

அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் உருவான கலைவடிவங்களில் பிரதானமானது சினிமா. அறிவியல் புனைகதையின் தந்தை எனப் போற்றப்படும் ஹெச்.ஜி.வெல்ஸின் ‘வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ்’ தொடங்கி பல்வேறு அறிவியல் புனைகதைகள் திரைவடிவம் கண்டிருக்கின்றன. அதிநவீனத் தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளும் கடைக்கோடி மனிதர்களின் அனுபவங்கள்தாம் இதுபோன்ற படங்களின் அடிநாதம். அதனால்தான் உலக அளவில் இப்படங்கள் பெரும் வெற்றி பெறுகின்றன. ஜேம்ஸ் கேமரனின் ‘அவதார்’ படத்தில் அறிவியலுக்குத் தொடர்பில்லாத மாற்றுத்திறனாளி நாயகன் அதிநவீன சாதனத்தின் மூலம் பண்டோராவில் கூடுபாயும் வித்தையைச் செய்வது ஓர் உதாரணம்.
விண்வெளி அறிவியல் சார்ந்த அறிவியல் புனைகதைகள் ஹாலிவுட்டில் தனி வகைமையாகவே நிலைபெற்றிருக் கின்றன. வசிக்க முடியாத அளவுக்கு மாசடையும் பூமியிலிருந்து வெளியேறி விண்வெளியில் வாழிடம் தேடும் மனிதர்களின் கதைகள் சமீபகாலமாக அதிகரித்துவருவது தற்செயலானதல்ல. காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் பேரிடர்கள் குறித்த படங்களும் குறிப்பிடத்தக்கவை.
திரைக் கலைஞர்களின் கற்பனை வீச்சு, அறிவியல் துறையின் மேம்பாட்டுக்கும் உதவிவருகிறது. 1968இல் ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் வெளியான ‘2001: எ ஸ்பேஸ் ஒடிசி’ திரைப்படம் விண்வெளித் துறையில் பின்னாள்களில் ஏற்பட்ட மேம்பாடுகளுக்குத் தாக்கம் ஏற்படுத்தியது. சர்வதேச விண்வெளி நிலையம், தட்டையான கணினித் திரை, விண்கலங்களில் கண்ணாடி ஜன்னல்கள்; பொழுதுபோக்குச் சாதனங்கள் என அப்படத்தில் அவர் சித்தரித்த காட்சிகள் பின்னாள்களில் நடைமுறைக்கு வந்ததை நாசா தனது இணையதளத்தில் பதிவுசெய்திருக்கிறது. அதே ஸ்டான்லி குப்ரிக் 1969இல் அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நிகழ்வு போலியானது என முன்வைக்கப்படும் சதிக்கோட்பாட்டில் (Conspiracy Theory) குற்றம்சாட்டப்படுகிறார். ஆனால், அந்தப் பார்வை தவறு.
‘தி அபிஸ்’, ‘டைட்டானிக்’ என ஆரம்பித்து ‘அவதார் 2’ வரை நீருக்கடியில் படமாக்கப்பட்ட காட்சிகளைக் கொண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரன், அதற்காகவே பிரத்யேகமாகக் கேமராக்களை வடிவமைத்தார். அவரது உழைப்பின் துணையுடன் உருவாக்கப்பட்ட Fusion Camera System எனும் தொழில்நுட்பம், பிறரது படங்களிலும் பயன்படுத்தப்பட்டு ஹாலிவுட் திரையுலகுக்கு மெருகூட்டி வருகிறது. செவ்வாய் கோளுக்கு நாசா அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை உருவாக்கிய குழுவில் கேமரனும் ஒருவர். கடலுக்குள் இறங்கி அவர் மேற்கொண்ட நீச்சல் பயணங்களின் விளைவாகச் சில அபூர்வ உயிரினங்களும் கண்டறியப்பட்டிருக்கின்றன. அறிவியல் மீதான இந்தக் காதல்தான் அவரது ‘அவதார்’களுக்கு அஸ்திவாரம்!