மக்கள் தமிழ் வாழ்க!

மக்கள் தமிழ் வாழ்க!
Updated on
1 min read

‘ஒவ்வொரு எழுத்தாளரும், அவரவர் வட்டார நடையில் எழுதத் தொடங்கிவிட்டால், வாசிக்கிறவர்கள் பாடு பெரும்பாடாகி விடுமல்லவா?’ என்கிற கேள்வி, வாதத்துக்குச் சரி என்று தோன்றினாலும், இதில் உண்மையில்லை. தமிழ்த் தாய்க்கு எத்தனையோ முகங்கள்.
நாம் நினைப்பதுபோல் அவளுக்கு ஒரே முகம் இல்லை. ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்று பாரதி சொன்னது தேசத்துக்கு. தமிழ்நாட்டுத் தமிழ்த் தாய்க்குச் செட்டிநாட்டிலொரு முகம்; கொங்கு நாட்டிலொரு முகம்; சோழ நாட்டில் ஒன்று, நெல்லைச் சீமையில் ஒன்று, கரிசல் காட்டில், தொண்டை நாட்டில், நாஞ்சில் நாட்டில், மதுரை மண்ணில், இன்னும் பல (ஈழத்துத் தமிழையும் சேர்த்துக்கொள்ளலாம்). இப்படி வட்டாரந்தோறும் பல திருத்தமான முகங்கள் இருக்கின்றன. முகத்துக்கு ஒரு நாக்கு இருக்கிறது. நாக்குக்கு ஒரு பேச்சு இருக்கிறது. தமிழ் மொழி அவ்வளவு பரந்த விஸ்தாரமான மொழி. நீங்கள் நினைப்பதுபோல், இப்போது தமிழ் அறிஞர்கள் மேடையிலே பேசுகிற, எழுதுகிற ‘ஓட்டல் சாம்பார் மொழி’ அல்ல, நமது தமிழ்.

‘அதென்ன ஓட்டல் சாம்பார் மொழி?’

ஓட்டலில் சாப்பிடுவதற்குப் பல்வேறு நாக்கு ருசி கொண்டவர்கள் வருவார்கள். ஒருவருக்குப் புளிப்பு பிடிக்கும், ஒருவருக்குக் காரம் பிடிக்கும், ஒருவருக்குக் காரமே உதவாது. இப்படி வரும் எல்லாருக்கும் ஒத்துக்கொள்ளும்படியாக ஒரு சமரச(!) சாம்பார் செய்து விடுவான் ஓட்டல்காரன். ஏற்கெனவே பல முறை இதைச் சொல்லியிருக்கிறேன் என்றாலும் அவசியம் கருதித் திரும்பச் சொல்கிறேன். பெரியார் மேடையிலும்கூட, பேச்சு மொழியிலேயே பேசினார். ராஜாஜியும் அவருடைய மண்ணின் மொழியிலேயே பேசினார். கரிசல்காட்டுக் காமராஜரும் அவருடைய மொழியிலேயேதான் பேசினார். இந்த முப்பெரும் தலைவர்களும் மேடையில் பொய்த் தமிழில் பேசவே இல்லை. மெய்யான தமிழ் மொழியில் பேசினார்கள். நாமோ இன்று மேடையில் முகம் இல்லாத மொண்ணை மொழியில், அதாவது, தமிழ்போலத் தெரியும் ஒரு பொய்த் தமிழில் முழங்கிக்கொண்டிருக்கிறோம்.

கற்றோர் உருவாக்க நினைக்கும் பொதுமொழி (ஏட்டு நடை), மக்களின் பேச்சு மொழியிலுள்ள அத்தனையையும் தூக்கிச் சுமந்து செல்லுகிற, மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் உடையது அல்ல. இதற்குப் ‘பொய்த் தமிழ்’ என்று பெயர் சூட்டலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in