்டுகள் இருபாலருக்கும் சமமானவை.
அதற்கு உதாரணமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்கையே குறிப்பிடலாம். டோக்கியோ ஒலிம்பிக்கில் வீராங்கனைகளின் பங்கேற்பு ஆண்களுக்கு நிகராக உயர்ந்திருந்தது. அந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற மொத்த பங்கேற்பாளர்களின் எண்ணிக் கையில் பெண்களின் எண் ணிக்கை 49 சதவீதம். அதேபோல பெண்களுக்கான விளையாட்டுப் பிரிவுகளும் ஆண்களுக்கு நிகராக உயர்ந்திருந்தன.
சர்வதேச அளவில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக விளையாட்டில் பெண்களின் பங்கேற்பு தொடங்கியிருந்தாலும், இந்தியாவில் அது தலைகீழாகவே இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகுதான் ஆடுகளங்களில் பெண்களைப் பார்க்க முடிந்தது. 1952இல் பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில்தான் இந்தியா சார்பில் ஒரு பெண் களம் கண்டார். அவர், மேரி டிசோசா. தடகளப் பிரிவில் பங்கேற்ற அவர், அடிப்படையில் ஒரு ஹாக்கி வீராங்கனை. ஆனால், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியப் பங்கேற்பாளர்கள் 126 பேரில் பெண்கள் 56 பேர் இடம்பெற்றிருந்ததன்மூலம், இந்திய விளையாட்டுத் துறை பெண்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.
இன்று இந்தியப் பெண்கள், ஆண்களுக்கு நிகராக முன்னிலை பெற்றுவருகிறார்கள். பேட்மிண்டன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் பெண்கள் பெரும் சாதனையாளர்களாக விளங்கிவருகிறார்கள். கிரிக்கெட்டில் பாலின வேறுபாட்டைக் களைந்து ஊதியத்தைச் சமப்படுத்தும் நடைமுறைகள் தொடங்கி யிருப்பது நல்ல அறிகுறி. அதுபோல இந்திய கிரிக்கெட் வாரியம் மகளிர் பிரீமியர் லீக்கையும் இப்போது தொடங்கியிருக்கிறது. மாற்றங்கள் தொடரும்போது, விளையாட்டில் பெண்கள் முதன்மை பெறும் காலம் விரைவில் வரும்.