

தயாளன்
dayalabs@yahoo.com
தமிழ்க் காட்சி ஊடகங்களின் எழுச்சி 90களின் பிற் பகுதியில் நிகழ்ந்தது. முழு நேரப் பொழுதுபோக்குத் தொலைக்காட்சி ஊடகமாக நிலை பெற்ற ‘சன் தொலைக்காட்சி’ படிப்படியாக நெடுந்தொடர்கள், சினிமாக்கள், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் வழியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதோடு வணிக நிறுவனமாகவும் கோலோச்சியது. தமிழ்ப் பண்பாடு சார்ந்த வாழ்க்கையில் சினிமாவுக்கு இணையாகப் பெரும் தாக்கத்தையும் விளைவுகளையும் செலுத்திய இன்னொரு ஊடகம் உண்டெனில் அது தொலைக்காட்சி அலைவரிசைகளே.
நெடுந்தொடர்களின் தாக்கமும் பரிணாமமும்: சினிமா எப்போதுமே ஒரு சமூக நிகழ்வு. ஆனால், தொலைக்காட்சிகள் குடும்பங்களையும், தனிநபர்களையும் பாதிக்கும் தன்மை கொண்டவை. குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண் களிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செலுத்தும் செல்வாக்கு அபரிமிதமானது. பெண்களைக் குறிவைத்துத் தயாரிக்கப் படும் நெடுந்தொடர்களே இதற்கு சாட்சி. தொடக்க காலத் தமிழ் நெடுந்தொடர்கள் பழமைவாதக் கதைகளாகவும், குடும்ப அமைப்பிற்குள் நிகழும் முரண்களைக் களமாகக் கொண்ட கதைகளாகவுமே இருந்தன.
இயக்குநர் கே.பாலசந்தர், திரைப்படங் களை இயக்கிக்கொண்டிருந்த காலத்தி லேயே ‘காதல் பகடை’, ‘கையளவு மனசு’ போன்ற தொலைக்காட்சித் தொடர்களை இயக்கத் தொடங்கினார். அவரைப் போன்றவர்களின் வருகைக்குப் பிறகு தான் தமிழில் நேரடியாக எடுக்கப்பட்ட நெடுந்தொடர்கள் பரவலான வரவேற்பைப் பெறத் தொடங்கின. ‘மர்ம தேசம்’ தொடரின் இயக்குநர் நாகா போன்றோர் திரைப்பட இயக்குநர்கள் அளவுக்குப் பிரபலமாக இருந்தனர்.
நெடுந்தொடர்களின் பரிணாம வளர்ச்சி காரணமாக, கதைகளிலும் கதைப்போக்குகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக ‘சித்தி’, ‘கோலங்கள்’ தொடங்கி நெடுந்தொடர்கள் குடும்பக் கதைகளைப் பேசினாலும் அந்தக் கதைகளில் இடம்பெற்ற முதன்மைப் பெண் கதாபாத்திரங்கள், நவீனத்தன்மை கொண்டவர்களாக இருந்தனர். இந்த நாயகிகள் சுயமாகச் சிந்திக்கக்கூடியவர்களாகவும், தலைமைப் பண்பு கொண்டவர்களாகவும் இருந்தனர். பிரச்சினை களை உணர்ந்து அவற்றைத் தீர்க்கக் கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தனர். ‘சித்தி’ சாரதாவும், ‘கோலங்கள்’ அபியும் தமிழ்நாட்டுப் பெண்களின் அபிமான கதாபாத்திரங்களாக மாறியது தற்செய லானது அல்ல.
இதன் பின்னணியில் தமிழ் சமூகத்தின் பண்பாட்டில் நிகழ்ந்த அசைவுகளும் காரணம். இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சென்னை போன்ற பெரு நகரங்களைக் கொண்ட கதைகள் மட்டுமல்ல. மதுரையைக் களமாகக் கொண்டு தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ நெடுந்தொடரும் இந்தத் தன்மையைப் பிரதிபலிக்கின்றது. சாதிய இறுக்கம், பெண் ஒடுக்குமுறை, ஆணாதிக்கம் ஆகியவற்றை எள்ளி நகையாடும் ‘எதிர் நீச்சல்’ நந்தினியை தமிழ்ப் பெண்கள் கொண்டாடுவதில் வியப்பில்லை. இதேபோல் ஸ்டார் விஜய், ஸீ (ZEE) அலை வரிசைகளிலும் வலிமையான பெண் கதாபாத்திரங்களைக் கொண்ட சில நெடுந் தொடர்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
அதே நேரம் இப்போதும் சில நெடுந் தொடர்கள் பிற் போக்கு, மூடநம்பிக்கைக் கருத்துகளைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. பழிக்குப் பழி வாங்குதல், திருமணத்தை மீறிய உறவு ஆகியவற்றை வைத்து மலினமான கதைச் சூழல்களை உருவாக்கி வன்முறை மனநிலைக்கும் ஆணாதிக்க விழுமியங்களுக்கும் வலுசேர்க்கின்றன.
ரியாலிட்டி ஷோக்கள்: சன் தொலைக்காட்சியைத் தொடர்ந்து நிகழ்ச்சி வடிவமைப்பிலும் தரத்திலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற விஜய் தொலைக்காட்சியும் நெடுந்தொடர்களையே தயாரித்தது. எனினும் அந்தத் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தனித்தன்மை கொண்டவையாக இருந்தன. பெரும்பாலும் நகைச்சுவை, சினிமா, பாடல்கள் ஆகியவற்றை மையமாக வைத்தே நிகழ்ச்சிகள் இயக்கப்பட்டன. அதன் நெறியாளர்கள் மிகப்பெரும் புகழடையத் தொடங்கினர். ‘டிடி' என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி, ‘நீயா நானா' கோபிநாத், சிவகார்த்திகேயன், ம.கா.பா ஆனந்த், பிரியங்கா ஆகியோர் விஜய் டிவி ரசிகர்களிடம் செல்வாக்கு பெற்ற அசைக்க முடியாத நங்கூரங்களாக விளங்குகின்றனர். இவர்கள் சினிமா பிரபலங்களுக்கு இணையாக மக்களிடம் வரவேற்பைப் பெற்றி ருக்கிறார்கள் என்று சொல்வது மிகையல்ல.
ரியாலிட்டி ஷோக்கள் என்று வகைப் படுத்தப்படும் புனைவற்ற நிகழ்ச்சிகளில் பாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது இடம்பெறும் உருவக் கேலிகள், அர்த்தமற்ற நகைச்சுவைகள், நெறியாளர்களின் கோமாளித்தனங்கள் முகம் சுளிக்க வைக் கின்றன. பெரும்பாலும் ஒரே விதமான நிகழ்ச்சிகளே இருந்தாலும், ‘நீயா நானா’ போல தொடர்ச்சியாக சமூகத்தின் உள்அடுக்குகளில் நிகழும் மாற்றங்களை விவாதிக்கும் நிகழ்ச்சிகள் முக்கியமானவை. ‘நீயா நானா’வின் தலைப்புகளும் அதன் நெறியாள்கையும் 15 வருடங்களாகத் தொடர்வது வியப்பான செய்தி.
நவீன நிகழ்ச்சியாக வரும் ‘பிக்பாஸ்’ பண்பாட்டு அதிர்ச்சியைப் பார்வையாளர்களுக்கு அளித்தாலும், பெரும் விவாதமாக மாறிவருகிறது என்பது உண்மை. ‘சேரி பிகேவியர்' என்கிற கொச்சை வார்த்தை, பெண்கள் பாதுகாப்பு, மனநல பாதிப்பு போன்ற விஷயங்கள் விவாதிக்கப்படுகின் றன. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் பெரிய நடிகரான கமல் பரிந்துரைக்கும் நூல்கள் இந்த நிகழ்ச்சியின் சாதகமான அம்சம்.
டிரெண்டிங்கை தொடரும் செய்தி அலைவரிசைகள்: தொலைக்காட்சி அலைவரிசைகளின் இன்னொரு வகைமை யான செய்தித் தொலைக்காட்சிகள் தமிழ்ப் பண்பாடு, அரசியல், சமூகம் ஆகியவற்றில் நேரடியாக தாக்கத்தைச் செலுத்துகின்றன. பெரும்பாலும் எல்லா செய்தி அலைவரிசை களும் ஒரே விதமான வடிவத்தையே பின்பற்று கின்றன. 24 மணி நேரத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் புதிய வடிவப் பாய்ச்சலாக வந்த அலைவரிசை ‘புதிய தலைமுறை’. செய்தி வழங்கும் முறைகளில் நவீனம், உயர்தரமான ஒளிபரப்பு என்று தனித்தன்மையுடன் இருந்தது. செய்திகளை அலசும் ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘ரௌத்திரம் பழகு’, ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ போன்ற நிகழ்ச்சிகள் அந்த அலைவரிசையின் தரத்திற்கு சான்று.
ஆனால், காலம் மாறமாற, ‘பிரேக்கிங் நியூஸ்' கலாச்சாரம் செய்தி அலைவரிசைகளைப் பிடித்தாட்டத் தொடங்கிவிட்டது. அரை மணி நேர செய்தித் தொகுப்பு, அவ்வப்போது ‘பிரேக்கிங்' என்கிற வட்டத்திற்குள் செய்தி ஊடகங்கள் விழுந்துவிட்டன. செய்திகளின் ஆயுள்காலம் சுருங்கி விட்டது. செய்திகளைவிட அதைச் சொல்லும் முறைக்கு முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. செய்தியாளர்கள் நேரடியாகச் சென்று களத்தில் செய்தி களை சேகரிப்பது, கவனப்படுத்தப்பட வேண்டிய விஷயங்களைச் சிரத்தையுடன் கவனப்படுத்துவது ஆகிய வற்றுக்கு மாறாக சமூக வலைத்தள டிரெண்டிங்கை செய்தியாக்கும் நிலைமை அதிகமாகி வருகிறது. செய்திகளின் தலைப்புகள் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப் படுகின்றன. இத னால் செய்திகளின் உள்ளடக்கம் நீர்த்துப் போகிறது, சில நேரம் திரிபடைகிறது. செய்திகளைத் தாண்டி, கருத்துருவாக்க நிகழ்வுதான் முன்னிலை பெறுகிறது.
செய்தி சார்ந்த நிகழ்ச்சிகள் குறைந்து விட்டன. ஆவணப்படங்கள் என்ற பெயரில் கட்டுரை போன்ற ‘வீடியோ தொகுப்புகள்' வெளிவருகின்றன. எடிட்டோரியல் என்கிற நடைமுறையை மார்க்கெட்டிங் துறை கைப்பற்றிவிட்டது. செய்திகளை பின்தொடர்தல் என்கிற பண்பு முற்றிலும் அழிந்துவிட்டது. கிரைம், சினிமா, அரசியல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட செய்திகளே அதிகமாக வழங்கப்படுகின்றன.
பிரைம் டைம் விவாத நிகழ்ச்சிகள் பத்து வருடங்களாக வடிவத்திலும், உள்ளடக் கத்திலும் ஒரே விதமாக, சலிப்போடு தொடர்கின்றன. காட்சி ஊடக எழுத்து என்பது தனித்தன்மை கொண்டது என்கிற புரிதல் குறைவாகவே இருக்கிறது. செய்தித்தாள்களுக்கு எழுதுவது போலவே, காட்சி ஊடகங்களுக்கும் எழுதப்படுகிறது. இவ்வாறு எழுதுவதால், காட்டப்படும் காட்சிகளுக்கான வர்ணனையாகவே அவை இருக்கின்றன. படைப்பூக்கம் கொண்ட செய்தித் தொகுப்பாக அவை இருக்காது. சமூக வலைத்தள செய்தி களே பெரும்பாலும் மறு உற்பத்தி செய்யப்படு கின்றன என்பதும் பெரிய குறையே.
கடந்த 25 ஆண்டுகளில் தமிழ் தொலைக் காட்சி ஊடகங்கள் செலுத்தியிருக்கும் தாக்கம் மிகப் பெரியது. அதேநேரம் இப்போது திறன்பேசி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஓர் ஊடகமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், மிகக் கடுமையான நெருக்கடியையும் சிக்கலையும் தமிழ்க் காட்சி ஊடகங்கள் எதிர்கொள்கின்றன என்பதுதான் உண்மை. இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் காட்சி ஊடகங்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
கட்டுரையாளர், ஊடகவியலாளர்