

ஒவ்வொரு மொழிக்கும் அது பேசப்படும் வட்டாரத்தைப் பொறுத்துத் தனித்த இயல்புண்டு. மக்கள் பயன்பாட்டு மொழிதான் இந்த வட்டார வழக்கு. நெல்லை, மதுரை, நடுநாடு, செட்டிநாடு, கொங்கு, நாஞ்சில், தஞ்சை, சென்னை, யாழ்ப்பாணம், மட்டக் களப்பு, இலங்கை மலையகம் எனத் தமிழுக்கு அழகு சேர்க்கும் பல வட்டார வழக்குமொழிகள் பயன்பாட்டில் உள்ளன.
படையெடுப்பும் பண்பாட்டுக் கலப்பும் வட்டார வழக்கு என்ற புழங்கு மொழி உருவாவதற்கான காரணம் எனலாம். ஒவ்வொரு வட்டார வழக்குச் சொற்கள் உருவாவதற்கு, ஒரு சுவாரசியமான பின்னணி இருக்கும். மிளகாய், இலங்கைக்கு கொச்சி துறைமுகம் வழியாகக் கொண்டுசெல்லப்பட்டது. கொச்சி யிலிருந்து கொண்டுவரப்பட்ட காய் என்பதால் அது இன்றும் யாழ்ப்பாண வட்டார வழக்கில் கொச்சிக்காய் என்றே அழைக்கப்படுகிறது. சென்னை வட்டார வழக்கில் ‘கானா பாட்டு’ என்றால் இங்குள்ள நாட்டார் பாடல். இந்தியில் கானா என்றாலே பாட்டுதான். வட இந்தியர்கள் வருகையின் தாக்கத்தால் இந்தச் சொல் இங்கு வந்திருக்கும். நெல்லைச் சீமை, ஜோலி என்ற சொல் வழக்குச் சொல்லாகப் பயன் பாட்டில் உள்ளது. ‘எங்கே தூரமா?’ எனக் கிளம்பிச் செல்பவரைக் கேட்டால், ‘ஆமா, ஒரு சோலியாப் போறேன்’ எனப் பதிலளிப்பார். வேலை என்பதற்கான மலையாளச் சொல்தான் ஜோலி.
பரவலாக்கப்படாத நகர வளர்ச்சியால் இன்று வட்டார வழக்குகள் சிதைந்துவருகின்றன. பெரும்பாலானவர்கள் கல்வி, வேலை என வாய்ப்புகளுக்காகப் பெருநகரப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து அங்கேயே புதிய தலைமுறை உருவாகிறது. இந்தப் புதியவர்களுக்கு வட்டார வழக்குகள் கையளிக்கப்படுவதில்லை. இந்தச் சூழலில், வட்டார வழக்குகளை இலக்கியங்கள்தான் வேராகப் பிடித்துக்கொண்டுள்ளன. வட்டார வழக்குக் கதைகளைப் படிக்கும்போது அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தங்கள் வட்டார வழக்கைக் குறித்தும் வாழ்க்கையைக் குறித்தும் நிச்சயம் நினைவேக்கம் உண்டாகும்.
இந்தப் பின்னணியில் தமிழில் வட்டார வழக்கு இலக்கியங்கள் விசேஷமானவை. தொடக்கத்திலிருந்தே பாகுபாட்டுடன் வட்டார இலக்கியங்களைப் பிரிப்பது விமர்சிக்கப்பட்டாலும் அதன் புழங்குமொழியின் அடிப்படையில் அப்படி வகைப்படுத்திப் பார்க்கலாம்.
நவீனத் தமிழ் இலக்கியத்தில் கரிசல் எழுத்துகள் புகழ்பெற்றவை. கி.ராஜநாராயணனிடமிருந்துதான் அது தொடங்கியது. நெல்லைச் சீமையின் கிழக்குப் பகுதிதான் கரிசல். பள்ளிக் கல்விகூட முடிக்காதவர் கிரா. அதனால் அவருக்குத் தெரிந்த கரிசல் மக்களின் புழங்குமொழியில்தான் அவர் எழுதினார். அது தமிழ் இலக்கியத்தில் புதிய அலையை உண்டாக்கியது. அவரது ‘கோபல்ல கிராமம்’ நாவல் கரிசல் வட்டார வழக்கு நாவல்களுக்கு முன்மாதிரி. பூமணி, தனுஷ் கோடி ராமசாமி, சோ.தர்மன், லட்சுமணப் பெருமாள் என அது ஒரு புதிய மரபானது. அதுபோல் கொங்கு வட்டார மொழியில் ஆர்.சண்முகசுந்தரம் எழுதினார். இவரது ‘நாகம்மாள்’ நாவலை இந்த வகையில் முக்கியமானதாகச் சொல்லலாம். பெருமாள் முருகன், எம்.கோபாலகிருஷ்ணன் போன்ற எழுத்தா ளர்கள் இந்தப் புழங்கு மொழியையும் பண்பாட்டையும் தங்கள் கதைகளின் வழிப் பதிவுசெய்து வருகிறார்கள்.
நாஞ்சில் வட்டார வழக்கைக் கதைகள் வழி பிரபலப்படுத்தியவர் நாஞ்சில் நாடன். அந்தப் பகுதி மக்களின் மொழியையும் செழிப்பான பண்பாட்டையும் இவர் கதைகள் வழி விருப்பத்துடன் சித்தரித்தார். இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’ இதற்குச் சிறந்த உதாரணம். குமரி மாவட்டத்தின் இன்னொரு வட்டாரமான விளவங்கோடு வட்டாரப் புழங்கு மொழி அதிகம் சங்கத் தமிழ்போல் கடுந்தமிழாக இருக்கிறது. குமார செல்வாவின் கதைகளில் இந்தக் கடுந்தமிழ்க் கதைகளை வாசிக்க முடியும். இவரது ‘குன்னிமுத்து’ இந்தக் கடுந்தமிழுக்கு நல் எடுத்துக்காட்டு. தஞ்சை வட்டாரக் கதைகளை எழுதியவர்களில் சோலை சுந்தரபெருமாள் விசேஷமானவர். இவரைத் தொடர்ந்து சி.எம்.முத்துவைச் சொல்லலாம். தமிழக வட்டார வழக்கு இலக்கியத்தில் நடுநாடு இப்போது புதுக் கவனம் பெற்றுவருகிறது. கண்மணி குணசேகரனின் கதைகளில் இந்த வழக்கும் பழக்கவழக்கமும் திருத்தமாகப் பதிவாகியுள்ளது. இவரது ‘அஞ்சலை’ நாவலில் இந்த அம்சத்தைப் பார்க்க முடியும்.
| வட்டார வழக்கு அகராதிகள் வேற்று மொழிச் சொல்லுக்கு அகராதி இருப்பதுபோல் தமிழ் மொழிக்குள் இருக்கும் பல்வேறு வட்டார வழக்குகளுக்காகவும் தனி அகராதிகள் உண்டு. தமிழ் அறிஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் முயற்சியால் தமிழுக்கு இந்த அருங்கொடையை அளித்துள்ளனர். அந்த வகையில் நெல்லையின் ஒரு பகுதியான ‘கரிசல் வழக்குச் சொல்லகராதி’யை கி.ராஜநாராயணன் தொகுத்துள்ளார். வழக்குச் சொற்கள், விடுகதைகள், சொலவடைகள், விளையாட்டுகள் என கரிசல் வாழ்க்கையைப் பற்றிய முழுமையான தொகுப்பு இது. வெள் உவன் ஏனைய நெல்லைப் பகுதிகளுக்கான ‘நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை’யை உருவாக்கியுள்ளார். சென்னைக்கு வெளியே வடதமிழ்நாடு என அடையாளப்படுத்தப்படும் பகுதியின் சொல் வழக்கு தனித்துவமானது. அந்தப் பகுதியின் வழக்குகளைத் தன் கதைகளில் எழுதியவர் கண்மணி குணசேகரன். அந்தப் பகுதியின் வழக்கை ‘நடுநாட்டுச் சொல்லகராதி’ என்ற பெயரில் தொகுத்துள்ளார். பேராசிரியர் அ.கா.பெருமாள் ‘நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி' என்ற பெயரில் நாஞ்சில் வட்டார வழக்கைத் தொகுத்துள்ளார். பொன்னீலன் ‘தென்குமரி வட்டார வழக்குகள்’ என்ற பெயரில் குமரி வட்டார வழக்குகளைத் தொகுத்துள்ளார். பெருமாள்முருகன் ‘கொங்கு வட்டாரச் சொல்லகராதி’யைத் தொகுத்துள்ளார். பழநியப்பா சுப்பிரமணியன் ‘செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி’யைத் தொகுத்துள்ளார். தஞ்சை வட்டார வழக்குச் சொல்லகராதியை பரிதி பாண்டியன் ‘நெற்களஞ்சியத்தின் சொற்களஞ்சியம்’ என்னும் பெயரில் தொகுத்துள்ளார். |
சொல்ல இனிக்கும் சொலவடைக் கதை
வட்டார வழக்குகளின் சிறப்பு, அதன் சொலவடைதான். இது பழமொழி, விடுகதை போல் அல்லாமல் பெரிய கதையையும் காட்சி விஸ்தரிப்பையும் கொண்டிருக்கும். நாம் சொல்லும் கருத்துக்கு அடை கொடுப்பது இருக்கும். அந்தக் காலத்துக் கிராமத்து ஆண்களால், சொலவடை இல்லாமல் பேசவே முடியாது.
நெல்லைச் சீமைதான் சொலவடைகளின் மையம். அதிலும் கரிசல் பகுதியின் சொலவடைகள், சங்க இலக்கியப் பாட்டில் உள்ள அர்த்தச் செறிவையும் சுவாரசியத்தையும் கொண்டவை. கரிசல்காட்டின் கிழக்குப் பகுதிதான் அசலான கரிசல் காடு என்பார்கள். பனைகளும் உடை மரங்களும் நிறைந்த பகுதியாக இருந்தது இது. இப்போது வேலிக் கருவைகள் பெருத்துவிட்டன. இந்த வேலிகளும் பனைகளும் நிற்கும் காடுதான் மயில்கள், நரிகள், முயல்கள் போன்ற ஜீவராசிகளின் வாழிடம். இங்குள்ள பனங்காட்டு நரிகள் தந்திரத்திற்குப் பெயர் பெற்றவை என்பது பொதுக் கற்பிதம். ‘பனங்காட்டு நரிகள் சலசலப்புக்கு அஞ்சாதவை’ எனச் சொல்வார்கள். இந்தப் பின்னணியை வைத்து உருவான சொலவடைதான்; ‘நா(ன்) ஏய்ச்ச நரி தண்ணீ குடிக்காம அலையுது. நீ என்னய ஏய்க்கப் பாக்றீயா?’. ‘ஏய்ச்ச’ என்ற சொல் ஏமாற்றிய என்ற சொல்லின் வட்டார வழக்கு.
தண்ணீர் தேடி வந்த நரியைச் சம்சாரி ஒருவன் பார்த்திருக்கிறான். நரி அவனிடம் நான் இந்த மாதிரி தண்ணீர் தேடி வந்தேன் எனச் சொன்னது. பக்கத்தில் உள்ள சம்சாரியின் ஆட்டுத் தொழுவத்திலேயே தண்ணீர் இருந்தது. நரி தண்ணீரைக் குடித்தால் சரி. ஆனால், ‘இருக்க எடங்கொடுத்த கெடைக்கு ரெண்டாடைக் கேட்ட’ கதையாக ஆடுகளை இழுத்துப் போய்விட்டால்? சம்சாரி யோசனை பண்ணினான். அந்த நரியைக் கொஞ்சம் காட்டுக்குள் கூட்டிப் போய், “அங்க தூரத்துல பாரு தண்ணி ஆறா ஓடுது. போய்க் குடிச்சுக்கோ” எனச் சொல்லியிருக்கிறான். உண்மையில் அங்கு ஓடியது ஆறு இல்லை. அது வெறும் கானல் நீர். நரி, தாகம் தீரப்போகும் ஆசையில் துள்ளிக் குதித்து ஓடியது. தூரத்தில் இருந்து பார்த்த இடத்தில் ஆற்றோட்டம் இல்லை. ஆனால், இன்னும் தூரத்தில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. நரிக்கு அது ஆற்றோட்டம்போல் தெரிந்தது. அங்கும் ஓடிச் சென்று பார்த்தது... ஏமாந்து போனது. ஆசை வெட்கம் அறியாதல்லவா? நரியும் தொடர்ந்து ஏமாந்துகொண்டிருந்தது. கானல் நீர் நரிக்குக் குடிக்கக் கிடைக்குமா என்ன? அந்த நரி தண்ணீர் குடிக்காமல் கரிசல் காடு முழுக்க அலைந்துகொண்டே இருந்தது.
தந்திரத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படும் நரியையே ஒரு சம்சாரி ஏமாற்றிவிட்டான். இந்தக் கதையை வைத்துத்தான், ‘நான் ஏமாற்றிய நரியே இன்னும் தண்ணீர் குடிக்காமல் அலைகிறது. அப்பேர்ப்பட்ட என்னையே நீ ஏமாற்ற நினைக்கிறாயா?’ (‘நான் ஏய்ச்ச நரி தண்ணீ குடிக்காம அலையுது. நீ என்னய ஏய்க்கப் பாக்றீயா?’) எனச் சொல்வார்கள்.
- மண்குதிரை