

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன், நிகோலா டெஸ்லா ஆகிய இரு விஞ்ஞானிகளை இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருப்பது ஓர் ஆச்சரியம்தான். தன் வாழ்நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களைப் பெற்ற எடிசனையும் முந்நூறுக்கும் குறைவான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய டெஸ்லாவையும் ஏன் ஒப்பிடுகிறார்கள்?
மின்விளக்கைக் கண்டுபிடித்த எடிசனைத் தெரிந்த அளவுக்கு மாற்று மின்னோட்டத்தைக் கண்டுபிடித்த டெஸ்லாவை நமக்கு தெரியாது.
செர்பியாவைச் சேர்ந்த மின், இயந்திரப் பொறியாளரான டெஸ்லா, அமெரிக்காவில் எடிசனிடம் வேலைக்குச் சேர்ந்தார். எடிசன் மீது பெருமதிப்பு கொண்ட டெஸ்லாவை முதல் சந்திப்பிலேயே எடிசனுக்குப் பிடித்துவிட்டது. தான் கண்டுபிடித்த நேரடி மின்னோட்டம் (Direct Current) தொடர்பான சாதனங்களில் பல குறைபாடுகள் இருந்ததால், பொறியாளரான டெஸ்லாவை வைத்து அவற்றையெல்லாம் சரிசெய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார் எடிசன்.
நேரடி மின்னோட்டத்தைவிட, மாற்று மின்னோட்டம் (Alternating Current) சிறந்ததாக இருக்கும் என்பதைத் தன் ஆய்வின் மூலம் அறிந்திருந்த டெஸ்லா, அதை எடிசனிடமும் தெரிவித்தார். நேரடி மின்னோட்டம் தொடர்பான சாதனங்களை உருவாக்குவதற்காக எடிசன் அதிகமாக முதலீடு செய்திருந்தார். அதனால், மாற்று மின்னோட்டம் நடைமுறைக்குச் சரிவராது என்று சொல்லிவிட்டார்.
கப்பலில் பழுதான டைனமோக்களைப் பழுது பார்த்துக்கொடுக்கும் வேலையை டெஸ்லாவுக்குக் கொடுத்தார் எடிசன். அவரும் அதைச் சிறப்பாகச் செய்து முடித்தார். எடிசனுக்கு டெஸ்லா மீது நம்பிக்கை அதிகமானது. டிசி மின் சாதனங்களில் ஏற்படக்கூடிய குறைகளைச் சரிசெய்தால், 50 ஆயிரம் டாலர் பரிசாகத் தருவதாக டெஸ்லாவிடம் கூறினார் எடிசன். இவ்வளவு பெரிய தொகை கிடைத்தால், ஏசி மின்சாதனங்களை எடிசன் நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கி மக்களுக்கு வழங்க முடியும் என்பதால், அவரும் அந்தச் சவாலை ஏற்றார்.நேரம் காலம் பார்க்காமல் உழைத்து, டிசி மூலம் இயங்கும் மின்சாதனங்களைக் குறைகளின்றி மேம்படுத்தினார் டெஸ்லா. அதைக் கண்டு எடிசன் மகிழ்ந்தாலும் பரிசுப் பணத்தை அளிக்கவில்லை. பரிசு என்பது நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டது என்றும் சம்பளத்தை வேண்டுமானால் கொஞ்சம் அதிகரித்துத் தருவதாகவும் சொல்லிவிட்டார். டெஸ்லாவின் மனம் காயப்பட்டது. எடிசனின் நிறுவனத்திலிருந்து விலகினார்.
பணமின்றிக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த டெஸ்லாவுக்கு உதவ முன்வந்தார் தொழிலதிபர் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ். அதே வேளையில், ஏசி மோட்டார்களால் தன்னுடைய டிசி மோட்டார்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நினைத்த எடிசன், ஏசி மோட்டார்களுக்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பினார். அது ஆபத்து நிறைந்தது என்ற தோற்றத்தை மக்களிடம் உருவாக்கினார். டெஸ்லாவுக்கு ஜார்ஜ் ஆதரவாக இருந்ததுபோலவே, நிதி நிறுவனர் ஜே.பி.மார்கன், எடிசனுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். இருவரும் ஏசி மோட்டார் செயல்பாட்டுக்கான மூலப்பொருள்களின் விலைகளை ஏற்றினர். இதனால் டெஸ்லா இன்னும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்.
மக்களிடமும் அதிகார மட்டத்துடனும் செல்வாக்குப் பெற்றிருந்த கண்டுபிடிப்பாளர் எடிசன், சிறந்த வியாபாரியாகவும் திகழ்ந்தார். அவரை எதிர்த்து நிற்பது தனிநபரான டெஸ்லாவுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.
டெஸ்லா நேரடியாக மக்களிடமே தன் கண்டுபிடிப்பைக் கொண்டுசெல்ல முடிவெடுத்தார். நியூயார்க் நகர அதிகாரிகளிடம் பேசி, ஏசி மின்விளக்குகளைத் தெருக்களில் பொருத்தினார். நியூயார்க் நகரமே ஒளிர்ந்ததைக் கண்ட அமெரிக்கர்கள் ஆச்சரியமடைந்தனர். மக்களிடம் டெஸ்லாவின் செல்வாக்கு அதிகரித்தது. அவரின் புகழ் அமெரிக்கா முழுவதும் பரவியது. தொடர்ந்து, டெஸ்லா தன் நிறுவனத்தின் மூலம் ஏசி மின்சாதனங்களை விற்பனை செய்தார்.
ஏசி மின்னோட்டம் அதிக ஆற்றல் வாய்ந்தது; அதை நீண்ட தூரத்துக்குக் கொண்டுசெல்ல முடியும்; பிரச்சினைகள் குறைவு என்பது போன்ற காரணங்களால், உலகம் படிப்படியாக நேரடி மின்னோட்டத்திலிருந்து மாற்று மின்னோட்டத்துக்கு மாறியது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த ‘பவர் வார்’ ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஆனாலும், எடிசனைக் கெளரவிக்கும் விதத்தில் அமெரிக்க வீட்டு உபயோகச் சாதனங்கள் டிசியில் இயங்குவதாகவே வடிவமைக்கப்பட்டு வந்தன. அமெரிக்காவும் ஐரோப்பாவும் 1940, 1950களுக்குப் பிறகே, டிசியிலிருந்து ஏசி மின்சாரத்துக்கு மாறின. இன்று உலகம் முழுவதும் ஏசி மின்சாரம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
ஏசியா, டிசியா என்பதுபோலவே எடிசனா, டெஸ்லாவா என்கிற விவாதமும் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
எடிசனின் பல கண்டுபிடிப்புகளை அதே காலகட்டத்தில் பல்வேறு நபர்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஒருவேளை எடிசன் கண்டுபிடிக்காவிட்டாலும் வேறு யாராவது அவற்றைக் கண்டுபிடித்திருப்பார்கள். ஒளிரும் விளக்கு, போனோகிராஃப், நகரும் படங்கள் போன்ற ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய எடிசன், நவீன மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க இயலாத விஞ்ஞானியாகவே இருக்கிறார்!
இன்றைய மனிதர்கள் பயன்படுத்தும் டெஸ்லா காயில், நியான், ஃபுளோரசன்ட் விளக்குகள், கம்பியற்ற தகவல்தொடர்பு (வயர்லெஸ்) போன்றவை டெஸ்லாவால் கண்டுபிடிக்கப்பட்டவை. ரிமோட் கன்ட்ரோல், ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், எக்ஸ்-ரே, ரோபாடிக்ஸ் போன்றவற்றில் எல்லாம் டெஸ்லாவின் வயர்லெஸ் தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் டெஸ்லாவைக் கண்டுபிடிப்பாளர் என்று மட்டும் சொல்லாமல், ‘எதிர்காலத்தைச் சிந்தித்தவர்’ (Futurist) என்றழைக்கிறார்கள். டெஸ்லா வாழ்ந்த காலத்தில் கிடைக்காத புகழ், சென்ற நூற்றாண்டைத் தாண்டி இந்த நூற்றாண்டில் அதிகரித்துவருகிறது.