

தீபாவளி வருகிற தென்றால் ஒரு வாரம், பத்து நாள்களுக்கு முன்பே அம்மா பரபரப்பாகி விடுவார். முறுக்கு, அதிரசம் இவை இரண்டும்தான் எங்கள் பகுதியின் முதன்மை யான தீபாவளிப் பலகாரங்கள். ஓட்டவடையும் உண்டு. சென்னையில் அதைத் ‘தட்டை’ என்று அழைக்கிறார்கள். சிலர் ‘தட்டடை’ எனவும் சொல்கிறார்கள். ஐப்பசியில் அடிக்கடி மழை பெய்யும். அதனால், முறுக்குக்குப் பச்சரிசியை வெயிலில் காயவைத்து எடுப்பதற்கு அம்மா நாள் பார்ப்பார். பளீரென்று வெயில் அடிக்கும் என்பது உறுதியானால் பச்சரிசியை நன்றாகக் கழுவி வெயிலில் காயவைத்து எடுப்பார். உளுந்தைப் பொன்னிறமாக வறுத்து அரிசியோடு கலந்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொண்டு வருவார்.
அரிசி அரைப்பதற்கு முன் மிஷினில் கோதுமையோ கேழ்வரகோ அரைத்திருக்கவில்லை என்பதைக் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே அரிசியை அரைக்கத் தருவார். முறுக்கு மாவில் கேழ்வரகு மாவு கலந்துவிட்டால் முறுக்கின் நிறம் மாறிவிடுமாம். நாங்கள் பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் வீடு முழுக்க முறுக்கு மாவின் மணம் நிறைந்திருக்கும். உடனே எனக்கு உற்சாகம் ஊற்றெடுத்துவிடும். அன்றைக்கு இரவு உணவு சீக்கிரம் முடிந்துவிடும். அதற்குப் பிறகுதான் பலகாரம் சுடும் படலம் களைகட்டத் தொடங்கும். அப்பாவுக்கு ஜெனரல் ஷிஃப்ட் இருக்கும் நாளாகப் பார்த்துத்தான் பலகாரம் சுடும் வேலையை அம்மா தொடங்குவார்.
பெண்ணுக்கு எள் நல்லதல்ல: பிறந்த பெண்ணுக்குத் தீபாவளி சீர் கொடுப்பது எங்கள் ஊர் வழக்கம். எங்களுக்கு இருப்பதோ கறிவேப்பிலைக் கொத்துபோல் ஒரே ஓர் அத்தை. அவருக்குத் தருவதற்கும் அம்மாவின் பிறந்த வீட்டுச் சொந்தங்கள்–சுற்றியிருக்கும் நண்பர்கள் வீடுகளுக்குத் தருவதற்குமாக அன்னக்கூடை அன்னக்கூடையாக முறுக்கு சுட வேண்டும். இரவு எட்டு எட்டரை வாக்கில் அமர்ந்தால் நள்ளிரவு தாண்டியும் எண்ணெய் முன் அமர்ந்திருக்க வேண்டியதுதான். ஆளுக்கு ஒரு வேலையாகப் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். வீட்டுக்கு வெளியே விறகடுப்பைப் பற்றவைத்து, பெரிய வாணலியில் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயை ஊற்றுவார் அப்பா. அதற்குள் அம்மா, முறுக்குக்கு மாவைப் பிசையத் தொடங்குவார்.
வெண்ணெய்க்குப் பதிலாக வனஸ்பதி அல்லது எண்ணெயைக் காய்ச்சி மாவில் ஊற்றிப் பெருங்காயம், உப்பு சேர்த்துப் பிசைவார். அவ்வப்போது தண்ணீரைத் தெளித்துப் பிசைவார். பிறந்த பெண்ணுக்குச் சீர் தரும்போது எள் சேர்க்கக் கூடாது என்பதால் அத்தைக்குச் செய்கிற முறுக்கில் மட்டும் ஓமம் சேர்ப்பார். எங்களுக்குத் தனியாக எள் போட்டுப் பிசைந்து வைப்பார். மாவைப் பிசைந்ததுமே முறுக்கு சாப்பிட எச்சில் ஊறும். எண்ணெய் காய்ந்ததும் அம்மா முறுக்கைப் பிழிந்து எண்ணெயில் போட, அதைப் பதமாகத் திருப்பி வேகவிட்டு எடுப்பார் அப்பா. உளுந்து சேர்த்திருப்பதால் வெள்ளையும் இளமஞ்சள் நிறத்திலுமாக மேலெழும்பி வரும் முறுக்குகளை ஆவலோடு பார்ப்பேன்.
ஆறப் பொறுக்க வேண்டும்: முதல் முறுக்கை எடுத்து அடுப்பின் பக்கத்தில் வைத்துவிட்டு மற்றவற்றைப் பெரிய தட்டில் அப்பா வைப்பார். சூடு ஆறுவதற்குள் சாப்பிடத்தான் ஆசை. ஆனால், அவர்களாகத் தரும்வரைக்கும் காத்திருப்பதுதானே பண்பு. கேட்டாலும் தர மாட்டார்கள் என்பது வேறு விஷயம். மீறிக் கேட்டாலும், ‘ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கணும்’ என்று எதையாவது சொல்வார் அம்மா. கொஞ்சம் ஆறியதும் எங்களுக்கு எடுத்துத் தருவார்கள். ஐந்து, ஆறு என்று எண்ணிக்கை கூடும்போது சாப்பிடுவது அலுத்துவிடும்.
இது ஒருநாளோடு முடிந்துவிடாது. மறுநாள் ஓட்டவடை செய்ய வேண்டும். அதைத் தட்டுவதற்குள் விரலெல்லாம் வலிக்கும். மிகவும் மெல்லிசாகத் தட்டினால் எண்ணெயில் போட்டவுடன் கருகிவிடும். தடிமனாகத் தட்டினால் வேகாமல் ஜவ்வு போல இருக்கும். அதனால் சரியான அளவில் பதமாகத் தட்ட வேண்டும். காய்ந்த மிளகாய், பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்து அதை மாவில் சேர்த்து, ஊறவைத்த கடலைப் பருப்பையும் சேர்த்துப் பிசைவார் அம்மா. வேர்க்கடலையைச் சேர்த்தால் நாளாக நாளாக எண்ணெய் சிக்கு வாடை வரும் என்பதால் அதையும் மிளகையும் தவிர்த்து விடுவார். முறுக்குக்கு நிகராக ஓட்டவடையையும் செய்து அன்னக்கூடையில் நிரப்பி பருத்திப் புடவை அல்லது வேட்டியால் கட்டி மூடிவைப்பார்கள்.
அதிரச ஹீரோ: தீபாவளி நெருக்கத்தில்தான் அதிரசம் செய்வார்கள். அதிரசம் செய்கிற அன்று அப்பாதான் எங்கள் ஏரியா ஹீரோ. பதமாகப் பாகு காய்ச்சுவதில் அவருக்கு நிகரில்லை. வீடு வீடாக வந்து அப்பாவை அழைத்துச் செல்வார்கள். அப்பாவும் பாகு எடுத்து நான்கைந்து அதிரசத்தைத் தட்டிக் கொடுத்துவிட்டுத்தான் வருவார். அதில் அவருக்கொரு பெருமிதம். கொதிக்கும் நீரில் வெல்லத்தைக் கொட்டிக் கிளறியபடி இருப்பார் அப்பா. அவ்வப்போது சிறிது பாகை எடுத்துத் தண்ணீரில் போட்டுப் பதம் பார்ப்பார். ரொம்ப இளகாகவும் இல்லாமல் முறுகலாகவும் இல்லாமல் கம்பிப் பாகு பதம் வந்ததும் சட்டென்று அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கிவிடுவார்.
நுணுக்கி வைத்திருக்கும் ஏலக்காயை அதில் போட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அரிசி மாவை அதில் கொட்டுவார் அம்மா. களி கிண்டும் கோலால் வேகமாகக் கிளறக் கிளற மாவு திரண்டுவரும். மாவைக் கைபொறுக்கும் சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக அப்பா உருட்டிப் போட, அண்ணனும் தங்கையும் வட்டமாகத் தட்டுவார்கள். அதை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போட்டு அம்மா பொரித்தெடுப்பார். பொரித்த அதிரசத்தை அழுத்தி அதிகப்படியான எண்ணெயை வடித்தெடுப்பது என் வேலை. அதைப் பிழிவதற்கென்று ஒரு கருவி உண்டு. அதன் பெயர் தெரியாது. எங்கள் நகரில் அனைவரும் இதை எங்கள் வீட்டிலிருந்துதான் வாங்கிச் செல்வார்கள்.
இட்லியும் கறிக்குழம்பும்: எவ்வளவு பணமுடை என்றாலும் எங்கள் கிராமத்தில் தீபாவளியன்று காலையில் அனைவரது வீடுகளிலும் இட்லியும் கறிக்குழம்பும் மணக்கும். வடையும் உண்டு. நாங்கள் அருகில் இருந்த நகரத்துக்குக் குடிவந்த பிறகும் அந்த வழக்கம் மாறியதில்லை. வீட்டில் கோழி வளர்த்தபோது காலையில் வெடைச்சேவலை மட்டும் கோழிக் கூண்டிலேயே நிறுத்திக்கொண்டு மற்ற கோழி களை வெளியே விட்டுவிடுவோம். வீட்டில் கோழி இல்லையென்றால் கிராமத்திலிருந்து அப்பா வாங்கிவருவார். இட்லியே தெரியாத அளவுக்குக் கறிக்குழம்பை அம்மா ஊற்ற, குடும்ப மாகச் சாப்பிட்ட அந்தக் காலைகள் எல்லாமே நற்காலைகள்.
தூக்குகள் என்னும் உறவின் தூதர்கள்: நாங்கள் பட்டாசு வெடிக்கப் புறப்படும் முன் அக்கம் பக்கத்து வீடுகளுக்குப் பலகாரங்களைத் தந்துவிட்டு வரச் சொல்வார் அம்மா. அண்ணாச்சி ஆன்ட்டி, ஜோஸ் ஆன்ட்டி, ஜானி ஆன்ட்டி மூவரும் கிறித்துவர்கள் என்பதால், அவர்களுக்கு மட்டும் பலகாரங்களை அதிகமாகத் தருவார். பலகாரத்துடன் வடைகளையும் வைத்து அனுப்புவார் அம்மா. உணவுப் பொருள் களையும் பலகாரங்களையும் பிறருக்குக் கொடுப்பதில் அம்மா கணக்கே பார்க்க மாட்டார். “சாப்பிடுற பொருளுல எதுக்குக் கஞ்சத்தனம்? நெஞ்சுக்குக் கீழ போனா நரகலு” என்று உலக தத்துவத்தை அவர் சொன்ன தெல்லாம், வளர்ந்த பிறகுதான் எனக்கு ஓரளவு புரிந்தது.
மறுநாள் நோன்பு முடிந்த கையோடு அத்தை வீட்டுக்கு நானும் அண்ணனும் பலகாரத் தூக்கோடு கிளம்பிவிடுவோம். மூணு மணி பஸ்ஸுக்குத் தம்பி வீட்டில் இருந்து ஆள் வந்துவிடும் என்கிற அத்தையின் எதிர்பார்ப்பை எங்கள் அப்பா ஒருபோதும் பொய்யாக்கியதில்லை. அதேபோல் எங்கள் அம்மாவுக்கு அவருடைய அண்ணன் தீபாவளிப் பலகாரத்தை எடுத்துக்கொண்டு வருவார். அண்ணனைப் பார்த்ததும் அம்மாவின் முகத்தில் எங்கிருந்துதான் அப்படியொரு பெருமிதம் வருமோ! மஞ்சள் பூசிய அந்த முகம் பொலிவுகூடி மின்னும்.
“இந்தா, வளையல் வாங்கிப் போட்டுக் கம்மா...” என்று சொல்லி பத்தோ இருபதோ அம்மா கையில் மாமா கொடுப்பார். நாங்கள் அத்தை வீட்டுக்குச் செல்லும்போது பேருந்து முழுக்க தூக்குகளாக இருக்கும். ஒவ்வொரு தூக்கும் அவரவர் வீட்டுப் பிறந்த பெண்ணுக்கு எடுத்துச் செல்லப்படும் அன்பின் தூதர் போலவே தோன்றும் எனக்கு. பண்டிகைகள் என்பவை பலவிதமாக உண்பதற்கு மட்டுமல்ல, உறவுகளை வலுப்படுத்தவும்தான் என்பதை ஒவ்வொரு வருடத் தீபாவளிக்கும் உணர்த்த அம்மா தவறுவதில்லை.
- brindha.s@hindutamil.co.in