

சோவியத் ஒன்றியத்தில் உள்ள பெண்கள், தங்களுக்கான அடிப்படை உரிமை களைப் பெறக் காரணமாக இருந்தவர் அலெக்சாண்ட்ரா கொலந்தாய். லெனின் அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் பெண் அமைச்சர் அவர்தான். முன்மாதிரியான பல திட்டங்களையும் அவர் உருவாக்கினார்.
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் அலெக்சாண்ட்ரா. அவரது அக்காவை 50 வயது மூத்த பணக்காரர் ஒருவருக்குத் திருமணம் செய்துவைக்கக் குடும்பத்தினர் முடிவெடுக்க, அதை அவர் எதிர்த்தார். தன் எதிர்ப்பைக் காட்டும்விதமாக வசதியில்லாத உறவினர் ஒருவரைக் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டார்.
அப்போது தொழிற்சாலைகளில் 12 முதல் 18 மணி நேரம் வரை, குறைந்த ஊதியத்தில் போதிய வசதியின்றிப் பெண்கள் வேலை செய்தது அலெக்சாண்ட்ராவைப் பாதித்தது. அவர்கள் நலனுக்காகப் போராடினார். இது அவருடைய கணவருக்குப் பிடிக்கவில்லை. அவர் அலெக்சாண்ட்ராவிடம் ‘பெண்’ என்கிற வகையில் பெரிய தியாகத்தை எதிர்பார்த்தார். தன்னைச் சமூகத்துக்குப் பங்களிக்கவிடாமல், பயனற்றவராக மாற்ற நினைத்த காதலைத் தூக்கி எறிந்தார் அலெக்சாண்ட்ரா.
ரஷ்யப் புரட்சியில் பங்கேற்றார். உலகின் முதல் பொதுவுடைமை அரசாங்கத்தில், சமூக நலத் துறை அலெக்சாண்ட்ராவுக்கு அளிக்கப்பட்டது. இரவு பகலாக உழைத்தார். குறுகிய காலமே அந்தப் பொறுப்பை வகித்தாலும் பெண்கள், தொழிலாளர்கள், குழந்தைகள் ஆகியோரின் நலன் மேம்படத் திட்டங்களை வகுத்தார். ஒரே வேலை செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஊதியம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வது, தேவாலயத்தில் மட்டுமின்றி அரசு அலுவலகங்களிலும் திருமணத்தைப் பதிவுசெய்யலாம், எளிமைப்படுத்தப்பட்ட விவாகரத்து நடைமுறைகள், பெண் தன் விருப்பப்படி தந்தை அல்லது கணவனின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொள்ளலாம், திருமண உறவு மூலம் பிறக்காத குழந்தைகளும் மற்ற குழந்தைகள்போலவே நடத்தப்பட வேண்டும், பிரசவ காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை போன்றவை அவற்றுள் சில.
‘ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் சமூகக் கடமைகளைச் செய்வதற்குக் குடும்பம் ஒரு தடைக்கல்லாக இருக்கிறது. அதனால், குழந்தை வளர்ப்பை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் வீட்டு வேலை களையும் வெளி வேலைகளையும் சமமாகச் செய்ய வேண்டும்’ என்றார் அலெக்சாண்ட்ரா.
அவரது கருத்தாக்கத்தில், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் வாரத்துக்கு நான்கு நாள்களுக்கு மேல் பணிக்குச் செல்ல வேண்டியதில்லை. வேலைக்கு நடுவே தாய்ப்பால் ஊட்ட நேரம் அளிக்கப்பட்டது. பணிபுரியும் இடங்களிலேயே குழந்தை களுக்கான காப்பகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இது போன்ற திட்டங்களால், விண்வெளித் துறையிலிருந்து விளையாட்டுத் துறை வரை சோவியத் பெண்கள் முன்னணியில் இருந்தனர். 1970களில் அறிவியல், தொழில்நுட்பம், கணிதத் துறைகளில் சோவியத் பெண்களின் பங்கேற்பு 39 சதவீதமாக இருந்தபோது, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஒற்றை இலக்கத்திலும் மிகக் குறைவான சதவீதப் பெண்களே இருந்தனர். இன்றைய பெண்கள் பெற்றிருக்கும் உரிமைகளுக்கும் பெண்களின் உரிமைகள் குறித்த சிந்தனைகளுக்கும் அலெக்சாண்ட்ராவுக்கு நன்றி சொல்வோம்!