

இயல், இசை, நாடகம் அனைத்தையும் ஆளப் பிறந்தவர்கள் பெண்கள். நாட்டுப்புற இசை, சொல்லிசை, கானா எனப் பலவிதமான கலை வடிவங்களில் சிறந்து விளங்கும் பெண்களில் சிலர் இவர்கள்.
பொறி பறக்கும் பறை!
எட்டு ஆண்டுகளாக வீதி நாடகங்களை நடத்திவருபவர் கோவையைச் சேர்ந்த சந்திரிகா. முதுகலை வேதியியல் பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர், முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளார். கோவை ‘நிமிர்’ அமைப்பு மூலம் பறை வாத்தியத்தைக் கற்றுக்கொண்டார் சந்திரிகா.
“வீதி நாடகம் வழியாகத்தான் பறை எனக்கு அறிமுகமானது. அந்த வாத்தியத்தின் தொன்மையை அறிந்தவுடன் அது சாவுக்கு வாசிக்கப்படும் வாத்தியம் அல்ல என்று புரிந்தது. நம் சமூகத்தில் பறை இசைக் கருவி ஒடுக்கப்படும் வாத்தியமாக இருக்கிறது. அதிலும் பெண்கள் பறை இசைக்கப் பல தடைகள் எழுந்தன. இருந்தபோதும், தற்போது பெண்கள்தான் அதிகம் பறை வாசிக்கிறார்கள். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உரக்கச் சொல்லப் பறை மிகச் சிறந்த இசைக் கருவி” என்கிறார் சந்திரிகா.
சொல்லிசைவாணிகள்
ஸோயா, ஆர்.க்யூ., ஹாஷ் மூவரும் சொல்லிசைப் பாடகர்கள். தகுந்த பயிற்சியாளர்களைக் கொண்டு குரல் தேர்வு மூலமாகத் தேர்ந்தெடுத்து இவர்களை ‘டிரையோ’ சுயாதீன இசைக் குழுவாக ஆக்கிய பெருமைக் குரியவர், இதை நிர்வகிக்கும் சங்கீதா. “வழக்கமான இசையாக இல்லாமல் மக்களின் தேவைகளுக்காக நாமே பாடல்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் ‘டிரையோ’ இசைக் குழு தோன்றுவதற்குக் காரணம்” என்கிறார் சங்கீதா. ஒரு முறை ‘இன்விஸிபிள் ஹிப் ஹாப் பேண்ட்’ நிகழ்ச்சியின் இடையே “கூட்டத்திலிருந்து யாராவது மேடைக்கு வந்து பாட முடியுமா?” என்று கேட்டனர். அப்போது ஸோயா, ஆர்.க்யூ., ஹாஷ் மூவரும் மேடை ஏறித் தைரியமாகப் பாடினர். “பெண்களின் முன்னேற்றம், பெண் கல்வி போன்றவற்றை வலியுறுத்தி எங்களின் சுயாதீனப் பாடல்களைச் சமூக வலைதளம் வாயிலாக வெளியிடவிருக்கிறோம்” என்கின்றனர் இந்தச் சொல்லிசைவாணிகள் சேர்ந்திசையாக!
‘கானா’ம்ருதம்
சட்ட மேதை அம்பேத்கரின் புகழ் பாடும் பாடலோடு சமூக வலை தளங்களில் அறிமுகமானவர் விமலா. இவர் பாடிய சில இரங்கல் பாடல்களும் அதிகம் கவனம் ஈர்த்திருக்கின்றன. திருநங் கைகளின் பிரச்சினைகளைப் பாட்டில் சொல்லும் கலைஞராகப் பல மேடைகளில் ஒலிக்கிறது திருநங்கை கானா விமலாவின் குரல்: ‘எங்கள பார்த்தா எல்லாருக்கும் கோவமா... திருநங்கையாகப் பொறந்தது எங்க சாபமா...’ என்று கழிவிரக்கம் ஒரு பக்கம் கசிந்தாலும், மறுபக்கம் இந்தச் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ்வோம் என்னும் துணிவும் வீரமும் அவரின் கணீர்க் குரலில் ஒலிக்கும் பாடல்களில் பட்டையைக் கிளப்புகின்றன!
அண்மையில் ‘கோக் ஸ்டுடியோ’ தமிழுக்காக பென்னி தயாள், ஷான் ரோல்டன், கதீஜா ரஹ்மான் ஆகியோருடன் பங்கெடுத்து கானா உலகநாதனுடன் சேர்ந்து டபுள்ஸ் பாடியிருக்கிறார். “கேலியையும் கிண்டலையும் புறக்கணிப்புகளையும் அவமானங் களையும் நிராகரிப்புகளையும் தாண்டித்தான் கானா பாடகியாக மேடையிலும் பொதுமக்களிடமும் நான் வெளிப்பட்டிருக்கிறேன்” என்கிறார் விமலா நெகிழ்ச்சியுடன்.
கிராமத்து மின்னல்
தெம்மாங்குப் பாடலா, கூப்பிடுங்க அவரை என்னும் அளவுக்கு நாட்டுப்புறப் பாடல்களில் அசத்துகிறார் சுகந்தி. இவர் பாடிய ‘அந்தி மல்லி பூத்திருக்கு என் அத்த மவனக் காணோம்... நான் ஆசையோட காத்திருக்கேன் ஆந்தபோல நாளும்...’ பாடலுக்கு கார்ப்பரேட் கைஸும் விசிறிகள்! இவரது இன்னொரு சூப்பர் ஹிட் பாடல் விஜயலட்சுமியோடு பாடிய ‘ரெட்ட ஜடை போல ஒண்ணா திரிஞ்சோமடி’. இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, சி.சத்யா, ஜேம்ஸ் வசந்தன், உதயகுமார் ஆகிய இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி காற்றைச் சுகந்தமாக்கியிருக்கிறார் இந்த சுகந்தி!