

தமிழில் மாற்றுத் திறனாளி கதா பாத்திரத்தைக் கையாண்ட பெரும் பாலான திரைப்படங்கள் பார்வையாளர்களிடம் மலினமான பரிதாப உணர்வைத் தூண்டுவ தற்கே அவர்களைப் பயன் படுத்தியுள்ளன. இதைவிடக் கொடுமை என்னவென்றால் பல திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகள் கேலிசெய்யப்படுவதை நகைச்சுவை என்கிற பெயரில் திணித்துள்ளன. கவுண்ட மணி, விவேக், சந்தானம் போன்றோர் இது போன்ற நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பங்களித்துள்ளனர்.
புரிதலை அதிகப்படுத்தினவா? : சிவாஜி கணேசன் (’பாகப்பிரிவினை’, ‘தவப்புதல்வன்’, ‘ஆலயமணி’), கமல் ஹாசன் (’ராஜபார்வை’, ‘அன்பே சிவம்’) விக்ரம் (’காசி’, ‘தெய்வத் திருமகள்’), சூர்யா (பேரழகன்), சிம்ரன் (துள்ளாத மனமும் துள்ளும்), ஜோதிகா (’பேரழகன்’, ‘மொழி’), நயன்தாரா (’நானும் ரவுடிதான்’, ‘நெற்றிக்கண்’) என பல முன்னணி நட்சத்திரங்கள் மாற்றுத்திறனாளியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளனர். அத்தகைய திரைப்படங்களில் அவர்களுடைய நட்சத்திர அந்தஸ்தைக் கருத்தில் கொண்டாவது மாற்றுத் திறனாளிக் கதாபாத்திரங்கள் கண்ணியமாகவும் மதிப்புக்குரியதாகவும் சித்தரிக்கப்பட்டுவிடும். ஆனால், ஒட்டுமொத்தமாக இந்தப் படங்கள் மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கையையும் அவர்களைப் பற்றிய பிறரின் புரிதலையும் மேம்படுத்துவதற்கு எவ்வளவு பங்களித்திருக்கின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ (1990) மூன்று தேசிய விருதுகளை வென்றது. இதில் மனநலக் குறைபாட்டுடன் பிறந்த குழந்தையை சுற்றியிருப்போர் மோசமாக நடத்துவது வலுவாகச் சாடப்பட்டிருக்கும். ஆனால் அந்தக் குழந்தையின் குறைபாடு என்ன என்னும் தெளிவான விளக்கமோ, அது தொடர்பான அறிவியல்பூர்வமான விளக்கமோ படத்தில் இருக்காது. இறுதியில் அந்தக் குழந்தை இறந்துவிடுவது போல் காண்பிப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு அவநம்பிக்கையைத் தருவதோடு, அவர்களை முன்வைத்து பிறரின் பரிதாபத்தைத் தூண்டுவதற்கான கிளாசிக் உதாரணமாக இந்தப் படத்தை மாற்றிவிடுகிறது.
புரிந்துகொள்ளும் முயற்சி: ராதாமோகனின் ‘மொழி’ (2007) திரைப்படத்தில் பேச்சு-செவித் திறன் அற்ற நாயகியிடம் அவருடைய செய்கை மொழியை ஒரு பெண் குரலாகக் கற்பனை செய்துகொண்டு புரிந்துகொள்வதாக நாயகன் கூறுவார். நாயகி உடனடியாக அதை நிராகரிப்பதோடு ‘என் இயல்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், என்னிடம் பழக வேண்டாம்’ என்பதை நாயகனுக்கு உணர்த்துவார். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு பிறரைவிட அவர்களைத் தாழ்வானவர்களாக உணரவைக்கும் வகையில் செயல்படுவதை விமர்சிக்கும் வகையிலான இந்தக் காட்சி அவர்கள் உலகைப் புரிந்துகொள்ளும் முயற்சிக்கு ஒரு நல்ல சான்று.
ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கிய ‘ஹரிதாஸ்’ (2013) கறாரான காவல்துறை அதிகாரியான தந்தை (கிஷோர்) தன்னுடைய மகனின் ஆட்டிச குறைபாட்டைப் படிப்படியாகப் புரிந்துகொண்டு, அவன் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கு உதவுவது போன்ற நேர்மறையான கதையைக் கொண்டிருந்தது. இந்தப் படம் பரவலான பாராட்டு களையும் வணிக வெற்றியையும் பெற்றது.
விமர்சனங்கள்: ராம் இயக்கிய ‘பேரன்பு (2018) திரைப்படத்தில் மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட பதின்பருவச் சிறுமியும் அவளை ஒற்றை ஆளாக கவனித்துக்கொள்ளும் தந்தையும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் உணர்வுபூர்வமாகப் பேசியது, விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தப் படம் மாற்றுத் திறனாளிகள் சிலரிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களையும் ஈர்த்தது.
மாற்றுத் திறனாளிகள் குறித்து நல்ல நோக்கத்துடன் எடுக்கப்படும் சில திரைப் படங்களிலும் எதிர்மறையான சிந்தனைகள் வெளிப்படுவதுண்டு. விபத்தின் மூலம் மாற்றுத்திறனாளி ஆகிவிட்டவர் இறந்துவிடுவது போல் காண்பிப்பது, உடல் உறுப்பை இழந்து துயரப்படுவதைவிட உயிரை இழந்திருந்தால்கூடப் பரவாயில்லை என்று சம்பந்தப்பட்டவரோ பிறரோ பேசுவது ஆகியவையும் மாற்றுத் திறனாளிகளின் உணர்வுகள் குறித்த கூருணர்வு இன்மையின் வெளிப்பாடுதான்.
அணுகுமுறை மாற்றம்: சினிமாவில் தொழில்முறை அணுகுமுறை அதிகரிப்பதாலும் பார்வையாளர்கள் ரசனை மேம்பட்டுவருவதாலும் மாற்றுத் திறனாளிகளின் சித்தரிப்பில் சில நல்ல மாற்றங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. நெற்றிக்கண்’(2021) திரைப்படத்தில் பார்வையற்றவராக நடித்த நயன்தாராவுக்கு பார்வையற்ற ஒருவர் பயிற்சி அளித்திருக்கிறார். மிலிந்த் ராவ் இயக்கிய அந்தப் படத்தில் பார்வையற்றவர்களின் உடல்மொழி, செயல்பாடுகள் குறித்த நணுக்கமான விவரங்கள்கூட சரியாகப் பதிவாகியிருந்ததாகப் பாராட்டப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளை இதுபோல் நடிகர்களுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்துவது அவர்களுக்கான கண்ணியமான தொழில்முறை வாய்ப்பாக அமைவது வரவேற்கத்தக்கது. ஆனால், இதன் அடுத்தகட்டமாக உண்மையான மாற்றுத் திறனாளிகளே மாற்றுத் திறனாளி கதாபாத்திரங்களில் நடிக்கவைக்கப்படுவதும் பரவலாக வேண்டும். திரைப்படத் துறையில் அவர்களுக்கான வாய்ப்புகளும் மரியாதையும் அதிகரிக்க வேண்டும். பேச்சு-செவித் திறன் அற்ற நடிகை அபிநயா பெரும்பாலான படங்களில் எந்தக் குறையும் இல்லாத சாதாரண பெண்ணாக நடிக்கிறார். இவரைப் போன்ற மாற்றுத்திறனாளிக் கலைஞர்கள் அதிகரிக்க வேண்டும். இதற்கெல்லாம் தமிழ் சினிமா இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.