பார்த்தாலே பரவசம்!

பார்த்தாலே பரவசம்!
Updated on
3 min read

தொலைக்காட்சி என்னும் நவீனக் கருவி இந்தியாவில் அறிமுகமான காலகட்டத்தில், மொட்டைமாடியில் ஆண்டெனா இருந்தாலே அந்த வீட்டை ஏக்கத்தோடு பார்த்த காலம் ஒன்று உண்டு. அந்த வீட்டில் திறந்து மூடும் வசதிக்கொண்ட மரப்பெட்டிக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிக்கு அன்று இருந்த மதிப்புக்கு ஈடு இணையில்லை.

காட்சிகளின் கனாக்காலம்: எண்பதுகளில் ஒரு தெருவில் ஒரு வீட்டில் தொலைக்காட்சி இருந்தாலே பெரிய விஷயம். விடுமுறை நாள்களில் அந்த வீட்டை சிறுவர், சிறுமியர் மொய்த்துக்கொண்டிருப்பார்கள். சில நேரம் தொலைக்காட்சி வைத்திருப்போர் வீட்டுக்குள்கூட விடமாட்டார்கள். அப்போதும் அந்த வீட்டின் ஜன்னலை ஆக்கிரமித்து தொலைக்காட்சிப் பார்த்த தலைமுறை இன்று 40 - 45 வயதைக் கடந்திருக்கும்.

மொழியே தெரியாவிட்டாலும் ‘ராமாயணம்’, ‘மகாபாரதம்’ போன்ற இந்தித் தொடர்களை விடாமல் பார்த்த காலம் அது. அப்போதெல்லாம் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் மிகவும் அரிது. எப்போதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் மாநில மொழி வரிசையில் விருதுபெற்ற தமிழ்ப் படம் ஒளிபரப்பப்படும். அந்தப் படத்தைப் பார்க்க வீட்டு வேலைகளைக்கூட விரைவாக முடித்து விட்டு, தொலைக்காட்சி இருக்கும் வீட்டுக்கு தாய்மார்கள் படையெடுத்த காலம், கனாக்காலம்.

தொலைக்காட்சி என்பது அன்று வியப்புக் குரிய ஒரு பொருள். தொலைக்காட்சி வைத்திருந்தால் செல்வந்தர். தொலைக்காட்சி வைத்திருக்கும் வீட்டின் சிறார்கள் அவ்வளவு கெத்து காட்டுவார்கள். சிறுவயதிலிருந்தே ஒரு மதிப்புவாய்ந்த பொருளாக அறிமுகமான தொலைக்காட்சியை எப்படியாவது வாங்க வேண்டும் என்கிற ஏக்கம் அன்று எல்லோருக்குமே இருந்தது. அதுவும் எண்பதுகளின் பிற்பகுதியில் தூர்தர்ஷனில் தமிழ் ஒளிபரப்புச் சேவை தொடங்கிய பிறகு, அந்த ஏக்கம் இன்னும் அதிகரித்தது.

நெருக்கமான தொலைக்காட்சி: ஒவ்வொரு நாளும் ஒரு தமிழ்த் தொடர், தினந்தோறும் தூர்தர்ஷனில் தமிழ் செய்திகள், செவ்வாய்க்கிழமையில் ஒரு மணி நேர நாடகம், வெள்ளிக்கிழமையில் ‘ஒளியும் ஒலியும்’, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்ப் படம் எனத் தொலைக்காட்சி ஒவ்வொருவருக்கும் இன்னும் நெருக்காமனது. அந்தக் காலகட்டத்தில் சிறுவர்களுக் கான ‘கண்மணி பூங்கா’, உழவர் களுக்கான ‘வயலும் வாழ்வும்’, நிகழ்ச்சிகள் தொடர்பான நேயர் களின் கடிதங்கள் வாசிக்கப்படும் ‘எதிரொலி’ போன்ற நிகழ்ச்சிகளைக்கூட எல்லோரும் தவறவிடாமல் பார்த்து மகிழ்ந்திருந்தனர்.

தொலைக்காட்சியில் காட்சிகள் தெளிவாகத் தெரியாமல் போனால், ஆண்டெனாவைத் திருப்புவது, இலங்கைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண ஆண்டெனா திசையை மாற்றுவது, காட்சிகளைத் தெளிவாகப் பார்க்க பூஸ்டர்கள் பொருத்துவது எனத் தொலைக்காட்சிக் கதைகள் சுவாரசியம் நிரம்பியவை. எல்லா நேரமும் தொலைக் காட்சியைப் பார்க்கும் வசதி அன்றைக்குக் கிடையாது. அதற்கென்று ஒரு நேரம் இருந்தது. அதனால், தொலைக் காட்சிக்கும் மதிப்பு இருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அப்பால் ‘வீடியோ டெக்', சினிமா வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு எடுத்து தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பது இன்னொரு தனி சுகம். விடுமுறை நாள்கள், திருவிழாக்கள், சுபக் காரியங்கள், இவ்வளவு ஏன் துக்க நிகழ்வுகளில்கூட அன்று டெக்கை வாடகைக்கு எடுத்துத் தொலைக்காட்சியில் படங்கள் பார்க்கும் பழக்கம் இருந்தது.

அலைவரிசைகளின் வருகை: ஆனால், தொண்ணூறு களின் முற்பகுதியில் கேபிள் இணைப்புத் தொழிலுக்கு அனுமதி கிடைத்த பிறகு தொலைக்காட்சியில் நாள்தோறும் இரண்டு படங்கள் என்று ஏரியாவுக்கு ஏரியா அதகளப்படத் தொடங்கியது. இதற்கும் மக்களிடம் வரவேற்பு இருக்கவே செய்தது. இதன் நீட்சி கேபிள் கனெக்‌ஷன் வழியாக சாட்டிலைட் அலைவரிசைகள் வரவும் வழிவகுத்தது. முதன்முதலில் 1993இல் சன் டி.வி. தமிழ் மாலை நிகழ்ச்சிகளைத் தொடங்கியது. அப்போது பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து ஒளிபரப்பு செய்தார்கள். இந்தக் காலகட்டத்தில் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிக்கான வரவேற்பு குறைந்து வண்ணத் தொலைக்காட்சிகள் வரவேற்பறைகளை அழகாக்கத் தொடங்கின. தொடக்கக் காலத்தில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி வைத்திருந்தவர்கள், வண்ணத் தொலைக்காட்சிக்கு மாறினார்கள். முதன்முறையாக தொலைக்காட்சி வாங்கியவர்கள் கறுப்பு வெள்ளையிலிருந்து தொடங்கினார்கள். முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகளில் இருந்த தொலைக் காட்சிகள் சற்று பரவலாகத் தொடங்கின.

சன் டி.வி.யைத் தொடர்ந்து பல செயற்கைக் கோள் அலைவரிசைகள் வரத் தொடங்கின. தொடக்கத் தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் ஒளிப்பரப்புச் செய்த அலைவரிசைகள், பின்னர் 24 மணி நேர சேவைக்கு மாறின. அதனால், தொலைக் காட்சியைத் திறந்தாலே படங்கள், பாடல்கள், நெடுந்தொடர்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்பு என அலைவரிசைகள் பார்வையாளர்களைத் திணறடித்தன. இது, அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்கிற பழமொழிக்கு ஏற்ப பார்வையாளர்களை மாற்றவும் செய்தது. 24 மணி நேரமும் படங்கள், பாடல்கள், நிகழ்ச்சிகள் என்றாலே அலுக்கத்தானே செய்யும்.

புத்தாயிரத்துக்குப் பிறகு திரைப்படங்களுக்கு மக்கள் கொடுத்த முன்னுரிமை மாறிவிட்டது. அந்த இடத்தை நெடுந்தொடர்கள் எடுத்துக்கொண்டு விட்டன. இதன் விளைவால் இன்று பெரும்பாலான அலைவரிசைகள் தொலைக்காட்சிகளில் நெடுந் தொடர்களை ஒளிபரப்பி நெளிய வைக்கின்றன.

தட்டையானது குண்டு டிவி: புத்தாயிரத்தின் தொடக்கத்தில் பொழுது போக்கு அலைவரிசைகளைப் போலவே செய்தி அலைவரிசைகளும் வரத் தொடங்கின. உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள ஒரு காலத்தில் இரவு எட்டு மணி செய்தியைக் காண ஒரு கூட்டமே இருந்தது. ஆனால், 24 மணி நேரச் செய்திகள் வந்த பிறகு செய்தியை அறிந்துகொள்வதற்கு மக்களிடமிருந்த ஆர்வம் குறைந்துபோனது. அந்த அளவுக்குத் தொலைக்காட்சி வழியான செய்தி அலைவரிசைகள், பிரேக்கிங் செய்திகளால் பரிதாபங்களாக்கிவிட்டதால், மக்களிடமிருந்து அவை சற்று விலகியே நிற்கின்றன.

இதற்கிடையே தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மாறியது போலவே தொலைக்காட்சிப் பெட்டியின் வடிவமும் மாறத் தொடங்கியது. தொலைக்காட்சி என்றாலே முன்புறம் தட்டையாகவும் பின்புறம் முக்கோணம் போன்ற வடிவில் நீட்டிக்கொண்டும் இடத்தை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு இருந்தன. ஆனால், இன்று எல்.இ.டி (LED) தொலைக்காட்சிகள் திரையும், பின்புறமும் தட்டையாக சுவரை ஒட்டியிருக்கும் அளவுக்குச சுருங்கிவிட்டன. பெரிய திரை அளவுக்கு டிஜிட்டல் தொலைக்காட்சித் திரைகளும் ஆச்சரியமூட்டுகின்றன. 4கே தொலைக்காட்சிகள் தியேட்டரில் காட்சிகளைப் பார்க்கும் பரவசத்தை அளிக்கின்றன. இந்த டிஜிட்டல் தொலைக்காட்சிகளின் வழியாக ஓ.டி.டி. தளங்களும் அறிமுகமாகி புதுப் படங்கள் தொடங்கி வெப் சிரீஸ் வரை வீட்டிலிருந்தபடியே மக்களைப் பார்க்கவைக்கின்றன.

கையடக்கத் தொலைக்காட்சி: இந்த இணைய யுகத்தில் திறன்பேசிகளின் வருகை தொலைக்காட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவருகின்றன. எல்லோர் கையிலும் திறன்பேசிகளும் இணைய டேட்டாவும் இருப்பதால், இருந்த இடத்திலேயே தொலைக்காட்சிக்கான சேவைகளைத் திறன்பேசிகள் வழங்கிவிடுகின்றன. இதனால், இந்தக் காலத்தில் தொலைக்காட்சியைப் பார்த்துதான் எதையும் தெரிந்துகொள்ள வேண்டும், அறிந்துகொள்ள வேண்டும் என்கிற நிலைமை இல்லை. திறன்பேசியே ஒரு கையடக்கத் தொலைக்காட்சி போலத்தான் எல்லோர் கைகளிலும் தவழ்ந்துகொண்டிருக்கிறது.

வளரும் தொழில்நுட்பங்கள், அணிவகுக்கும் அலைவரிசைகள் திகட்டவைத்தாலும் தொலைக்காட்சி மீதான பார்வை மட்டும் மாறாமலேயே இருக்கிறது. அதனால்தான், 2006இல் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் வீட்டுக்கு வீடு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்குவோம் என்ற கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதி முழக்கத்தை திமுக முன்னெடுத்து வெற்றிபெற்றது. இது தொலைக்காட்சிக்குக் கிடைத்த வெற்றியும்கூட. கடந்த 40 ஆண்டுகளில் தொலைக்காட்சியின் வடிவங்கள் தொடங்கி, அதில் பார்த்த நிகழ்ச்சிகள் வரை எல்லாமும் மாறிவிட்டன. என்றாலும் பெரும்பாலோரின் வீட்டு வரவேற்பறையில் தொலைக்காட்சி இருக்கவே செய்கிறது. ஏனெனில், தொலைக்காட்சி என்பது ஒரு கருவி மட்டுமல்ல, மனிதர்களின் பலதரப்பட்ட உணர்வுகளையும் வெளிப்படுத்த உதவும் மனித மனங்களின் சங்கமமும்கூட.

தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in