

‘அறிவியல் புனைகதைகளின் தந்தை’ என்று ஜூல்ஸ் வெர்னை உலகம் கொண்டாடுகிறது. அது சரியல்ல, அவரை ‘அறிவியல் கதைகளின் தந்தை’ என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம், தன் கதைகளில் அறிவியலோடு சேர்த்துதான் கற்பனையான விஷயங்களை உருவாக்கியிருப்பார். கதையைச் சொல்வதைவிட, கதை வழியாக அறிவியலைச் சொல்ல வேண்டும் என்பதே ஜூல்ஸ் வெர்னின் நோக்கமாக இருந்திருக்கிறது. கற்பனைக் கதைகளாக இருந்தாலும் அவற்றில் வரக்கூடிய அறிவியல் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவர் உழைத்திருக்கிறார்.
அவர் பிரான்ஸில் 195 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, 118 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தவர் என்பதை நினைவில் கொண்டால், அவரது முக்கியத்துவம் விளங்கும்.
ஜூல்ஸ் வெர்ன் எழுதிய 65 நாவல்களில் பெரும்பாலானவை பயணங்களை மையமாகக் கொண்டவை. அவற்றில் ‘80 நாள்களில் உலகப் பயணம்’, ’பூமியின் மையத்துக்கு ஒரு பயணம்’, ’ஆழ்கடலின் அதிசயங்கள்’, ’பூமியிலிருந்து நிலவுக்கு ஒரு பயணம்’ போன்றவை உலக இலக்கியத்தில் கிளாசிக் நாவல்களாகக் கொண்டாடப்படுபவை.
80 நாள்களில் உலகப் பயணம் நாவலில் நாடுகளுக்கு இடையேயான தூரம், வாகனங்களில் செல்லக்கூடிய நேரம், எங்கிருந்து எப்படிப் பயணம் செய்தால் 80 நாள்களுக்குள் திரும்பிவிடலாம் என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் துல்லியமாக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் அந்தந்த நாடுகளில் நடைபெறும் விஷயங்களும் நாவலில் இருக்கும். கொல்கத்தாவுக்கு நாயகன் வரும் போது, அங்கே உடன்கட்டை ஏறும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு பெண்ணைக் காப்பாற்றுவார்.
பதினாறாம் நூற்றாண்டிலேயே நீர்மூழ்கிக் கப்பல் குறித்துப் பேசப்பட்டாலும் ‘ஆழ்கடல் அதிசயங்கள்’ நாவலில் வரும் நீர்மூழ்கிக் கப்பல் நவீன நீர்மூழ்கிக் கப்பலை ஒத்திருக்கிறது. நீண்ட உருளை வடிவம் கொண்ட நாட்டிலஸில் கேப்டன் நிமோவின் அறை, ஓய்வெடுக்கும் அறை, உணவு அறை, சேமிப்பு அறை, அடிக்கடி கடலின் மேற்புரத்துக்கு வந்து காற்றை எடுத்துச் செல்லுதல் எனப் பல அம்சங்கள் நாவல் வந்த பிறகுதான் நீர்மூழ்கிக் கப்பலில் இடம்பெற்றன.
மனிதன் நிலவுக்குச் செல்லும் நாவல், விண்வெளிப் பயணத்துக்கு உந்துதலாக இருந்தது. ஹெலிகாப்டர், வீடியோ கான்ஃபரன்ஸிங், சூரிய சக்தியால் இயங்கும் கலம், படிக்கும் செய்திகளுக்கு மாற்றாகக் கேட்கக்கூடிய செய்திகள் (வானொலி), நிலக்கரிக்கு மாற்றாக மின்கலங்கள் போன்ற ஜூல்ஸ் வெர்ன் காலத்தில் இல்லாத பல விஷயங்கள் நாவல்களில் இடம்பெற்றுள்ளன. பின்னர் இவை உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்திருக்கின்றன.
‘எதிர்காலத்தைத் தீர்மானித்தவர்’ என்று ஜூல்ஸ் வெர்னை கொண்டாடுகிறார்கள். அவரோ அதை மறுத்திருக்கிறார். ‘எனக்குப் புவியியல், வரலாறு, பயணம், தொழில்நுட்பம், அறிவியல் எல்லாம் மிகவும் பிடிக்கும். அதனால்தான் பயண நாவல்களை அதிகம் எழுதியிருக்கிறேன். ஒரு நாவல் எழுதுவதற்கு முன்பு அந்த நாவலில் இடம்பெறக்கூடிய அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களைப் புத்தகங்கள், பத்திரிகைகளில் படித்துக் குறிப்பு எடுத்துக்கொள்வேன். அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்தவர்களிடம் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்வேன். கற்பனைக் கதையாக இருந்தாலும் அதில் வரும் அறிவியல் தகவல்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். என் நாவல்களில் வரும் விஷயங்கள் நிஜமானால், அது தற்செயல் நிகழ்வே தவிர, நான் அவற்றை முன்கூட்டியே தீர்மானிக்கவில்லை’ என்கிறார்!