

மனித வாழ்க்கையை மாற்றியமைக்கும் விதமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தினமும் நிகழ்ந்துவருகின்றன. இந்த ஆண்டில் ஏற்படவிருக்கும் முக்கிய முன்னேற்றங்கள் என்ன?
நோ-கோட் செயற்கை நுண்ணறிவு (No-code AI):
பொறியாளர்கள் தங்களுக்கு வேண்டிய மென் பொருள் செயல்பாடுகளையும் தீர்வுகளையும் ஒரு வரிக் குறியீட்டைக்கூட (கோட்) எழுதாமல் நோ-கோட் செயற்கை நுண்ணறிவு மூலம் பெற்றுக்கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு அடிப்படை யிலான செயல்பாடுகளின் ஆற்றலைச் சாமானிய மக்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் சூழலை இது ஏற்படுத்தும்.
சாட்ஜிபிடி:
இத்தொழில்நுட்பத்தின் தானியங்கி சாட்போட்கள் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மனிதர் களைப் போன்று பேசுவதைப் புரிந்துகொண்டு, பதிலோ தீர்வோ அளிக்க முடியும். ஆழ்ந்த கற்றலின் அடிப்படையில் இயங்கும் இந்த சாட்ஜிபிடியால் சிக்கலான கணிதச் சமன்பாடுகளை நொடியில் தீர்க்கலாம்; அற்புதமான கவிதையை எழுதலாம்; ஓவியங்களை வரையலாம்; எந்தத் தலைப்பிலும் கட்டுரை எழுதலாம்.
மெட்டாவர்ஸ்:
மெட்டாவர்ஸ் என்பது முப்பரிமாண மெய்நிகர் உருவகப்படுத்தல். சென்னையில் வாழும் பெற்றோரும், ஆஸ்திரேலியாவில் வாழும் மகனும், கனடாவில் வாழும் மகளும் மெட்டாவர்ஸ் மூலம் நயாகரா அருவியை ஒன்றாகப் பார்த்து ரசிக்க முடியும். 2024க்குள் மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்தின் சந்தை மதிப்பு உலகளவில் 8,000 கோடி ரூபாயைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்புகள் (DIS):
மென்பொருள் அமைப்பின் பல்வேறு கூறுகளைத் தானியக்க மாக்குவதே இதன் அடிப்படை நோக்கம். மென் பொருள் வடிவமைப்பு, ஆட்டோமேஷன், அறிவியல் மேம்பாட்டுச் செயல்பாடுகள், பகுப்பாய்வு ஆகிய வற்றிலிருந்து பெறப்பட்ட நடைமுறைகளின் முழுக் கட்டமைப்பால் உருவான அமைப்பு இது. அமைப்புக் குறைபாடுகள், கணினிப் பாதிப்புகள் போன்றவற்றைக் களைவதன் மூலம் பெரும் நிறுவனங்களின் வணிக அபாயங்களை இது குறைக்கும்.
ஹைப்பர் ஆட்டோமேஷன்:
ஹைப்பர்-ஆட்டோ மேஷன் என்பது புதிய தொழில்நுட்பங்களின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது. 2026க்குள் ஹைப்பர் ஆட்டோமேஷன் சந்தைப் பங்கு ரூ.40,000 கோடியைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; உலகின் 80 சதவீத நிறுவனங்கள் உற்பத்தித்திறனையும் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்தவும் ஹைப்பர் ஆட்டோமேஷனை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இரட்டையர்கள்:
நிஜ வாழ்க்கை நிகழ்வுகளையும் செயல் முறைகளில் ஏற்படும் மாற்றங்களையும் முழுமையாகக் கவனிக்க வெவ்வேறு தரவுப் புள்ளி களின் ஒருங்கிணைப்பு இன்று அவசியமாகிவிட்டது. ஒருங்கிணைக்கப்படும் தரவுகளை இயந்திரங்களுக்கு வழங்குவதே தரவு அறிவியலாளர்களின் முக்கியச் செயல்பாடாக உள்ளது. இந்தச் செயல்பாட்டில் இருக்கும் சவால்களைக் களையும் நோக்கில் உருவானதே டிஜிட்டல் இரட்டையர்கள். இது நிஜ உலக நிறுவனங்களின் மெய்நிகர் பிரதிநிதித்துவங்களைக் குறிக்கிறது.
தொழில்களின் தரவு உருவாக்கம் (டேட்டாஃபிகேஷன்):
மனித வேலைகளைத் தரவு சார்ந்த தொழில்நுட்பமாக மாற்றியமைக்கும் செயலை இது குறிக்கிறது. அனைத்தையும் உள்ளடக்கிய தரவு சார்ந்த சமூகத்தை நோக்கிய முதல் படியே டேட்டாஃபிகேஷன். தொழிலாளர் பகுப்பாய்வு, தயாரிப்பு நடத்தைப் பகுப்பாய்வு, போக்குவரத்துப் பகுப்பாய்வு, சுகாதாரப் பகுப்பாய்வு போன்றவை ஒரே வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட பகுப்பாய்வுக் கலாச்சாரத்தின் வெவ்வேறு கிளைகளாக இதில் இருக்கும்.